Jul 30, 2013

மிக்ஸர் - 30.07.2013

தெரியாத்தனமாக ஒரு பதிவை எழுதிவிட்டு இன்று விளக்கம் சொல்லும் நிலையில் இருக்கிறேன். தனியாக இருப்பவன் வாழ்க்கையில் எப்பொழுதுமே நல்ல சிந்தனைகள்தான் வரும் என்று நான் பொய் சொல்லவிரும்பவில்லை. அப்படி தோன்றிய ஒரு விசயத்தைத்தான் கதை போல எழுதிப்பார்த்தேன். முதலில் அந்த பதிவின் முடிவில் ஒரு "இடைச்செறுகல்" சேர்த்திருந்தேன். என் நலம் விரும்பும் நண்பர்கள் அதனை நீக்கிவிடச் சொன்னார்கள். அதனால் நீக்கிவிட்டேன். இப்பொழுது பல தெரிந்த நண்பர்கள் "அது போல நிஜமாகவே நடந்ததா?" என்று கேட்கிறார்கள். அதான் 'புனைவு" என்று போட்டு இருக்கிறேனே? ஏன் இந்த சந்தேகம். எழுத்தாளர் சுஜாதா பல கதைகளில் காமம் கலந்து எழுதியிருப்பார். நான் அப்படி கூட எழுதவில்லை. எந்தவித காம வர்ணனைகளும் அதில் இல்லை. ஆனால், வர்ணனைகள் இல்லாமலேயே படிப்பவர்களை புரியவைக்க முடியும். அந்த உத்தியில்தான் எழுதினேன். முடிவும் படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டுவிட்டேன். 

//"அம்மா" என்று கத்தினேன். துண்டு நழுவி விழுந்தது. அவள் ஓடி வரும் சத்தம் கேட்டது.

அப்புறம்........//

அதற்கு அப்புறம் என்ன வேணாலும் ஆகி இருக்கலாம் இல்லையா? ஏன் காமத்துடனே கதையை அணுக வேண்டும். அவரவர்களுக்கு பிடித்தது போல் முடிவை நினைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என் கதைகளை படிக்கும் போது "உலக்ஸ்" என்று நினைக்காமல் ஒரு எழுத்தாளனாக நினைக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

***********************************************************

ஞாயிறு மதியம் "மரியான்" படம் பார்த்தேன். முதலில் ஒரு தியேட்டருக்கு சென்றோம். அங்கே மதியக் காட்சி இல்லை. அதனால் இன்னொரு தியேட்டருக்கு சென்றோம். அப்பொழுது மணி 2.45. டிக்கட் கவுண்டரில் கேட்டால், படம் 2.20க்கே ஆரம்பித்துவிட்டது என்று சொன்னார்கள். திரும்பிவிடலாம் என்று நினைத்தால், நண்பர் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். அதனால் படம் பார்க்க ஆரம்பித்தோம். முதல் கால் மணி நேரம் போய்விட்டதே என்று முதலில் வருத்தப் பட்டேன். பின் நல்ல வேளை பார்க்கவில்லை என்று சந்தோசப்பட்டேன். படமா இது? பயங்கர போர். எப்படி இந்த மாதிரி படங்களில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்று தெரியவில்லை. இது போல் இன்னும் இரண்டு படங்கள் நடித்தால் அவ்வளவுதான்? தீவிரவாதி கணவனை கடத்தியதும் மனைவி துடிக்கும் துடிப்பெல்லாம் நாம் "ரோஜாவிலேயே" பார்த்துவிட்டோம். மற்றபடி படம் அந்த பாலைவனம் போலவே வறண்டு போய் உள்ளது. பார்வதிதான் ஆறுதல். ஆனால் இவ்வளவு செலவு செய்த தயாரிப்பாளர், பார்வதிக்கு ஒரு சரியான உள்ளாடை வாங்கி கொடுத்திருக்கலாம்? இல்லை வேண்டுமென்றே இயக்குநர் பார்வதியை அப்படி காட்டினாரா? தெரியவில்லை?

***********************************************************

ஞாயிறு "நீயா நானா" நிகழ்ச்சி எனக்கு என்னவோ குடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி என்று சொல்ல முடியவில்லை. கணவர்கள் அழுதது எல்லாம் ஒரு செயற்கைத்தனமாகவே இருந்தது. அதுவும் அழுது புலம்பிய ஒரு கணவர், அவர் பெயரை பரிசுக்காக கோபி சொன்னபோது அவர் விரலை உயர்த்தி காட்டி அவர் மனைவியிடம் காண்பித்தது என்னவோ போல் இருந்தது. கலந்து கொண்ட அனைத்து கணவர்களும் நன்றாக குடித்து அனுபவித்து ஏதோ ஒரு காரணத்தில் விட்டுவிட்டு ஏதோ சாதித்தது போல் பேசினார்கள். அதில் ஒருவர் பேசியது பயங்கர ஜோக். அலுவலக பார்ட்டிகளில் குடிக்காவிட்டால், யாரும் மதிக்க மாட்டார்களாம். எவன் சொன்னது? நான் குடிக்காமல்தான் அனைத்து பார்ட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். எனக்கு மரியாதை குறைந்து விட்டதா என்ன?

