Jul 30, 2013

மிக்ஸர் - 30.07.2013

தெரியாத்தனமாக ஒரு பதிவை எழுதிவிட்டு இன்று விளக்கம் சொல்லும் நிலையில் இருக்கிறேன். தனியாக இருப்பவன் வாழ்க்கையில் எப்பொழுதுமே நல்ல சிந்தனைகள்தான் வரும் என்று நான் பொய் சொல்லவிரும்பவில்லை. அப்படி தோன்றிய ஒரு விசயத்தைத்தான் கதை போல எழுதிப்பார்த்தேன். முதலில் அந்த பதிவின் முடிவில் ஒரு "இடைச்செறுகல்" சேர்த்திருந்தேன். என் நலம் விரும்பும் நண்பர்கள் அதனை நீக்கிவிடச் சொன்னார்கள். அதனால் நீக்கிவிட்டேன். இப்பொழுது பல தெரிந்த நண்பர்கள் "அது போல நிஜமாகவே நடந்ததா?" என்று கேட்கிறார்கள். அதான் 'புனைவு" என்று போட்டு இருக்கிறேனே? ஏன் இந்த சந்தேகம். எழுத்தாளர் சுஜாதா பல கதைகளில் காமம் கலந்து எழுதியிருப்பார். நான் அப்படி கூட எழுதவில்லை. எந்தவித காம வர்ணனைகளும் அதில் இல்லை. ஆனால், வர்ணனைகள் இல்லாமலேயே படிப்பவர்களை புரியவைக்க முடியும். அந்த உத்தியில்தான் எழுதினேன். முடிவும் படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டுவிட்டேன். 

//"அம்மா" என்று கத்தினேன். துண்டு நழுவி விழுந்தது. அவள் ஓடி வரும் சத்தம் கேட்டது.

அப்புறம்........//

அதற்கு அப்புறம் என்ன வேணாலும் ஆகி இருக்கலாம் இல்லையா? ஏன் காமத்துடனே கதையை அணுக வேண்டும். அவரவர்களுக்கு பிடித்தது போல் முடிவை நினைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என் கதைகளை படிக்கும் போது "உலக்ஸ்" என்று நினைக்காமல் ஒரு எழுத்தாளனாக நினைக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

***********************************************************

ஞாயிறு மதியம் "மரியான்" படம் பார்த்தேன். முதலில் ஒரு தியேட்டருக்கு சென்றோம். அங்கே மதியக் காட்சி இல்லை. அதனால் இன்னொரு தியேட்டருக்கு சென்றோம். அப்பொழுது மணி 2.45. டிக்கட் கவுண்டரில் கேட்டால், படம் 2.20க்கே ஆரம்பித்துவிட்டது என்று சொன்னார்கள். திரும்பிவிடலாம் என்று நினைத்தால், நண்பர் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். அதனால் படம் பார்க்க ஆரம்பித்தோம். முதல் கால் மணி நேரம் போய்விட்டதே என்று முதலில் வருத்தப் பட்டேன். பின் நல்ல வேளை பார்க்கவில்லை என்று சந்தோசப்பட்டேன். படமா இது? பயங்கர போர். எப்படி இந்த மாதிரி படங்களில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்று தெரியவில்லை. இது போல் இன்னும் இரண்டு படங்கள் நடித்தால் அவ்வளவுதான்? தீவிரவாதி கணவனை கடத்தியதும் மனைவி துடிக்கும் துடிப்பெல்லாம் நாம் "ரோஜாவிலேயே" பார்த்துவிட்டோம். மற்றபடி படம் அந்த பாலைவனம் போலவே வறண்டு போய் உள்ளது. பார்வதிதான் ஆறுதல். ஆனால் இவ்வளவு செலவு செய்த தயாரிப்பாளர், பார்வதிக்கு ஒரு சரியான உள்ளாடை வாங்கி கொடுத்திருக்கலாம்? இல்லை வேண்டுமென்றே இயக்குநர் பார்வதியை அப்படி காட்டினாரா? தெரியவில்லை?

