Jul 18, 2013

பார்த்து பேசணும்!

சென்ற வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று அர்ச்சனை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்ப நினைக்கையில் நண்பரின் குரல் கேட்டு திரும்பினேன். அவர் எங்கள் கம்பனியில் பணிபுரிபவர். நல்ல பழக்கம். 

"சார், கார் ஒண்ணு வாங்கி இருக்கேன். அதான் பூஜை போட வந்தேன்" என்றார். அப்பொழுதுதான் கவனித்தேன், கோவிலின் முன்னால் ஒரு கார் நின்றது. பின் பல விசயங்கள் பேசினோம். முதலில் அவருடன் பேசும்போது என் மனம் ஒரு இடத்தில் இல்லை, வேறு இடத்தில் இருந்தது. எப்பொழுதும் வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் சாப்பிடுவது வழக்கம். ஏதாவது சாப்பாடு இருக்கும். அன்று வீட்டில் ஒன்றும் இல்லை. தோசை மாவு தீர்ந்துவிட்டிருந்தது. சனிக்கிழமைதான் மாவு அரைப்பது வழக்கம். அதனால் வெள்ளிகிழமை இரவு கோவிலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சென்று விட்டேன்.

அதனால்தான் மனம் ஒரு இடத்தில் இல்லை. என்ன காரணம்? நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சாப்பாடு தீர்ந்து விட்டால் என்ன செய்வது? பின் எங்கே சாப்பிடுவது? ஏன் ஹோட்டல்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். முதல் விசயம் இந்திய ஹோட்டல்கள் இங்கே கிடையாது. இரண்டாவது விசயம், ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் அனைத்து ஹோட்டல்களும் மூடி இருக்கும். அதனால் நண்பரிடம் பேசிக்கொண்டே, "வாங்க சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்" என்று உள்ளே கூட்டிச் சென்றேன். பார்த்தால் சாப்பாட்டு இடம் காலியாக இருந்தது. என்னடா இது என்று நினைத்து கோவிலில் உள்ள ஒருவரிடம் கேட்டால் "இன்று கூட்டம் அதிகம் வராது என்று நினைத்து சமைக்கவில்லையாம்" என்றார்.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் நண்பர் சொன்னார், "வாங்க பிரசாதம் சாப்பிடலாம்" என்று கூட்டி சென்றார். ஒரு வாளியில் எலும்பிச்சை பழ சாதமும், இன்னொரு வாளியில் பஞ்சாமிர்தமும் இருந்தது. பொதுவாக எலும்பிச்சை சாதம் ஒரு கரண்டிதான் கொடுப்பார்கள். நண்பர் என் நிலையை அறிந்து ஒரு பேப்பர் இலையில் நிறைய சாதம் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கோயிலின் ஓரத்திற்கு சென்று சாப்பிட ஆரம்பித்தோம். எனக்கே வெட்கமாக இருந்தாலும், பசி, என்ன செய்வது. அவ்வளவுதான் என் டின்னர்.

அத்துடன் வீட்டிற்கு வந்து இருக்க வேண்டும்?

ஆனால் நான் நண்பரிடம் பேச்சை வளர்த்தேன். "இப்பத்தான் கார் வாங்கி இருக்கீங்க. அதனால பார்த்து ஓட்டுங்க. வேகமா போகாதீங்க. இது தமிழ்நாடு போல இல்லை. உங்களுக்கே தெரியும், இங்க எல்லாம் ரொம்ப வேகமா ஓட்டுவாங்க. பக்கத்து டவுனுக்கு கார் எல்லாம் எடுத்து போகாதீங்க. கொஞ்ச நாள் ஆகட்டும். அதுவரை யாரையாவது துணைக்கு அழைத்து போங்க. நாம நல்லா ஓட்டுனாக்கூட பின்னாடி வரவன் வந்து இடிக்க சான்ஸ் இருக்கு. அதை நம்பளால தடுக்க முடியாது. ஆனா நாம நல்லா ஓட்டுனா நம்மால ஒரு விபத்தும் ஏற்படாது" என்று பெரிய ஒரு லெக்சர் கொடுத்தேன்.

பின் வீட்டிற்கு வந்து சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு தூங்க நினைக்கையில் இன்னொரு நண்பர் போன் செய்து நாளை பக்கத்து டவுனுக்கு போகலாமா? என்றார். "ஏன்?" என்றதற்கு, "போய் நல்லா சாப்பிட்டுவிட்டு அப்படியே சிங்கம் 2 பார்த்துவிட்டு வரலாம்" என்றார். நான் அதுவரை சிங்கம் 2வின் எந்த விமர்சனமும் படிக்காமல் இருந்தேன். அதனால், "சரி" என்று சொல்லிவிட்டு படுத்தேன்.