***********************************************************

பல வருடங்களாக பைனான்ஸ் துறையில் இருப்பதன் பலனை இப்போது வேறுவிதமாக உணர்கிறேன். எந்த செயலையும் பணத்தாலோ அல்லது லாபத்தாலோ மட்டுமே வைத்து பார்க்கிறேன். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன் அதனால் என்ன பயன்? என்ன லாபம்? இது தேவையா? லாபம் இல்லாத பட்சத்தில் ஏன் செய்ய வேண்டும்? என்று எல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்த பழக்கம் இப்போது என் எழுத்தையும் பாதிக்க ஆரம்பித்துவிட்டது? எழுதுவதால் என்ன பயன்? அதனால் என்ன லாபம்? என்று மனம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது? இந்த சிந்தனையில் இருந்து எப்படி மீள்வது?

***********************************************************

சூப்பர் சிங்கர் 4 ல பெரியவர் "அழகேசனை" மேடையில் நிற்க வைத்து நடுவர்கள் ஒவ்வொரு வாரமும் கிண்டலடிக்கிறார்கள். அவரும் புரியாமல் சிரிக்கிறார். பார்க்கும் நமக்கு எரிச்சலாக இருக்கிறது. 

நன்றாக பாடிய அந்த நார்த் இந்திய பையனை நீக்கிவிட்டு சுமாராக பாடும் அழகேசனை ஏன் வைத்துக்கொண்டு அழுகிறார்கள் என்று தெரியவில்லை.

***********************************************************

மலேசியாவிற்கு வந்து இன்றுடன் 16 வருடங்கள் முடிந்துவிட்டது. நினைத்தே பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் மலேசியாவில் வேலை செய்வேன் என்று. இரண்டு வருடங்கள் என்று நினைத்துதான் வந்தேன். என் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே செலவிட்டுவிட்டேன். சொர்க்கம். இந்த 16 வருடங்களில் பல உயரங்களை தொட்டுவிட்டேன். போதும். சொச்ச காலத்தை தமிழ் நாட்டில் கழிக்கவே விரும்புகிறேன். ஆறு மாதங்களுக்குள் எப்படியாவது மலேசியாவை விட்டுச் செல்ல வேண்டும். கடுமையான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

***********************************************************


Jul 26, 2013

எனக்குனு ஒரு இமேஜ் இருக்கு!

எனக்குனு ஒரு இமேஜ் இருக்கு. அது கெடாம பார்த்துக்கணும். மனைவிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அதுக்காக நான் உங்க கிட்ட சொல்லாம இருக்க முடியுமா? என்ன பீடிகை பலமா இருக்கேன்னு பாக்கறீங்களா? சொல்றேன்.

வீட்டு வேலைக்கு ஆள் தேடிட்டு இருந்தேன். அப்படி இப்படின்னு ஒரு வழியா கம்பனியில வேலை செய்யற ஒரு மலாய்கார அம்மணி ஒத்துக்கிட்டு வேலை செஞ்சுகிட்டு இருக்கு. போன வாரம் சனிக்கிழமை. வாரவிடுமுறை. எப்பவும் போல வெள்ளிக்கிழமை ரொம்ப நேரம் கழித்து தூங்கியதால் காலை எழுந்திருக்க நேரமாகிவிட்டது. 9 மணிக்கு எழுந்து காபி குடித்துவிட்டு சாப்பிட ஏதும் இல்லாததால் இரண்டு முட்டையை வேக வைத்து வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, ஊற வைத்த அரிசியை எடுத்து இட்லிக்கு மாவு அரைக்க ஆரம்பித்த போதுதான், யாரோ கதவை தட்டுவதை உணர்ந்தேன். பொதுவாக யாரும் என் வீட்டிற்கு வருவதில்லை. ஹோம் தியேட்டரும் சத்தமாக அலறிக்கொண்டிருந்தது.

அதையும் மீறி கதவை தட்டும் சத்தம் கேட்கவே ஆச்சர்யத்துடன் கதவை திறந்தேன். பார்த்தவன் அதிர்ந்து போனேன். காரணம் மிகவும் அழகான ஒரு பெண். மிக இளமையான ஒரு பெண். யாரோ வீடு மாறி வந்துவிட்டாள் என நினைத்து, "யார், என்ன வேண்டும்?" என கேட்டேன்.

"சார், அம்மா இன்னைக்கு வேலைக்கு வரலை. அதனால என்னை அனுப்பினாங்க" என்றாள்.

