Jun 16, 2013

ஞாயிற்றுக்கிழமை!

இன்று ஞாயிறு. இது தெரியாதா? என்று கேட்காதீர்கள்!

நிறைய எழுதுவது என்றாகிவிட்டது. அதனால் வானத்திற்கு கீழ், ஏன் வானத்திற்கு மேல் இருப்பதை பற்றியும் எழுதி பார்த்துவிட வேண்டியதுதான். 

இன்று காலை எழுந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது மனதில் ஏற்பட்ட உணர்வுகளை உங்களுக்காக இங்கே எழுதுகிறேன்.

கல்லூரி படிக்கும் போது ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரே குதுகூலம்தான். அவ்வளவு சந்தோசமாக இருக்கும். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை இருந்தால் கூட ஞாயிற்றுக்கிழமைக்கு என்று ஒரு தனி விசேசம்தான். காலையில் 6 மணிக்கு எல்லாம் எங்கள் வீட்டின் முன் சைக்கிள் ஒலி கேட்கும். அவ்வளவு காலையிலேயே கிரிக்கெட் நெட் பயிற்சிக்கு கூப்பிட மணி வந்துவிடுவான். அவன்தான் எங்கள் அணியின் கேப்டன். இப்பொழுது சொந்தமாக ஒரு கம்பனி வைத்துள்ளான். அவனுக்கு கீழே 200 பேர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அவன் வந்து கூப்பிடும்போதுதான் எனக்கு எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும். அப்போழுதுதான் கிளம்பி இருப்பேன். ஆனால் அம்மா கொடுத்த காபி அப்பொழுதுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

"வயித்த கலக்குதுடா மணி?"

"போய்த்தொலை" என்பவன் நான் வரும் வரை இருந்து என்னை கூட்டி செல்வான். ஆனால் என் மேல் இத்தனை அக்கரை உள்ள அவன் என்றுமே ப்ராக்டிஸில் கூட முதல் ஓவரை எனக்கு கொடுத்ததில்லை. அந்த வருத்தம் இன்று வரை இருக்கிறது. பின் அப்படியே ஒவ்வொருவராக அழைத்துக்கொண்டு லால்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு செல்வோம். மிகவும் கடுமையாக வெயில் வரும் வரை பயிற்சி செய்வோம். பசி வயிற்றை கிள்ளும். பின் பள்ளிக்கு எதிரில் இருக்கும் கடையில் டீயும், சம்சா போன்ற எதையாவது சாப்பிடுவோம். அதிலே பாதி பசி போய்விடும். இப்படியாக வீட்டிற்கு செல்ல 9.30 மணி ஆகிவிடும். குளித்து முடித்து குறைந்தது ஒரு எட்டு இட்லியாவது சாப்பிடுவது வழக்கம். 10 மணி ஆகிவிட்டால் திரும்பவும் அழைப்பு வந்துவிடும். யாராவது கூப்பிட வந்துவிடுவார்கள்.

நான், மணி, நம்பி, பிஞ்சு (மணியின் அண்ணா), வைத்தி, ஸ்ரீதர், ஸ்ரீராம், கணேஷ் மற்றும் இன்னொரு நண்பன் சாமுண்டி அனைவரும் கணேஷ் வீட்டில் ஆஜராவோம். கணேஷ் 15 வருடங்கள் ஏர்போர்ஸில் இருந்துவிட்டு இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிறான். அவர்கள் வீட்டில் பெண் குழந்தைகள் கிடையாது. அதனால் அவன் வீட்டிலேயே எங்கள் அரட்டை கச்சேரி ஆரம்பமாகும். அப்பொழுது மகாபாரதம் டிவியில் வந்த சமயம். அதை பார்த்துவிட்டுதான் அரட்டை ஆரம்பமாகும். முதலில் அரட்டை  அன்று விளையாடிய கிரிக்கெட்டை பற்றித்தான் இருக்கும். யார் நன்றாக விளையாடினார்கள், யார் சொதப்பினார்கள் என்று ஒரு ஆராய்ச்சி நடக்கும். நன்றாக விளையாடாதவர்களை மணி காய்ச்சு காய்ச்சு என்று காச்சுவான்.

பின் அனைவரும் பாய் டீ கடைக்கோ அல்லது ரவி டீ கடைக்கோ செல்வோம். இப்பொழுது ரவி டீ கடை இல்லை. ஆனால் இன்னும் பாய் டீ கடை உள்ளது. ஒரு டீயை சாப்பிட்டுவிட்டு ஒரு பாக்கு போட்டுவிட்டு மீண்டும் அரட்டை கச்சேரி நடக்கும். 12 மணி போல் நைசாக எஸ்கேப் ஆகி வீட்டில் சென்று சூப் சாப்பிட்டுவிட்டு வருவேன். பின் மீண்டும் கச்சேரி. ஒரு மணிக்கு சாப்பிட செல்வோம். வாரம் முழுக்க டிபன் பாக்ஸில் மட்டும் சாப்பிடுவதால், ஞாயிறு புல் கட்டுகட்டுவேன். தயிர் சாதம் சாப்பிடும்போதே தூக்கம் சொக்கும். ரெண்டு மணிக்கு படுத்தால் 5.30 வரை தூக்கம். பின் மீண்டும் கணேஷ் வீடு. எல்லோர் வீட்டிலும் டிவி இருந்தாலும் அவன் வீட்டில்தான் அனைவரும் பார்ப்போம். இப்பொழுது போல இத்தனை சேனல்கள் அப்போது இல்லை. தூர்தர்ஷனில் என்ன படம் வருதோ அதான். நல்ல படமாக இருந்தால் முழுவதும் பார்ப்போம். இல்லையென்றால் வெளியே உட்கார்ந்து அரட்டைதான். என்ன பேசினோம்? தெரியவில்லை. ஆனால் பேசிக்கொண்டே இருப்போம். பின் சில நேரங்களில், நம்பி, "சிறுதையூர் போய் சாப்பிட்டு வரலாமா?" என்பான்.