காலை எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பக்கத்து டவுணுக்கு சென்றோம். ஒரு தமிழ்க் கடையில் நன்றாக சாப்பிட்டோம். பின் பழைய துணிகளை போடும் இடத்திற்கு சென்றோம். அங்கே சென்று போட்டால் அவர்கள் அந்த துணிகளை ஏழை நாடுகளுக்கோ அல்லது அநாதை இல்லங்களுக்கோ அனுப்பிவிடுவார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே துணிகளை போடுவது வழக்கம். அங்கே துணிகளை சேர்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தியேட்டரை நோக்கி பயணமானோம். போகும் வழியில் ஏகப்பட்ட டிராபிக் சிக்னல். இரண்டு சிக்னலை கடந்து மூன்றாவது சிக்னலில் ஏகப்பட்ட கார்கள் நின்றன. நானும் சென்று நிறுத்தினேன். 

எனக்கு முன்னால் ஒரு இருபது கார்கள் இருக்கும். நான் நிறுத்தியவுடன் பின்னால் ஒரு கார் வந்து நினறது. ஒரு நிமிடம் கடந்து இருக்கும். 'டமால்' என்று ஒரு சத்தம். ஏதோ வெடித்தது போல் இருந்தது. என் கார் ஆடியது. நான் பூகம்பம் என்று நினைத்தேன். நண்பர் கார் வெடித்துவிட்டது என்று நினைத்து காரின் மேல் பார்த்தார். நான் பின்னால் பார்த்தேன். ஏகப்பட்ட பேர் ஓடுவது தெரிந்தது. காரை விட்டு இறங்கினோம். என் காரின் பம்பர் பூட் எல்லாம் நசுங்கி இருந்தது. பின்னால் உள்ள காருக்கும் முன்னாலும் பின்னாலும் சிறிய சேதம்தான் இருந்தது. ஆனால் என் காரின் பின்னால் உள்ள மூன்றாவது காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி பெட்ரோல் ஒழுகிகொண்டிருந்தது. 

எல்லோரும் பதட்டப்பட்டார்கள். ஆனால் நான் மிக தைரியமாக எல்லா காரியங்களும் செய்தேன். மூன்றாவது காரை கிரேன் வைத்துதான் தூக்கி வந்தார்கள். போலிஸ் ஸ்டேஷனுக்கு. பின் எல்லோரும் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் செய்து முடிக்க மணி மாலை 4 ஆனது. 'படம் பார்க்க முடியாது. போகலாம்' என்றேன். நண்பரோ விடாப்பிடியாக பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி ஆறு மணி காட்சிக்கு அழைத்து சென்றார். அதே காரில் தியேட்டர் சென்றோம்.

கம்பனியின் வேறு ஒரு காரை இப்போது பயன்படுத்துகிறேன். கார் வொர்க் ஷாப்பில் இருக்கிறது. திரும்பிவர பத்து நாட்கள் ஆகலாம். எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லை.

சிங்கம் 2 எனும் படத்தை எப்படி எல்லோரும் ஹிட் என்றும் அருமையான படம் என்றும் சொல்கிறார்கள் என்ற கவலைதான் என்னை வாட்டி வதைக்கிறது.

(ஏன் இந்த தலைப்பு? ஆழ்ந்து படித்தீர்களானால் ஒரு வேளை புரியலாம்)


6 comments:

சேக்காளி said...

//நாம நல்லா ஓட்டுனாக்கூட பின்னாடி வரவன் வந்து இடிக்க சான்ஸ் இருக்கு. அதை நம்பளால தடுக்க முடியாது//
இது தானே தலைப்பிற்கு காரணம்

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் நாம் சரியாக ஓட்டினாலும் பின்னால் வருபவர்களும் ஒழுங்காக ஓட்ட வேண்டும்தான்! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

ஜோதிஜி said...

பேசாமல் இதற்கு வேற விதமாக தலைப்பு வைத்திருக்கலாம்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

வரதராஜலு .பூ said...

இடிச்சவரு புது கார் எடுத்த, நீங்க அட்வைஸ் பண்ண உங்க ஃப்ரெண்டா?

டிபிஆர்.ஜோசப் said...

பார்த்து பேசணும்னு படிச்சப்போ பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் பேசாதேங்கறா மாதிரி ஏதோ சொல்ல வறீங்கன்னு நினைச்சேன்.

karthik said...

Sir,
Interesting post. Please write atleast one post over the week end.
There are many silent readers like me. every other day i come to your site to see if any posts.

Thanks
Karthik