எனக்கு ஒரு பக்கம் சந்தோசம். ஒரு பக்கம் பயம். இவ்வளவு அழகான பெண்ணா? அவருக்கு? எனக்கு ஓரளவு மலாய் மொழி தெரியும் என்பதால், என்னால் அவள் பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் ஒரு தயக்கம் இருக்கவே, குழம்பி நின்று கொண்டிருந்தேன். அவள் என் பதிலுக்கு காத்திராமல் விறுவிறு என வீட்டிற்குள் நுழைந்தாள். என்னால் அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு கவர்ச்சியான முகம். மெல்லிய ஸ்கர்ட் போட்டிருந்தாள். மேலே கருப்பு கலர் டாப்ஸ். டாப்ஸின் மேல் பட்டனை போட அவள் எந்த சிரத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. செழுமையாக, மிக தாராளமாக இருந்தாள்.

விறுவிறுவென பாத்திரங்கள் கழுவினாள். மாவு அரைத்தாள். நடுவில் குடிக்க எனக்கு காபி போட்டு கொடுத்தாள். அவ்வப்போது தேனொழுக பேசினாள். பாட்டு பாடினாள். நான் தான் நிலை கொள்ளாமல் தவித்தேன். என் மனைவியைத்தவிர யாரும் இப்படி என் வீட்டில் வளைய வந்ததில்லை. வாசிங் மெஷினில் துணியை போட்டாள். பின் வீட்டின் அனைத்து அறைகளையும் கழுவினாள். டாய்லெட் பாத்ரூம் எதுவும் விட்டுவைக்கவில்லை. பின் துவைத்த துணிகளை காய வைத்தாள்.

நான் நினைத்தேன், வேலை முடிந்ததும் போய்விடுவாள் என்று. ஆனால் என்ன ஆச்சர்யம், போகாமல் சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். எனக்கோ தாங்க முடியவில்லை. இவ்வளவு நேரம் குனிந்து, நிமிர்ந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் போதே நான் காலி. இன்னமும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? உள்ளே சென்று பார்த்தேன். பார்த்தால், சமைத்துக்கொண்டிருந்தாள்,

"நீ ஏம்மா சமைக்கற?"

"இல்லை அம்மாதான் சொன்னாங்க, சார் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறார். ஒரு நாளைக்கு அவருக்கு சமைச்சு போடு"

"பரவாயில்லை. வேண்டாம்மா?" என்று நான் சொல்கையில், அவள் கீழே ஒரு மாதிரி அசிங்கமாக உட்கார்ந்து கொண்டு வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தாள். கொஞ்சம் நேரம் பார்க்க கூடாததை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு வெளியே வந்துவிட்டேன். சமைத்ததும் சாப்பிட கூப்பிட்டாள். சுவை என்றால் அப்படி ஒரு சுவை. மிகவும் நன்றாக இருக்கவே நன்றாக ஒரு பிடி பிடித்தேன். அவளைப் பாராட்டி தள்ளிவிட்டேன். அதிகம் சாப்பிட்டுவிடவே, தூக்கம் கண்களை இழுக்க மாடிக்கு தூங்க சென்றுவிட்டேன். அவளிடம் ஒரு சாவி இருந்தது. அதனால், வேலை முடிந்ததும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிடுவாள் என நினைத்து தூங்கிவிட்டேன். நல்ல அசதி. அசந்து தூங்கிவிட்டு எழும்போது மணி 6. கீழே இறங்கி வந்து பார்த்தால், சுடச்சுட ஆனியன் பக்கடா ரெடியாக இருக்கிறது.

நன்றாக மழை வேறு. நல்ல மழை சமயத்தில் குளிரில் ஆனியன் பக்கடா சாப்பிட்டு பாருங்கள், சூப்பராக இருக்கும். சமைத்து வைத்து போய்விட்டாள் என நினைத்து சாப்பிட ஆரம்பித்தால்,

"என்ன சார், நல்ல தூக்கமா?" எனக் கேட்டுக்கொண்டே காபி கோப்பையுடன் அவள்.

"ஏன் இன்னும் போகலையா?"

"இல்லை சார், துணி எல்லாம் அயர்ன் பண்ணி வைச்சேன். டயம் ஆயிடுச்சு. மழை வேற. சரி காபி போட்டுட்டு உங்களை எழுப்பலாம்னு நினைச்சிட்டே இருந்தேன். நீங்களெ அதுக்குள்ள எழுந்து வந்துட்டீங்க"

நிதானமாக காபி சாப்பிட்டேன். குழப்பத்தில் இருந்தேன். பின் குளிக்கலாம் என்று மாடியில் உள்ள பாத்ரூமிற்கு சென்றேன். அவளை நினைத்துக்கொண்டே சோப்பை எடுத்தேன். வழுக்கி விழுந்தேன்.

"அம்மா" என்று கத்தினேன். துண்டு நழுவி விழுந்தது. அவள் ஓடி வரும் சத்தம் கேட்டது.

அப்புறம்........

-புனைவு

Jul 23, 2013

நானும் மாறிவிட்டேன்!