***********************************************************

ஞாயிறு "நீயா நானா" நிகழ்ச்சி எனக்கு என்னவோ குடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி என்று சொல்ல முடியவில்லை. கணவர்கள் அழுதது எல்லாம் ஒரு செயற்கைத்தனமாகவே இருந்தது. அதுவும் அழுது புலம்பிய ஒரு கணவர், அவர் பெயரை பரிசுக்காக கோபி சொன்னபோது அவர் விரலை உயர்த்தி காட்டி அவர் மனைவியிடம் காண்பித்தது என்னவோ போல் இருந்தது. கலந்து கொண்ட அனைத்து கணவர்களும் நன்றாக குடித்து அனுபவித்து ஏதோ ஒரு காரணத்தில் விட்டுவிட்டு ஏதோ சாதித்தது போல் பேசினார்கள். அதில் ஒருவர் பேசியது பயங்கர ஜோக். அலுவலக பார்ட்டிகளில் குடிக்காவிட்டால், யாரும் மதிக்க மாட்டார்களாம். எவன் சொன்னது? நான் குடிக்காமல்தான் அனைத்து பார்ட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். எனக்கு மரியாதை குறைந்து விட்டதா என்ன?

***********************************************************

பல வருடங்களாக பைனான்ஸ் துறையில் இருப்பதன் பலனை இப்போது வேறுவிதமாக உணர்கிறேன். எந்த செயலையும் பணத்தாலோ அல்லது லாபத்தாலோ மட்டுமே வைத்து பார்க்கிறேன். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன் அதனால் என்ன பயன்? என்ன லாபம்? இது தேவையா? லாபம் இல்லாத பட்சத்தில் ஏன் செய்ய வேண்டும்? என்று எல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்த பழக்கம் இப்போது என் எழுத்தையும் பாதிக்க ஆரம்பித்துவிட்டது? எழுதுவதால் என்ன பயன்? அதனால் என்ன லாபம்? என்று மனம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது? இந்த சிந்தனையில் இருந்து எப்படி மீள்வது?

***********************************************************

சூப்பர் சிங்கர் 4 ல பெரியவர் "அழகேசனை" மேடையில் நிற்க வைத்து நடுவர்கள் ஒவ்வொரு வாரமும் கிண்டலடிக்கிறார்கள். அவரும் புரியாமல் சிரிக்கிறார். பார்க்கும் நமக்கு எரிச்சலாக இருக்கிறது. 

நன்றாக பாடிய அந்த நார்த் இந்திய பையனை நீக்கிவிட்டு சுமாராக பாடும் அழகேசனை ஏன் வைத்துக்கொண்டு அழுகிறார்கள் என்று தெரியவில்லை.

***********************************************************

மலேசியாவிற்கு வந்து இன்றுடன் 16 வருடங்கள் முடிந்துவிட்டது. நினைத்தே பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் மலேசியாவில் வேலை செய்வேன் என்று. இரண்டு வருடங்கள் என்று நினைத்துதான் வந்தேன். என் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே செலவிட்டுவிட்டேன். சொர்க்கம். இந்த 16 வருடங்களில் பல உயரங்களை தொட்டுவிட்டேன். போதும். சொச்ச காலத்தை தமிழ் நாட்டில் கழிக்கவே விரும்புகிறேன். ஆறு மாதங்களுக்குள் எப்படியாவது மலேசியாவை விட்டுச் செல்ல வேண்டும். கடுமையான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

***********************************************************


2 comments:

மணிஜி said...

சீக்கிரம் இந்தியா வாங்க ...உலக்ஸ்!! இலக்கிய உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது...

”தளிர் சுரேஷ்” said...

கலவையான செய்திகள்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது குறைந்து போனதால் நீங்கள் சொன்ன நிகழ்ச்சிகளை பார்க்க வில்லை! பகிர்வுக்கு நன்றி!