Aug 2, 2013

வந்தனா!

ராமநாதனுக்கு ஒரே கவலையாய் இருந்தது. இந்த கவலை இன்று நேற்று வரவில்லை அவருக்கு. கடந்த ஐந்து வருடங்களாகவே இப்படித்தான். அவருக்கு இருக்கும் கவலை இன்று நாட்டில் பெண் குழந்தைகளை பெற்று இருக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் உள்ள கவலைதான். ராமநாதனுக்கு வரிசையாக மூன்றும் பெண்கள். அவர் ஒரு டிபிக்கல் தமிழ்நாடு சராசரி ஏழை அப்பா என்றுதான் சொல்ல வேண்டும். தாலுக்கா ஆபிஸில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார்.

அவரின் தற்போதைய கவலை எல்லாம் அவரின் முதல் பெண் வந்தனாவைப் பற்றித்தான். இந்த அக்டோபர் வந்தால் இருபது வயது முடிகிறது. இனி மாப்பிள்ளை பார்க்க வேண்டும். அதில் பிரச்சனை இல்லை. ஏனென்றால் அவரின் மூன்று பெண்களும் நல்ல அழகு. அம்மாவைப்போல. பிரச்சனை என்னவென்றால் அவர் கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை. வாங்கும் சம்பளம் கைக்கும் வாய்க்குமே சரியாகிறது. மூன்று பெண்களும் நல்ல முறையில் படிக்க வேறு வைக்கிறார். இந்த நிலையில் எங்கே சேமிப்பது?

அவரின் தர்மபத்தினி கமலாவோ அவருக்கு ஏற்றவாறு குடும்பம் நடத்துபவர். இது வேண்டும் அது வேண்டும் என்று எதையுமே என்றுமே கேட்டதில்லை. இப்படி தினமும் கவலைப்பட்டு பட்டே அவரின் தூக்கம் பறிபோனது. இன்றும் அப்படித்தான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். 'ஆண்டவன் ஏதாவது வழி காமிக்காமலா போய்விடுவான்?' என்று நினைத்து தூங்கி போனார்.

அடுத்த நாள் மாலை. வீட்டில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம். சத்தம் கொஞ்சம் அதிகமாகவே ராமநாதன் விசாரிப்பதற்காக அவரின் அறையை விட்டு வெளியே வந்தார். அவரின் வருகைக்கு பிறகு சத்தம் குறைய ஆரம்பித்தது.

"என்ன அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒரே சண்டை?'

"சண்டை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க?'

"அப்புறம் ஏன் சத்தம்?"

"உங்க பெண்ணையே கேளுங்க?'

"என்னம்மா?"

"ஒண்ணும் இல்லைப்பா?'

"எதுவா இருந்தாலும் சொல்லுமா?"

"உங்க கிட்ட எப்படிப்பா?"

"பரவாயில்லைம்மா. சொல்லு"

சிறிது நேரம் அமைதியான சூழ்நிலை நிலவியது. கமலாதான் பெண்ணைப் பார்த்து,

"கேக்கறாங்கள்ல. சொல்லு"

"அப்பா" என்று மெல்ல ஆரம்பித்தவள், "இந்த எதிர்வீட்டு கதிர் இருக்கான்லப்பா"

"ஆமாம், அவனுக்கென்ன?"

"இன்னைக்கு நான் காலேஜ் விட்டு வரும்போது எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்ப்பா"

"யாரு கதிரா? ரொம்ப நல்ல பையனாச்சே"

மனதில் கதிரின் உருவம் நிழலாடியது. நல்ல குடும்பத்து பையன். ஒரே பையன். நன்றாக படித்து முடித்துவிட்டு கை நிறைய சம்பளம் வாங்கும் வேலையில் இருப்பவன். இது வரை எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். தெருவிலே அவனுக்கு ரொம்ப நல்ல பெயர்.

"ஆமாம்பா?"

"நீ என்ன சொன்ன?"

"ஒண்ணும் சொல்லலைப்பா. மொறைச்சு பார்த்துட்டு வந்துட்டேன்"

"சரி சரி, பெருசாக்க வேணாம். நான் அவனை பார்த்து பேசறேன்"

வீடே சிறிது நேரத்தில் அமைதியானது. இரவு 9 மணி இருக்கும். ராமநாதன் பொதுவாக சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பார். தினமும் அவ்வாறு நடைப் பயிற்சி முடிந்து வரும் வழியில் தெருவின் முனையில் உள்ள டீக்கடையில் கதிரை பார்த்திருக்கிறார். இன்றும் அங்குதான் இருப்பான். கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தார். 9.30க்கு அவர் திரும்பி வருகையில் கடையில் கதிரைப் பார்த்தார். கதிரும் இவரைப் பார்த்தான். உடனே கடையை விட்டு வேகமாக நகர ஆரம்பித்தான். ராமநாதன்,

"கதிர், கொஞ்சம் நில்லுப்பா" என்றார்.

தயங்கியபடி நின்ற கதிரிடம், "என்னப்பா, என் பெண்ணுக்கு ஏதோ லெட்டர் கொடுத்தியாம்?"

"இல்லை அங்கிள்"

"என்ன இல்லை?"

"அங்கிள், உங்க பொண்ணுதான் முதலில் லெட்டர் அனுப்பியது"

"என்னது?"

"ஆமாம் அங்கிள்"

"உன் கிட்ட கொடுத்தாளா?"