(இந்த இடுகையை என் முக நூல் நண்பன் "Rajinikanth Aj" க்கு சமர்ப்பிக்கிறேன்) 

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பதை பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆனால் நான் அதிகம் படித்தது சுஜாதாவையும், பாலகுமாரனையும்தான். சில வருடங்களுக்கு முன் தான் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவிலேயே மூழ்கி இருந்துவிட்டதால் வேறு எழுத்தாளர்களை பிடிக்காமல் இருந்தது. பின் சாருவின் அனைத்து புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். பின் நிறைய பழைய எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்க ஆரம்பித்து, படித்து இப்பொழுதுதான் ஓரளவிற்கு சுஜாதாவைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். எஸ் ராவையும் வாசிக்கிறேன். ஜெமோவையும் வாசிக்கிறேன். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் வெளிநாட்டு எழுத்தாளர்களை பற்றி எழுதும்போது எனக்கு வியப்பாக இருக்கும். 

நாம் இன்னும் தமிழ் எழுத்தாளர்களையே முழுமையாக படிக்கவில்லையே? நாம் எங்கே ஆங்கில எழுத்தாளர்களை எல்லாம்....? அதுவும் இல்லாமல் ஆரம்ப காலங்களில் எனக்கு ஆங்கிலமே தகராறு. பக்கத்திலேயே அகராதி இருக்க வேண்டும். இன்னொரு கெட்ட பழக்கம் ஒவ்வொரு வரியையும் தமிழில் யோசித்து புரிந்து கொள்வேன். அதனால் ஒரு பக்கத்தை கடக்கவே நிறைய நேரம் ஆகும். இன்னொரு பிரச்சனையும் எனக்கு இருந்தது. ஆங்கில நாவலை எடுத்தாலே ஏதோ எனக்கு பாட புத்தகத்தை படிப்பது போல் இருக்கும். தூக்கம் வரும். இதனால் ஆங்கில புத்தகங்கள் பக்கம் செல்லாமலே இருந்தேன். 

16 வருடங்களுக்கு முன் பாம்பேக்கு ரயிலில் சென்றேன். ஏறக்குறைய 30 மணி நேர பயணம். என்ன செய்வது? எப்படி பயணத்தை போக்குவது என்று குழம்பி உட்கார்ந்து இருந்தேன். வயசுக்கோளாறில் ஒரு சிகப்பு அழகான துணை நடிகைக்கு என் பர்த்தை விட்டு கொடுத்து சீட்டில் உட்கார்ந்து தூங்காமலேயே பயணம் செய்தேன். அவளைப் பார்த்து ஜொல்விட்டுக் கொண்டே சென்றதுதான் மிச்சம். பாம்பேயில் இறங்கும் போது அவள் ஒரு நன்றி கூட செல்லாமல் சென்றது வேறு விசயம். அப்பொழுது என் நிலையை உணர்ந்த நண்பர் ஒரு புத்தகம் கொடுத்தார். என்ன புத்தகம் தெரியுமா? "Goodbye, Janet" by Harold Robbins. வேறு வழி இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். இரவு நேரம் கைக்கு எட்டும் தூரத்தில் அழகான சிவந்த தாரளமான துணை நடிகை, கையில் இந்த புத்தகம். எப்படி இருந்திருக்கும் என் நிலமை என்று யோசித்துபாருங்கள். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று அந்த நாவலை படித்தவர்களுக்குத்தான் தெரியும்.

அத்துடன் எனக்கும் ஆங்கில நாவல்களுக்குமான உறவு முடிந்துவிட்டது. ஆனால் பாம்பே தெருக்கடைகளில் "ச.தே" புத்தகங்கள் கிடைக்காததால் ஆங்கிலத்தில் வாங்கி படித்தது தனிக்கதை. ஆம். நான் சிறு வயதில் நிறைய அந்த மாதிரி புத்தகங்களை படித்திருக்கிறேன். அந்த மாதிரி புத்தகங்களால் ஏற்பட்ட, சேமித்த மன அழுக்குகளை எப்படி களைய போகிறேன் என்று தினமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படிப்பட்ட என் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை எங்கள் கம்பனியின் புது CEO ஏற்படுத்திவிட்டார். அவர் ஒவ்வொரு முறை வரும் போதும் ஒரு ஆங்கில புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பார். ஆனால் அவைகள் எல்லாம் நாவல்கள் அல்ல. சுயசரிதை, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை - பற்றியான புத்தகங்களாகத்தான் இருக்கும். நானே அதிகம் தன்னம்பிக்கை உள்ளவனாகவும், தலைகனம் உள்ளவனாகவும் இருப்பதால் அவைகளை படிக்காமலேயே இருந்து வந்தேன். அவர் ஒவ்வொரு முறை வரும் போது ஒரு மூன்று மணி நேரம் லெக்சர் கொடுப்பார். அதை கேட்கும் போது நமக்கு நம்மை அறியாமல் ஒரு தெளிவு மனதிற்குள் ஏற்படும். மிகவும் சிறப்பாக இருக்கும்.

