Jun 23, 2013

ஒண்ணுமில்லை!

நண்பர்கள் கேட்டுக்கொண்டதால்தான் தினமும் எழுத ஆரம்பித்தேன். அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது இப்பொழுது அனுபவத்தில் உணர்கிறேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு எழுதுவது கஷ்டமாக இருக்கிறது. அதிலும் நல்ல விசயங்களாக இருக்க வேண்டும். படிப்பவர்களுக்கு போர் அடிக்க கூடாது. நேற்று அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் எழுதினேன். ஆமாம் இதனால் யாருக்கு என்ன பயன்? தெரியவில்லை. ஒரு சந்தோசம்  அவ்வளவுதான். சரி விசயத்திற்கு வருகிறேன்.

நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல நான் காலையில் வாக்கிங் செல்லும் போதுதான் அன்று என்ன எழுதுவது என்று யோசிப்பேன். 45 நிமிடங்கள் வாக்கிங் முடிவதற்குள் ஏதேனும் விசயம் கிடைத்துவிடும். இன்று வாக்கிங் ஆரம்பித்ததும், இன்று என்ன எழுதுவதென்று யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு தொடர்கதை ஆரம்பிக்கலாமா? என்று நினைத்தேன். உடனே ஒரு சில விசயங்கள் தோன்றின. ஏற்கனவே ஒரு நண்பர் "ஓடாதே நில்" படித்துவிட்டு அந்த கதை ஒரு "B" கிரேட் படம் போல உள்ளது என்று கமெண்ட் அடித்தார். 'பஞ்சு' போன்ற நண்பர்கள் உண்மையில் உண்டா? என்றார். இருக்கிறார்கள், ஆனால் அது ஒருவரல்ல. பலர். அந்த கதையே உண்மையின் அடிப்படையில் எழுதியதுதான். நானும் நண்பர்களும் கோலாலம்பூரில் அந்த கிளப் வழியாக சென்ற போது அங்கே அழைத்து சென்ற டாக்ஸி டிரைவர், யாருக்கோ நடந்த அந்த கதையை சொல்லி, 'ஜாக்கிரதை பார்த்து நடந்து கொள்ளுங்கள்' என்றார். நான் அதையே கொஞ்சம் மசாலா தடவி ஒரு கதை போல் ஆக்கினேன். அவ்வளவுதான். நான் சாதாரணமாக எழுதினால் நண்பர்கள் நிறைய பேர் உங்கள் எழுத்துக்களில் 'நல்லவன்' என்ற விசயம் எப்பொழுதுமே இருக்கிறது. நீங்கள் கெட்ட விசயங்கள் எழுதவே முடியாது என்கின்றனர். அதற்காகத்தான் 'நான் கெட்டவன்' என்ற தொடர் எழுத வேண்டியதாகிவிட்டது. அப்படியும் நண்பர்களுக்கு திருப்தி இல்லை. இப்படி எழுதினால், என்ன இது? பழைய உலக்ஸ் எங்கே? என்று கேட்கிறார்கள். அதனால் தற்போது இன்னொரு தொடர்கதை எழுதும் முடிவை தள்ளி போட்டு விட்டேன்.

நான்கு அல்லது ஐந்து சிறுகதைகள் கைவசம் உள்ளன. ஆனால் ஒரு பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன். இன்னும் அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து எந்த  பதிலும் வராததால் அந்த கதைகளை இங்கே பிரசுரிக்க விரும்பவில்லை.

ஒரு இளவயது பெண் என் நட்பு வட்டாரத்தில் இருக்கிறார். அவருக்கு நான் ஏற்கனவே திருமணமானவன் என்றும் இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியும். அப்படியும் அவர் என்னுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறார். அவருக்கு ஒரு அறிவுரை போல ஏதாவது எழுதலாமா? என்று நினைத்தேன். பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

கோலாலம்பூரில் நடந்த ஒரு மோசமான பயங்கரமான அனுபவத்தை எழுத வேண்டும் என்று பல மாதங்களாக நினைத்து கொண்டிருக்கிறேன். அதை இன்று எழுதலாமா? என்று நினைத்தேன். பின் அதையும் தள்ளி வைத்துவிட்டேன்.