"இல்ல அங்கிள். போஸ்ட்ல அனுப்பி இருந்தாங்க?"

"அதனால?"

"எனக்கும் பிடிச்சதால நானும் கொடுத்தேன்"

"சரிப்பா. நான் என் பெண் கிட்ட விசாரிக்கிறேன். இனிமே இது போல நடந்துக்காத. என்ன?"

"சரி. அங்கிள்" என்று வீட்டை நோக்கி விறுவிறு என நடக்க ஆரம்பித்தார்.

இரவு யாரிடமும் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டார். காலையில் ஆபிஸ் செல்லும் முன் பெண்ணிடம் தனியாக,

"என்னம்மா நீதான் முதல்ல ஏதோ லெட்டர் போஸ்ட் பண்ணியதா சொல்றான்"

"இல்லைப்பா. பொய்"

"சரிசரி, இனிமே பார்த்து நடந்துக்க"

"சரிப்பா"

இந்த விசயம் நடந்து முடிந்து ஒரு ஆறு மாதம் இருக்கும். வந்தனாவின் நடவடிக்கையில் சில மாற்றங்களை உணர்ந்தார். எப்போதும் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் வந்தனாவைப்பார்த்து சந்தோசமும் கவலையும் அடைந்தார். கமலாவிடமும் அதே சந்தேகத்தை கேட்டார்,

"ஏண்டி, கொஞ்ச நாளா வந்தனாவோட நடவடிக்கையில கொஞ்சம் வித்தியாசம் இருக்கு கவனிச்சியா?"

"ஆமாங்க. நானும் கவனிச்சேன்"

"கொஞ்சம் என்னான்னு விசாரிடி. பயமா இருக்கு"

"சரி விசாரிக்கிறேன். நீங்க நிம்மதியா தூங்குங்க"

அடுத்த நாள் மாலை. கமலாவும், வந்தனாவும் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ராமநாதனின் அருகே வந்தார்கள். சலனம் கேட்டு நிமிர்ந்தவர்,

"என்ன?" என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

"சொல்லுடி இப்ப" என்று கமலா அதட்ட, வந்தனா ஆரம்பித்தாள்,

"அப்பா, நான்..."

"சொல்லு"

"நான் கதிரை லவ் பண்ணறேன்பா. ப்ளீஸ் எனக்கு அவரையே கல்யாணம் பண்ணி வங்கப்பா"

"என்னம்மா சொல்ற?"

கமலா இடைமறித்தாள். "ஆமாங்க, இவ அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல் நிக்கறா?. நான் வளர்த்த விதம் சரியில்லை" அழ ஆரம்பித்தாள்.

வந்தனாவோ, "லவ் பண்ணா தப்பாப்பா"

"தப்பு இல்லைம்மா. நீ தைரியமா என் கிட்ட வந்து சொன்ன பாரு. அதுதான் உன் லவ்வை பத்தி சொல்லுது. ஏண்டி கமலா வருத்தப்படாத. நான் அவங்க அப்பா அம்மாட்ட பேசி பாக்குறேன்"

"தேங்க்ஸ்பா" துள்ளி குதித்து ஓடினாள் வந்தனா.

அடுத்த மூன்று மாதத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் கதிர் வந்தனா கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ராமநாதனால் 5 பவுனுக்கு மேல் போட முடியவில்லை. சம்பந்தி வீட்டார் ரொம்ப நல்ல டைப். ஒரு செலவும் ராமநாதனுக்கு வைக்காமல், கல்யாண செலவில் ஆரம்பித்து எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொண்டார்கள். கல்யாணம் முடிந்து, ரிசப்ஷன் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் ஓய்வு எடுக்க பக்கத்தில் உள்ள அறைக்கு சென்றார்கள். கதவு திறந்துதான் இருந்தது. முக்கியமான ஒரு பையை எடுக்க அந்த அறைக்கு சென்றார் ராமநாதன்.

வந்தனாவின் பேச்சுக்குரல் கேட்கவே கொஞ்சம் தயங்கி நின்றார்.

"ஏங்க இப்பவாவது உண்மையை சொல்லுங்க. அதான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல"

"என்ன உண்மைப்பா" கொஞ்சலுடன் கேட்டான் கதிர்.

"அதான் அந்த லெட்டர்"

"எந்த லெட்டர்"

"நான் முதல்ல எழுதுன லெட்டர்"

"ஆமா அதுக்கென்ன?"

"ஏங்க நான் எத்தனை தடவை சொல்றது அந்த லெட்டர் நான் எழுதுலைனு. நம்ப மாட்டேங்கறீங்க. என்னை கல்யாணம் பண்ணறதுக்காக நீங்களே உங்களுக்கு என் பெயர்ல லெட்டர் எழுதிக்கிட்டீங்க. அப்படித்தானே?"

"நான் ஏம்பா எழுதப்போறேன்"

"அப்போ அந்த லெட்டரை உங்களுக்கு என் பெயர்ல எழுதினது யாரு?"

ராமநாதன் சிரித்துக்கொண்டே அங்கிருந்து மனசு முழுவதும் சந்தோசத்துடன் திருப்தியாக பையை எடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.
4 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லதொரு சிறுகதை...

டிபிஆர்.ஜோசப் said...

அவங்க அப்பாவே எழுதிட்டாரா என்ன?

sriram said...

ரொம்பவே Expected Line ல இருக்கு உலக்ஸ் கதை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

karthik said...

Nice one page story.