அவர் ஒவ்வொரு முறையும் என்னை கேட்பார், "புத்தகத்தை படித்தாயா? என்ன புரிந்து கொண்டாய்? அதை உன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்தினாய்? கம்பனிக்கு பயன்படுத்தினாயா? அடுத்த முறை வரும் போது எனக்கு அவைகளை ஒரு presentation ஆக கொடு" 

இது என்னை மேலும் கடுப்பு ஏற்றிவிடும். இதனால் படிக்கும் ஆசை போய்விடும். நமக்கோ மூன்று கம்பனி வேலைகள், நண்பனின் கம்பனிக்கு அவ்வப்போது ஆலோசனைகள், சமையல், வாக்கிங், ஜிம் இதற்கே நேரமில்லை. எங்கே படிப்பது? நான் எங்கு உட்கார்ந்து தமிழ் புத்தகங்கள் படிக்கிறேன் என்று புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் அறிந்தார்கள் என்றால் என்னை கொன்றே போட்டுவிடுவார்கள்.

நான் ஆங்கில புத்தகங்களை தவிர்த்ததற்கு காரணம் என்னுடைய ஆங்கில அறிவின்மை. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சிறிய மனக்குழப்பம் வரவே அவர் போன வாரம் கொடுத்த "Think and Grow Rich" by Napolean Hills என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, மனம் முழுவதும் சந்தோசம். விசிலடித்தேன். பாட்டு பாடினேன். தொடர்ந்து இரண்டு மணி நேரம் படித்தேன். அவ்வளவு அற்புதம். நான் இவ்வளவு நாட்களாக என்னையே குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறேன். இப்படித்தான் நம்மை பற்றியே நாம் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டு நிறைய விசயங்களில் ஈடுபடாமலேயே இருக்கிறோம்.

ஆம், எனக்கு போதிய ஆங்கில அறிவு இருக்கிறது. படிக்கும் போது டிக்ஷனரி தேவைப்படவே இல்லை. அப்படியே சில வார்த்தைகள் கடினமாக இருந்தாலும், படிக்கையில் ரொம்ப ஈசியாக புரிகிறது. எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இப்படி ஆரம்பித்த என் பழக்கம் இப்போது ஆங்கில புத்தகமும் கையுமாக என்னை அலைய வைத்துவிட்டது. மனது சந்தோசத்தில் திளைக்கிறது. 

இப்பொழுது அவர் கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். உண்மையில் எனக்கு நேரம் இல்லைதான். ஆனால், இதையும் அலுவலக வேலை போல் ஒரு வேலையாகவே செய்கிறேன். நேரம் கிடைக்கும் போது படிக்கும் புத்தகங்களில் உள்ள நல்ல விசயங்களையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

எனக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம் எப்படி என் வாழ்நாளுக்குள் அனைத்து நல்ல புத்தகங்களையும் படித்து முடிக்க போகிறேன் என்பதுதான்.


Jul 18, 2013

பார்த்து பேசணும்!

சென்ற வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று அர்ச்சனை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்ப நினைக்கையில் நண்பரின் குரல் கேட்டு திரும்பினேன். அவர் எங்கள் கம்பனியில் பணிபுரிபவர். நல்ல பழக்கம். 

"சார், கார் ஒண்ணு வாங்கி இருக்கேன். அதான் பூஜை போட வந்தேன்" என்றார். அப்பொழுதுதான் கவனித்தேன், கோவிலின் முன்னால் ஒரு கார் நின்றது. பின் பல விசயங்கள் பேசினோம். முதலில் அவருடன் பேசும்போது என் மனம் ஒரு இடத்தில் இல்லை, வேறு இடத்தில் இருந்தது. எப்பொழுதும் வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் சாப்பிடுவது வழக்கம். ஏதாவது சாப்பாடு இருக்கும். அன்று வீட்டில் ஒன்றும் இல்லை. தோசை மாவு தீர்ந்துவிட்டிருந்தது. சனிக்கிழமைதான் மாவு அரைப்பது வழக்கம். அதனால் வெள்ளிகிழமை இரவு கோவிலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சென்று விட்டேன்.

அதனால்தான் மனம் ஒரு இடத்தில் இல்லை. என்ன காரணம்? நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சாப்பாடு தீர்ந்து விட்டால் என்ன செய்வது? பின் எங்கே சாப்பிடுவது? ஏன் ஹோட்டல்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். முதல் விசயம் இந்திய ஹோட்டல்கள் இங்கே கிடையாது. இரண்டாவது விசயம், ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் அனைத்து ஹோட்டல்களும் மூடி இருக்கும். அதனால் நண்பரிடம் பேசிக்கொண்டே, "வாங்க சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்" என்று உள்ளே கூட்டிச் சென்றேன். பார்த்தால் சாப்பாட்டு இடம் காலியாக இருந்தது. என்னடா இது என்று நினைத்து கோவிலில் உள்ள ஒருவரிடம் கேட்டால் "இன்று கூட்டம் அதிகம் வராது என்று நினைத்து சமைக்கவில்லையாம்" என்றார்.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் நண்பர் சொன்னார், "வாங்க பிரசாதம் சாப்பிடலாம்" என்று கூட்டி சென்றார். ஒரு வாளியில் எலும்பிச்சை பழ சாதமும், இன்னொரு வாளியில் பஞ்சாமிர்தமும் இருந்தது. பொதுவாக எலும்பிச்சை சாதம் ஒரு கரண்டிதான் கொடுப்பார்கள். நண்பர் என் நிலையை அறிந்து ஒரு பேப்பர் இலையில் நிறைய சாதம் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கோயிலின் ஓரத்திற்கு சென்று சாப்பிட ஆரம்பித்தோம். எனக்கே வெட்கமாக இருந்தாலும், பசி, என்ன செய்வது. அவ்வளவுதான் என் டின்னர்.

