Jun 22, 2013

வாஸ்து!

ஆரம்பகாலத்தில் அப்பா தந்தை பெரியாருடன் இருந்ததால் நானும் பகுத்தறிவு சார்ந்த விசயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அம்மாவால் கடவுள் மேல் உள்ள ஈடுபாடு, நம்பிக்கை அதிகமானது. ஆனால் அதன்பிறகு அப்பா தீவிர பக்திமானாகியது வேறு கதை. அப்பாவின் இளமைக்காலங்கள் முழுவதும் திராவிடர் கழகத்தின் போராட்டங்களில்தான் கழிந்திருக்கின்றன. எங்கள் ஊரில் அனைத்து போராட்டங்களுக்கும் அப்பாதான் மாஸ்டர் மைண்ட் ஆக இருந்துள்ளார். நான் சொல்வது 1960களில்.

நான் இந்த விசயத்தை ஏற்கனவே எங்காவது எழுதி இருக்கிறேனா தெரியவில்லை. அப்பாவின் பிற்கால கொள்கைகளால் எங்களின் வாழ்க்கை முறையும் கொஞ்சம் மாறிப்போயிருந்தது. என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சில விசயங்களில் என்னால் உடன் பட முடியவில்லை. அப்பா அதிகம் செண்டிமெண்ட் பார்ப்பார். வீட்டை விட்டு கிளம்பும்போது அம்மா வெளியில் வந்து சகுனம் பார்த்து சொல்ல வேண்டும். பின் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டுத்தான் செல்வார். இப்பொழுது அப்படி குடித்தால், வீட்டை விட்டு கிளம்பும்போது தண்ணி வாங்கி குடிக்க கூடாது என்கிறார்கள். எது உண்மை என்றே தெரியவில்லை. 

எனக்கு இந்த செண்டிமெண்டில் எல்லாம் அதிகம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. அது போல்தான் இந்த வாஸ்து என்ற ஒன்று. 2003 வரை 'வாஸ்து' என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அவ்வளவுதான் என் பொது அறிவு. என் படிப்பிற்காக கிராமத்தை விட்டு லால்குடிக்கு வந்ததும் வாடகை வீட்டில்தான் குடி இருந்தோம். கிட்டத்தட்ட 1997வரை. அத்தை வீடு கட்டியவுடன் அவர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். அந்த வீடு ஒரு இன்ஜியரின் மூலம் கட்டப்படவில்லை. யாரோ தெரிந்தவர் மூலம் கட்டினார்கள். அவருக்கு சிவில் இன்ஜியினிரிங் மூளை இல்லை என்பதை பின்னாளில்தான் கண்டு பிடித்தேன். வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லைதான். சின்ன வீடுதான். இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருந்தோம். என் கல்யாணம் அந்த வீட்டில்தான் நடந்தது. அதனால் அந்த வீட்டின் மேல் எனக்கு ஒரு விருப்பம் எப்பொழுதுமே இருக்கும்.

2001ஆம் ஆண்டு அப்பா காலமானதை அடுத்து குடும்பமே கொஞ்சம் ஆட்டம் கண்டது. நானோ மலேசியாவில். அப்பா இறந்து சரியாக ஒரு வருடத்தில் அதே வீட்டில் 2002ல் எங்கள் சித்தி காலமானார். வந்தது வினை. வீட்டில் உள்ளவர்கள் கவலைப்பட  ஆரம்பித்தார்கள். வந்து போனவர்களும், வீடு சரியில்லை. ராசி இல்லை அதான் இரண்டு வருடங்களில் இரண்டு சாவு என்று பீதியை கிளப்பி விட்டு சென்றனர், அப்பொழுது என்னிடம் சொந்த வீடு இல்லை. வீடு கட்ட இடம் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் ஆலோசனை காரணமாக வேறு வாடகை வீட்டிற்கு குடும்பமே குடி பெயர்ந்தது. அந்த நேரத்தில் நான் நிலம் வாங்கி விட்டேன். நான் கட்டி முடிக்கும் அந்த வருடம் முழுவதும் குடும்பமே வாடகை வீட்டில்தான் இருந்தது.

இனிதான் கதையே. இப்பொழுது அத்தை வீட்டை என்ன செய்வது? யாரையாவது வாடகைக்கு அமர்த்த வேண்டும். தீவிரமாக தேடினோம். யாருக்கும் குடிவர ஆர்வமில்லை. பயம். மிகப் பெரிய தேடுதலுக்கு பிறகு ஒரு குடும்பம் குடி வந்தது. வந்த மூன்றே மாதத்தில்  அந்த குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார். அந்த வீட்டை பற்றிய வதந்திகள் அதிகம் உலாவ ஆரம்பித்தன. பின் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு குடும்பம். மீண்டும் ஒரு மரணம். எங்களுக்கு ஒரே பயமாகிவிட்டது. பின் நீண்ட தேடலுக்கு பிறகு வேறு ஒரு குடும்பம் வந்தது. நன்றாகத்தான் இருந்தார்கள். கணவன் மனைவிக்குள் ஏதோ சாதாரண சண்டை. ஒரு நாள் இரவு. வீட்டில் அனைவரும் இருக்கும் போதே அந்த கணவன் அனைவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே, "நான் சாகப்போகிறேன்" என்று சொல்லி அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே விஷம் அருந்தி காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.