நம்பி அப்படி கேட்டால் ஹோட்டலில் புரோட்டா சாப்பிட கூப்பிடுகிறான் என்று அர்த்தம். காசை பற்றிய கவலையே இல்லை. யாராவது கொடுப்போம். பின் வீட்டிற்கு சென்று வீட்டிலும் முடிந்தவரை சாப்பிட்டு, அதன் பின் வாக்கிங் செல்வோம். 10.30வரை பேசிக்கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வருவோம். வந்தவுடன் அந்தவார ஆனந்தவிகடன் அல்லது குமுதம் படிக்காமல் தூங்குவது இல்லை. படுக்க போகும் அந்த நொடியில்தான் பரிட்சையை பற்றிய பயமும், அடுத்த நாள் காலேஜ் செல்ல வேண்டிய பயமும் வரும்.

ஆனால் அன்று முழுவதும் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அதை எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாங்க முடியாது. 

இன்று காலை இதை எல்லாம் நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தேன். தேங்காய் சட்னி சாப்பிட ஆசை. சட்டினி ரெடியானவுடன், சாப்பிட்டு பார்த்தால் கொழ கொழ என்று இருந்தது. வீட்டிற்கு அந்த நேரத்தில் போன் செய்தேன். சொன்னேன்.

"எப்படி செஞ்சீங்க"

"தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், கொஞ்சம் இஞ்சி மற்றும் உப்பு போட்டு மிக்ஸியில அரைச்சேன்"

"அப்புறம்?"

"கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சேன். பின் கொஞ்சம் பெருங்காயப்பொடி போட்டேன்"

"அப்புறம் என்ன பண்ணீங்க?"

"அரைச்சதை எடுத்து தாளிச்ச இருப்புசட்டியில கொட்டி கிளறினேன்"

"இப்படி பண்ணினா குழ குழனு இல்லாம எப்படி இருக்கும்"

"ஏன்?"

"தாளிச்சத எடுத்து அரைச்சதுல கொட்டி கிளறணும். அரைச்ச எடுத்து சூடா இருக்க இருப்புச்சட்டியில போட்டு கிளறக்கூடாது"

"ங்"

இப்படி ஆரம்பித்த இன்றைய ஞாயிறு எப்படி போக போகிறது. இதோ இதை எழுதி முடித்தவுடன் ஆபிஸ் வேலை பார்க்க வேண்டும். ஆறு மணிக்கு மேல் ஜிம் சென்று வொர்க் அவுட் செய்துவிட்டு வந்தால், வீடே வெறிச்சோடி கிடக்கும். ஜாலியாக சினிமா சேர்ந்து பார்க்க என் நண்பர்களோ அல்லது என் குழந்தைகளோ அருகில் இல்லை. எத்தனை சம்பாரிச்சாலும் இழந்த அந்த ஞாயிறை திரும்ப பெற முடியுமா?

கோபிநாத்தை பார்த்து விட்டு தூங்க வேண்டியதுதான். வேறு என்ன செய்வது?


7 comments:

Anonymous said...

அருமை. அப்படியே எனது நினைவலைகளை மறு ஒளிபரப்பு செய்தது போல் உள்ளது. எனது பள்ளி காலங்களும் இவ்வாறே கழிந்தன. கிரிக்கெட், சைக்கிள், பரோட்டா என குதூகலத்துக்கு பஞ்சமே இல்லை. அவற்றை நினைவூட்டிச் சென்றன உங்கள் பதிவு, நன்றிகள்.

Anonymous said...

அருமை. அப்படியே எனது நினைவலைகளை மறு ஒளிபரப்பு செய்தது போல் உள்ளது. எனது பள்ளி காலங்களும் இவ்வாறே கழிந்தன. கிரிக்கெட், சைக்கிள், பரோட்டா என குதூகலத்துக்கு பஞ்சமே இல்லை. அவற்றை நினைவூட்டிச் சென்றன உங்கள் பதிவு, நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ ஒன்று கற்றுக் கொண்டாச்சி... வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

ஞாயிற்றுகிழமை நினைவலைகள் அருமை! அவரவர் குடும்பம் வேலை, பொறுப்புக்கள் வருகையில் இவற்றை இழக்க வேண்டியுள்ளது! என்ன செய்ய? நன்றி!

iniyavan said...

//Niranjan Thampi said...
அருமை. அப்படியே எனது நினைவலைகளை மறு ஒளிபரப்பு செய்தது போல் உள்ளது. எனது பள்ளி காலங்களும் இவ்வாறே கழிந்தன. கிரிக்கெட், சைக்கிள், பரோட்டா என குதூகலத்துக்கு பஞ்சமே இல்லை. அவற்றை நினைவூட்டிச் சென்றன உங்கள் பதிவு, நன்றிகள்.//

வருகைக்கு நன்றி நிரஞ்சன் தம்பி.

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
எப்படியோ ஒன்று கற்றுக் கொண்டாச்சி... வாழ்த்துக்கள்..//

தொடர் வருகைக்கு நன்றி தனபாலன்.

iniyavan said...

//s suresh said...
ஞாயிற்றுகிழமை நினைவலைகள் அருமை! அவரவர் குடும்பம் வேலை, பொறுப்புக்கள் வருகையில் இவற்றை இழக்க வேண்டியுள்ளது! என்ன செய்ய? நன்றி!//

வருகைக்கு நன்றி சுரேஷ்.