அத்துடன் வீட்டிற்கு வந்து இருக்க வேண்டும்?

ஆனால் நான் நண்பரிடம் பேச்சை வளர்த்தேன். "இப்பத்தான் கார் வாங்கி இருக்கீங்க. அதனால பார்த்து ஓட்டுங்க. வேகமா போகாதீங்க. இது தமிழ்நாடு போல இல்லை. உங்களுக்கே தெரியும், இங்க எல்லாம் ரொம்ப வேகமா ஓட்டுவாங்க. பக்கத்து டவுனுக்கு கார் எல்லாம் எடுத்து போகாதீங்க. கொஞ்ச நாள் ஆகட்டும். அதுவரை யாரையாவது துணைக்கு அழைத்து போங்க. நாம நல்லா ஓட்டுனாக்கூட பின்னாடி வரவன் வந்து இடிக்க சான்ஸ் இருக்கு. அதை நம்பளால தடுக்க முடியாது. ஆனா நாம நல்லா ஓட்டுனா நம்மால ஒரு விபத்தும் ஏற்படாது" என்று பெரிய ஒரு லெக்சர் கொடுத்தேன்.

பின் வீட்டிற்கு வந்து சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு தூங்க நினைக்கையில் இன்னொரு நண்பர் போன் செய்து நாளை பக்கத்து டவுனுக்கு போகலாமா? என்றார். "ஏன்?" என்றதற்கு, "போய் நல்லா சாப்பிட்டுவிட்டு அப்படியே சிங்கம் 2 பார்த்துவிட்டு வரலாம்" என்றார். நான் அதுவரை சிங்கம் 2வின் எந்த விமர்சனமும் படிக்காமல் இருந்தேன். அதனால், "சரி" என்று சொல்லிவிட்டு படுத்தேன்.

காலை எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பக்கத்து டவுணுக்கு சென்றோம். ஒரு தமிழ்க் கடையில் நன்றாக சாப்பிட்டோம். பின் பழைய துணிகளை போடும் இடத்திற்கு சென்றோம். அங்கே சென்று போட்டால் அவர்கள் அந்த துணிகளை ஏழை நாடுகளுக்கோ அல்லது அநாதை இல்லங்களுக்கோ அனுப்பிவிடுவார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே துணிகளை போடுவது வழக்கம். அங்கே துணிகளை சேர்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தியேட்டரை நோக்கி பயணமானோம். போகும் வழியில் ஏகப்பட்ட டிராபிக் சிக்னல். இரண்டு சிக்னலை கடந்து மூன்றாவது சிக்னலில் ஏகப்பட்ட கார்கள் நின்றன. நானும் சென்று நிறுத்தினேன். 

எனக்கு முன்னால் ஒரு இருபது கார்கள் இருக்கும். நான் நிறுத்தியவுடன் பின்னால் ஒரு கார் வந்து நினறது. ஒரு நிமிடம் கடந்து இருக்கும். 'டமால்' என்று ஒரு சத்தம். ஏதோ வெடித்தது போல் இருந்தது. என் கார் ஆடியது. நான் பூகம்பம் என்று நினைத்தேன். நண்பர் கார் வெடித்துவிட்டது என்று நினைத்து காரின் மேல் பார்த்தார். நான் பின்னால் பார்த்தேன். ஏகப்பட்ட பேர் ஓடுவது தெரிந்தது. காரை விட்டு இறங்கினோம். என் காரின் பம்பர் பூட் எல்லாம் நசுங்கி இருந்தது. பின்னால் உள்ள காருக்கும் முன்னாலும் பின்னாலும் சிறிய சேதம்தான் இருந்தது. ஆனால் என் காரின் பின்னால் உள்ள மூன்றாவது காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி பெட்ரோல் ஒழுகிகொண்டிருந்தது. 

எல்லோரும் பதட்டப்பட்டார்கள். ஆனால் நான் மிக தைரியமாக எல்லா காரியங்களும் செய்தேன். மூன்றாவது காரை கிரேன் வைத்துதான் தூக்கி வந்தார்கள். போலிஸ் ஸ்டேஷனுக்கு. பின் எல்லோரும் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் செய்து முடிக்க மணி மாலை 4 ஆனது. 'படம் பார்க்க முடியாது. போகலாம்' என்றேன். நண்பரோ விடாப்பிடியாக பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி ஆறு மணி காட்சிக்கு அழைத்து சென்றார். அதே காரில் தியேட்டர் சென்றோம்.

