Jun 18, 2013

பேனா!!!

பேனாவை 'பிடிக்காதவர்கள்' (இந்த வார்த்தைய இரண்டு அர்த்தங்களிலும் எடுத்துக்கொள்ளலாம்) இருக்க முடியாது. பேனாவை தொடாமல் ஒருவர் வாழ்ந்து மரித்துவிட முடியாது. என் முதல் பேனாவை அப்பாத்தான் வாங்கி கொடுத்தார். அப்பொழுது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த நாளின் சந்தோசத்தை வார்த்தைகளின் வர்ணிப்பது கஷ்டம். அந்த பேனாவை கையில் வைத்துக்கொண்டே நாள் முழுவதும் சுற்றினேன்.. இரவு முழுவதும் பேனாவை வைத்துக்கொண்டுதான் தூங்கினேன். அடுத்த நாள் காலையில் அம்மா கூப்பிட்ட போது வேகமாக ஓடி வர, கால் தவறி வழுக்கி விழுந்துவிட்டேன். அதனால் அந்த பேனா கீழே விழுந்து மூடி உடைந்துவிட்டது. அப்பாவிடம் சொன்னால் திட்டுவார் என்று சொல்லவில்லை. ஆனால் அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டது. அன்று பார்த்து அப்பா என் பேனாவை எடுத்து வரச்சொல்ல, நான் பயந்து போய் கொடுக்க, நல்ல வேளை அப்பா திட்டவில்லை. ஆனால், "ஏன் உடைஞ்சது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்பொழுது என் தங்கை குழந்தை. அவள்தான் உடைத்துவிட்டாள் என்று பொய் சொன்னேன். அந்த தங்கை இப்போது உயிருடன் இல்லை.

அதன் பிறகு நிறைய பேனாக்கள் உபயோகப் படுத்தி இருக்கிறேன். ஆனால் பள்ளி படிப்பு முடியும் வரை வைத்திருந்தது என்னவோ இங்க் பேனாதான். பரிட்சைக்கு செல்லும் முன் பேனாவிற்கு இங்க் போடும் சம்பவம் எங்கள் வீட்டில் மிகப் பெரிய திருவிழா போல நடக்கும். ஏனென்றால், வீட்டில் ஏழு பேர் அல்லவா? அப்போழுது எல்லாம் என் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். பின் கல்லூரியில் சேர்ந்த பிறகு நண்பர்கள் போல நானும் ஸ்டைலாக பால்பாயிண்ட் பேனா உபயோகிக்க ஆரம்பித்தேன். அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று இன்று நினைக்கிறேன். ஆனால் பால் பாயிண்ட் பேனாவை பற்றி ஒரு குறையும் சொல்வதிற்கில்லை. ஏனென்றால் நான் என்னுடைய Pressional Course பரிட்சை எல்லாமே பால்பாயிண்ட் பேனாவில்தான் எழுதினேன். அதுவும் ரெனால்ட். அந்த பேனாதான் என்னை மிக மிக வேகமாக பரிட்சைகள் எழுத வைத்தது. ரெனால்ட் பேனாவால் தியரி பேப்பர்கள் எல்லாம் மூன்று மணி நேரத்தில் நிறைய எழுத முடியும். மூன்று மணி நேரத்தில் 61 பக்கங்கள் எல்லாம் எழுதி இருக்கிறேன். அதனால் ரெனால்ட் பேனா மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்து கொண்டே இருந்தது.

நான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு கூட ரெனால்ட் பேனா மேல் உள்ள என் காதல் தீரவில்லை. அந்த காதலினால், அந்த கம்பனிக்கு (GM Pens India Ltd) வேலைக்கு அப்ளை செய்ய அவர்களும் கூப்பிட நேர்காணலுக்கு சென்றேன். அங்கே சென்றால் ஒரே அதிர்ச்சி. காரணம் எந்த பெர்சனல் ஆபிசர் என்னை எங்கள் நிறுவனத்திற்கு முதல் நேர்காணல் செய்தாரோ அவர் அந்த கம்பனியில் வேலைக்கு சேர்ந்து என்னை நேர்காணல் செய்யும் குழுவில் அமர்ந்திருந்தார். அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. 