விசயம் தீவிரமானது. அத்தை வீட்டைப் பற்றி சொல்லி வருத்தப்படவே, ஏதாவது செய்ய முடிவெடுத்தேன். ஆனால் நிறைய பேர் அதற்கு முன்னே வீட்டைப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். பின் நான் விடுமுறைக்கு சென்ற சமயத்தில் நானும் என் இன்ஜினியரும் சென்று பார்த்தோம். நண்பருக்கு வாஸ்துவை பற்றிய அறிவு உண்டு. அவரும் நிறைய மாற்றங்கள் செய்ய சொன்னார். மீண்டும் பல லட்சங்கள் செலவில் வீட்டையே மாற்றி அமைத்தோம். வாஸ்து ஒரு 80% சரி செய்துவிட்டோம். கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறித்தார்கள். அவர்கள் சொன்ன நாளில் என்னால் போக முடியவில்லை. கிரஹபிரவேச நாள் வந்தது. எல்லா பொருட்களும் வாங்கி வைத்துவிட்டார்கள். அதிகாலை ஹோமம் ஆரம்பிக்கும் சமயத்தில் பக்கத்து வீட்டில் ஒரே அழுகை சத்தம். என்னவென்று பார்த்தால் பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டார். வீட்டில் அனைவரும் அப்சட். வாங்கிய பொருள்களிலிருந்து சாப்பாடுவரை அனைத்தும் வேஸ்ட். வாங்கிய பூக்களை மட்டும் கோயிலில் சேர்த்துவிட்டோம்.

நான் அத்தையிடம் வருத்தபடவேண்டாம் என்று சொல்லி இன்னொரு நாளில் கிரஹப்பிரவேசத்தை வைக்க சொன்னேன். இன்னொரு நாளில் மிகவும் சிமிபிளாக நடத்தினார்கள். நல்லபடியாக நடந்து முடிந்தது. இதோ எட்டு வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இரண்டு குடும்பங்கள் இரண்டு வீட்டிலும் வசிக்கின்றன. மூன்றாவது மாடியிலும் வாடகைக்கு இருந்தார்கள். இப்போது இல்லை. அது அத்தை பையனுக்காக விட்டு வைத்திருக்கிறோம். அந்த வீட்டில் குடி வந்த பிறகு அங்கே இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு கல்யாணம் நடந்திருக்கிறது. ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. சந்தோசமாக இருக்கிறார்கள்.

இதில் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் அப்பா அங்கே இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. பின் இத்தனை மரணங்கள் ஏன்? ஒரே குழப்பமாக இருக்கிறது.

இப்பொழுது எல்லாம் நான் வாஸ்து விசயத்தில் எந்த ரிஸ்கும் எடுப்பதில்லை. நான் கட்டிய அனைத்து வீடுகளிலும் அட்லீஸ்ட் 80% வாஸ்துவை சரிசெய்துதான் கட்டி இருக்கிறேன். என்ன செய்தாலும் வாஸ்து பார்க்காமல் செய்வதில்லை.

வாஸ்துவில் ஏதோ அறிவுப்பூர்வமான நமக்கு விளங்காத ஒரு உண்மை இருக்கிறது.4 comments:

Anonymous said...

முட்டாள் தனமான பயங்களே மனிதனை மூட நம்பிக்கைக்குள் ஆழ்த்தி விடுகின்றன, சமயத்தில் சிந்திப்பவர்கள் கூட ஆதாரமற்ற பயங்களால் மூளையை கழட்டி வைத்து விட வேண்டிய நிர்ப்பத்தங்கள், மரணங்கள் பல அச்சங்களால் எழுபவை அச்சங்களை இல்லாமல் செய்தாலே துன்பங்கள் தவிர்க்கப்படலாம். இந்தியர்களுக்கு முதல் தேவை அச்சங்களை விரட்டி தைரியம் ஏற்படுத்தும் பகுத்தறிவே ..

இராஜராஜேஸ்வரி said...

வாஸ்துவில் ஏதோ அறிவுப்பூர்வமான நமக்கு விளங்காத ஒரு உண்மை இருக்கிறது.

முன்னோர்கள் கண்டுணர்ந்த அனுபவ அறிவு அனைத்தும் அர்த்தமுள்ளவையே..!!

ரிஷபன் said...

வீட்டை விட்டு கிளம்பும்போது அம்மா வெளியில் வந்து சகுனம் பார்த்து சொல்ல வேண்டும். பின் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டுத்தான் செல்வார். இப்பொழுது அப்படி குடித்தால், வீட்டை விட்டு கிளம்பும்போது தண்ணி வாங்கி குடிக்க கூடாது என்கிறார்கள். எது உண்மை என்றே தெரியவில்லை.

என்னதான் அறிவுபூர்வமாகப் பேசினாலும் மனிதன் உணர்வுக்கு அடிமை. கிளம்பும்போது சகுனம் பார்த்து அது உடன்பாடாய் இல்லாவிட்டால் உறுத்தலில் போகிற வேலையில் மனம் லயிக்காது. சொதப்புவோம். அதனால் தண்ணீர் குடிக்க சொன்னார்கள். இப்போதும் பதற்றமாய் இருப்பவர்களிடம் தண்ணீர் குடிக்கச்சொல்கிறோமே. அதுவே இப்போது ஏன் வேண்டாம் என்று சொல்வது.. பயணத்தின்போது உடல் உபாதை வேண்டாம்.. என்பதால்..

ரிஷபன் said...

எனக்குத் தெரிந்து பகுத்தறிவு பேசுகிற பலர் ஏதோ ஒரு கட்டத்தில் இறையருளைத் தேடத் தொடங்கி இருக்கிறார்கள். ஆன்மீகம் என்பது மனித நேயம் என்பதுதான் நம் முன்னோர் சொன்னது.. அதை ஒரு கால கட்டத்தில் தொலைத்து சடங்குகளில் ஆழ்ந்து விட்டோம். எல்லா சடங்குகளிலும் உள்ளீடாய் மனித நேயம் மறைந்திருப்பதை அறிந்தால் நம் வாழ்வும் வளம் பெறும்.