கம்பனியின் வேறு ஒரு காரை இப்போது பயன்படுத்துகிறேன். கார் வொர்க் ஷாப்பில் இருக்கிறது. திரும்பிவர பத்து நாட்கள் ஆகலாம். எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லை.

சிங்கம் 2 எனும் படத்தை எப்படி எல்லோரும் ஹிட் என்றும் அருமையான படம் என்றும் சொல்கிறார்கள் என்ற கவலைதான் என்னை வாட்டி வதைக்கிறது.

(ஏன் இந்த தலைப்பு? ஆழ்ந்து படித்தீர்களானால் ஒரு வேளை புரியலாம்)


Jul 4, 2013

நீண்ட நாள் ஆசை!

நான் இருக்கும் வீடு மிக அழகானது. எங்கள் வீடு இருப்பது VIP காலணியில் என்று தாரளமாக சொல்லலாம். பணக்காரர்கள் வசிக்கும் இடம். எங்கள் தெருவில் இருப்பவர்கள் அனைவருமே மலாய்காரர்கள்தான். எட்டு வருடங்களுக்கு முன் எத்தனையோ முறை முயன்றும் யாருமே இந்த தெருவில் குடியிருக்க எனக்கு வீடு தர விரும்பவில்லை. காரணம் நான் மலாய்காரன் இல்லை. ஆனால் எங்கள் வீட்டு முதலாளி அமெரிக்காவில் படித்தவர். அவருக்கு இந்த மாதிரி பாகுபாடு எல்லாம் இல்லை. அதனால் கேட்டவுடன் கொடுத்துவிட்டார். இதோ இந்த வீட்டில் எட்டு வருடமாக இருக்கிறேன். வீட்டின் இடது பக்கத்தில் கார்டன் உண்டு. வாழை மரங்களும், நிறைய பூச்செடிகளும் வைத்திருக்கிறேன். வீட்டின் முன்னே மிகப் பெரிய கார் பார்க் உள்ளது. அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு அமைதியாக கார்டனில் உள்ள பூக்களை, வானத்தை, தெருவில் போகும் பள்ளிக் குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக ஒரு முப்பது நிமிடமாவது இருக்கவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறாமலேயே இருந்தது. ஒரு வழியாக திங்கள் அதிகாலை அந்த ஆசையும் நிறைவேறியது. அது எப்படி நிறைவேறியது என்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது.

வீட்டிற்கு ஏகப்பட்ட பூட்டுகள் உண்டு. பின் கதவிற்கு மொத்தம் மூன்று. வெளி கேட்டுக்கு ஒன்று. பின் கிரில், மெயின்கேட் ஆகியவற்றிற்கு மொத்தம் நான்கு. ஸ்லைடிங் டோருக்கு மொத்தம் மூன்று. இதில் நான் தினமும் உபயோகிப்பது மொத்தம் நான்கு. மற்ற பூட்டுகள் எப்பொழுதும் பூட்டியபடிதான் இருக்கும். குடும்பம் இங்கே இருந்த போது கூட நான் அதிகாலை எழுந்து வாக்கிங் போவதால், நான்தான் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போவேன். நான் வந்து வீட்டை திறந்து பின் தான் அவர்களை எழுப்பிவிடுவேன். இதில் இதுவரை எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. ஞாயிறு இரவு வீட்டை பூட்டும் போது ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. வீட்டின் எல்லா பூட்டுகளையும் பூட்டிவிட்டு மெயின் டோரை பூட்ட முயற்சித்த போது, பூட்டு அதன் வேலையை காண்பித்தது. மெயின் கதவை உள்பக்கமாக பூட்டும் போது அந்த லீவர் வேலை செய்யவில்லை.

உடனே நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் 'எண்ணைய் போட்டால் சரியாகிவிடும்' என்று நினைத்து பூட்டில் உள்ள ஸ்கூருவை கழட்டினேன். அதில்தான் பிரச்சனை ஆரம்பித்தது. எண்ணைய் போட்டவுடன் என்னால் ஒரு ஸ்கூருவை திருப்பி சரியாக போட முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பூட்டை உட்புறமாக பூட்டிவிட்டு படுக்கலாம் என்று நினைத்து பூட்டிவிட்டேன். ஆனால் திறக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் போராடிவிட்டு தூங்க சென்றுவிட்டேன். காலையில் 5.30க்கு எழுந்து வாக்கிங் செல்லலாம் என்று நினைத்து கதவை திறந்தால் திறக்க முடியவில்லை. பிறகு மீண்டும் ஸ்கூருவை கழட்டி மாட்டி வெளியில் வந்து பூட்டிவிட்டு வாக்கிங் சென்றேன்.