நடந்து கொண்டிருக்கையில் திடீரென கண்கள் எரிவது போல இருந்தது. நாக்கெல்லாம் கசக்க ஆரம்பித்தது. பின் தான் உணர்ந்தேன். இந்தோனேசியாவின் தயவால் வந்த புகை மூட்டம். Air Pollution Index பார்க்காமல் வாக்கிங் வந்துவிட்டேன். பின் இதை பற்றி எழுதலாம் என்று நினைத்து பின்...

உடனே என்னைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தேன். மலேசியா வந்து 16 வருடங்கள் முடிய போகிறது. எப்பொழுது சொந்த நாட்டில் வேலை செய்ய போகிறோம்? என்ன முடிவு? இப்படி தனியாக ஒரு வருடமாக இருக்கிறோமே இது தேவையா? 1997 முதல் சொர்க்கமாக தெரிந்த மலேசியா இப்போது வேறு மாதிரி தெரிவது ஏன்? என்னை போக விடாமல் ஏங்கி தவிக்க வைப்பது எது?

உடனே "வீட்டிற்கு சென்றவுடன், இட்லி ஊற்றி வைக்க வேண்டும், சாம்பார் சுட வைக்க வேண்டும். வேலையாள் வருவதற்குள் துணிகளை துவைக்க எடுத்து போட வேண்டும். பாத்திரங்களை கழுவ எடுத்து வைக்க வேண்டும்" என்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது. 

உடனே பத்ரிநாத் வெள்ளம் நினைவுக்கு வந்தது. பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டதும், 5000 பேரின் நிலமை என்ன? என்று தெரியாததும் நினைவுக்கு வந்து மனதை என்னவோ செய்தது.

திடிரென ஏதோ தோன்ற பார்த்தால், 45 நிமிட வாக்கிங் முடிந்து வீடு வந்து விட்டது. எத்தனையோ யோசித்தும் இன்று என்ன எழுதுவது என்று என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை. சில நாட்கள் இப்படித்தான் ஆகிறது. என்ன செய்ய?

அதனால் இன்று நான் எதுவும் எழுதவில்லை. நன்றி!6 comments:

அகநாழிகை said...

//இப்படித்தான் ஆகிறது. என்ன செய்ய?//

எழுதுகிற,சிந்திக்கிற எல்லோருக்குமே இப்படி சட்டென தேங்கியது போன்ற நிலை ஏற்படுவதுண்டு. மீண்டு வர வேண்டும். துயரிலிருந்து எழுவதுதான் உண்மையான எழுத்து. எழுதுங்கள் அதுவே அதன் ரகசியம்.பொன்.வாசுதேவன்

Anonymous said...

உண்மை தான் எழுதுவது அத்தனை எளிதல்ல, அது ஒரு பகீரத பிரயத்தனமாய் உள்ளது. ஆனாலும் எழுதுவதை விடோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைப் பதிவுகளை பொருத்தவரை தினந்தோறும் எழதுவது என்பது எல்லோருக்கும் சாத்தியப் படுவதில்லை. ஆரம்பத்தில் ஆர்வம காரணமாக தொடர்ந்து எழுதினாலும் பின்னர் சலிப்பு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவு வரியையும் ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

Anonymous said...

" படிப்பவர்களுக்கு போர் அடிக்க கூடாது. நேற்று அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் எழுதினேன். ஆமாம் இதனால் யாருக்கு என்ன பயன்? தெரியவில்லை. ஒரு சந்தோசம் அவ்வளவுதான்'

Sir, U dont care about the readers. just continue writing. As simple as that. Ofcourse there are reaaders like me who daily ping this page.

http://thamizhkirukku.blogspot.in/

எம்.ஞானசேகரன் said...

//படிப்பவர்களுக்கு போர் அடிக்க கூடாது. நேற்று அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் எழுதினேன். ஆமாம் இதனால் யாருக்கு என்ன பயன்? தெரியவில்லை. ஒரு சந்தோசம் அவ்வளவுதான்//
இதே கேள்விதான் என் மனதுக்குள்ளும்.