"ஏம்பா, அங்கேயே அதிக வருஷங்கள் வேலை செய்வேன் என்று சொல்லிவிட்டுத்தானே வேலையில் சேர்ந்த? பின் ஏன் இங்கே இப்போது வேலைக்கு வரணும்னு நினைக்கிற?'

"நீங்க மட்டும்?"

"நான் ஏற்கனவே பல வருடங்கள் அங்கே வேலை செய்துவிட்டேன். அதுவும் இல்லாமல் நீ மூன்று வருட பாண்ட் கொடுத்து இருப்பதை மறந்துவிட்டாயா?"

அதன் பிறகு நான் எந்த கம்பனிக்கும் வேலைக்கு அப்ளை செய்ததில்லை. இதோ 21 வருடங்கள் ஓடிவிட்டது. 

கம்பனி ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம். எங்கள் கம்பனியின் ஆடிட்டர் ஒரு பேனாவை வைத்து எழுதிக்கொண்டிருந்தார். பேசும் போது கூட அந்த பேனாவை இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து ஒரு மாதிரி அழகாக ஆட்டுவார். இன்றும் அவர் எங்கள் நிறுவனத்தின் ஆடிட்டர்தான். அவரது எழுத்துகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அவரால் மட்டும் எப்படி இவ்வளவு அருமையாக எழுத முடிகிறது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு வேளை அந்த பேனாதான் காரணமோ? என்று நினைத்துருக்கிறேன். அவர் வைத்திருக்கும் பேனா மிக அழகாக இருக்கும். என்ன பேனா என்று கூட அப்பொழுது எனக்கு தெரியாது. ஆடிட்டிங் முடியும் தருவாயில் அவரிடம் கேட்டேன்.

"இது பார்க்கர் பேனா. வேண்டுமா?" என்றவர் என் பதிலுக்கு காத்திராமல் அந்த பேனாவையே எனக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் வாங்கிய பிறகுதான் தெரிந்தது, அதன் ரீபில் மிகவும் காஸ்லியானது என்று. ஆனாலும் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம், அதே பேனாவில் அவருக்கு அழகாக வரும் எழுத்துக்கள் எனக்கு மட்டும் மிக கேவலமாக வந்தது. இருந்தாலும் இன்று வரை பார்க்கர் பேனாக்கள்தான் பயன்படுத்துகிறேன். பல நிறங்களில் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எல்லாம் எழுதுவதில்லை. நான் பேப்பர்களில் எழுதி 17 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுதான் எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர் வந்துவிட்டதே? எல்லாவற்றையும் அதில்தானே எழுதுகிறோம்?

பின் எதற்கு பேனா என்றால், கையெழுத்து போடுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறேன். ஒரு நாளைக்கு அத்தனை கையெழுத்துகள் போட வேண்டி உள்ளது. இவ்வளவு கையெழுத்து போட வேண்டிய நிலை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால், பெயரை சுருக்கி இருந்திருக்கலாம். இப்போது முழு பெயரையும் எழுதி எழுதி...கொடுமை..

சமீபத்தில் பேப்பரில் எழுதி பார்க்க நினைத்து, ஒரு நாள் எழுத ஆரம்பித்தேன். படித்து பார்த்த என் பெண் சொன்னாள்:

"டாடி தயவு செய்து இனி பேப்பர்ல எல்லாம் எழுதாதீங்க. கம்ப்யூட்டர்லயே எழுதுங்க"

"ஏம்பா"

"டாக்டர் கொடுக்குற ப்ரிஸ்கிப்ஷன் மாதிரி இருக்கு. ஒண்ணும் புரியலை"

இருந்தாலும் எனக்கு பேனாவில் எழுதுவது பிடித்தே இருக்கிறது.

ஐ லவ் மை பார்க்கர் பேனா!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

Hero பேனா தான் எப்போதும்...

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
ரசித்தேன்...

Hero பேனா தான் எப்போதும்//

தொடர் வருகைக்கு நன்றி நண்பா.