6.30க்கு திரும்பி வந்து வீட்டை திறந்தால் திறக்க முடியவில்லை. நன்றாக லாக் ஆகிவிட்டது போல. என்னென்னவோ செய்து பார்த்தேன். முடியவில்லை. வீட்டின் மற்ற பூட்டுகளின் சாவிகள் எல்லாம் வீட்டின் உள்ளே இருக்கிறது. நல்லவேளை, இருக்கும் இரண்டு செல்போன்களில் ஒரு செல்போன் கையில் இருந்தது. . வீட்டின் உள்ளே குக்கரில் அரிசி வெந்து கொண்டு இருக்கிறது. 8.30க்கு அலுவலகம் செல்ல வேண்டும். 30 நிமிடமாக போராடியும் முடியவில்லை, என்ன செய்வது தெரியவில்லை. 7 மணிக்கு சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். எனக்கு தெரிந்த மலாயில் அவரிடம் சொன்னேன். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவர் புரிந்து கொண்டு, வீட்டில் உள்ள அனைத்து டூல்களையும் எடுத்து வந்தார். ஏறக்குறைய பூட்டை ஒரு வழி செய்துவிட்டு, "இதற்கு மேல் முயற்சி செய்தால் கதவிற்கு பாதிப்பு வரும். இந்த கதவு மிகவும் காஸ்ட்லி. அதனால் வீட்டு ஓனரிடம் எதற்கும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்" என்றார்.

அப்பொழுதுதான் எனக்கு தோன்றியது. வீட்டு ஓனரிடம் ஒரு சாவிக்கொத்து இருக்குமே? அதை வைத்து பின் கதவு வழியாக உள்ளே வந்துவிடலாமே என்று நினைத்து அவருக்கு போன் செய்தேன். அவர் எடுக்க வில்லை. அவர் வேலை பார்ப்பது ஜோகூர் பாருவில். அவரின் மனைவிக்கு போன் செய்தால், போன் போகவில்லை. அவர் மனைவியும் குழந்தையும் எங்கள் தெருவைத் தாண்டடி இரண்டாவது தெருவில் இருக்கிறார்கள். சரி, போன் தான் எடுக்கவில்லை. நேரில் சென்று சொல்லலாம் என்று நினைத்து காரை எடுக்கலாம் என்று நினைத்தால், காரின் சாவி வீட்டின் உள்ளே இருக்கிறது. சரி, நடந்து செல்லலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன். அதற்குள் வேர்வையில் முழுவதுமாக நனைந்துவிட்டேன். ஒரு வழியாக அவரின் வீட்டை அடைந்தேன். வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்துகிறேன். யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டால் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. 

நொந்தபடி வீட்டிற்கு வந்து கம்பனிக்கு போன் செய்தேன். முதலில், HRலிருந்து ஒருவர் வந்து அவர் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்துவிட்டு, நான் மெக்கானிக் டிபார்ட்மெண்டில் இருந்து ஆள் அனுப்புகிறேன் என்று சென்றுவிட்டார். அந்த நேரம் வீட்டு ஓனர் போன் செய்து, நான் எதற்காக போன் செய்தேன் என்று விசாரித்தார். சொன்னேன்.

"சாரி நாதன். நாங்கள் குடும்பத்தோடு தாய்லாந்தில் இருக்கிறோம். நீங்கள் பூட்டை மாற்றிக்கொள்ளுங்கள். பணம் நான் கொடுத்துவிடுகிறேன்" என்றார்.

"சார், பூட்டு மாத்தறது அப்புறம். நான் முதலில் வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டுமே?"

"ஒரு நிமிசம் இருங்கள். எங்கள் மாமனாரிடம் கேட்கிறேன். அவரிடம் எங்கள் வீட்டு சாவி இருக்கலாம். அப்படி இருந்தால், அவரை அனுப்பி, எங்கள் வீட்டை திறந்து, உங்கள் வீட்டு சாவிக்கொத்தை கண்டுபிடித்து, அவரை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். ஆனால் அவர் வயதானவர். அவர் இப்போது வீட்டில் இருக்க வேண்டுமே? பின் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்" என்று வைத்துவிட்டார்.

என்ன செய்வது? என்று யோசித்து குழம்பிய நிலையில் இருந்தேன். அப்பொழுதுதான் என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன். வீட்டின் வாசலில் அமர்ந்து அனைத்தையும் மறந்துவிட்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன். பின் அவர் மாமனார் வந்தார். சாவிக்கொத்தை கொடுத்தார். பின் வீட்டின் வழியாக உள்ளே வந்தேன். அப்படியும் முன் கதவின் பூட்டை திறக்கமுடியவில்லை. பின் கம்பனியில் இருந்து இரண்டு வொர்க்கர்கள் வந்தார்கள். அவர்கள் முயற்சியால் பூட்டை திறந்தோம். பின் அவர்களே கடைக்கு சென்று புது பூட்டு வாங்கி வந்தார்கள். மாட்டினார்கள். போகும் போது சொன்னார்கள்,

"சார், குறைந்த பட்சம் இன்னொரு கதவின் சாவிகளையாவது காரிலோ அல்லது பேண்ட் பாக்கெட்டிலோ வைத்துக்கொள்லுங்கள்"

"சரி" என்றேன். புது பூட்டின் சாவியும், மற்ற சாவிக்கொத்தும் அவர்கள் வைத்து சென்றே அதே இடத்தில்தான் இன்னும் இருக்கிறது.