Sep 18, 2013

மிக்ஸர் - 18.09.2013

கடந்த வாரங்களில் கூகிள் + பகிர்ந்தவை:

ஆறு நாட்களாக லால்குடியில் இருக்கிறேன். நடுவில் ஒரு நாள் சென்னை சென்று வந்தேன். நல்ல சாப்பாடு. நல்ல தூக்கம். கவலையோ அல்லது டென்ஷனோ எதுவும் இல்லை. ஜிம் இல்லை. வாக்கிங் இல்லை. பிள்ளைகளுடனும், குடும்பத்தாருடனும் சந்தோசமாக கழிகின்றன நாட்கள். மொத்தத்தில் சொர்க்கத்தில் இருக்கிறேன்.

"இப்படியே இப்படியே இருந்துவிடக் கூடாதா" என்று மனம் பாடிக்கொண்டே இருக்கிறது.

***************************************************************

சென்ற வாரம் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வந்த போது பார்த்த சம்பவம். ஏர் ஏசியாவில் டிக்கட் புக் செய்யும் போதே சீட் நம்பவரையும் நான் ரிசர்வ் செய்துவிடுவேன். முதல் ஐந்து வரிசை "ஹாட் சீட்" ஒரு சீட் 25 வெள்ளி. நான் எப்பொழுதும் 6 அல்லது 7 வது இருக்கையை ரிசர்வ் செய்துவிடுவேன். அதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால், திருச்சியில் இருந்து வரும்போது, முதலில் ஹாட் சீட் பயணிகளை ஏற்றுவார்கள். பின் கடைசி இருக்கையில் இருந்துதான் ஏற்றுவார்கள். காரணம் ஒரே நுழை வாயில். எப்பொழுதும் போல நான் காத்திருந்தேன். நான் தான் கடைசியில் ஏற வேண்டும். அப்பொழுது என் அருகே ஒரு ஆறு ஐயப்ப சாமிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் என் இருக்கைக்கு அருகில் போல என நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு பின் தான் அவர்கள் விமானத்தில் நுழைந்தார்கள். சில பேர் என் பின்னால் அமர்ந்தார்கள். பலர் பின் இருக்கைகளில். ஏன் அவர்கள் தயங்கி ஏறினார்கள் என்று பின் அறிந்து கொண்டேன்.

அனைத்து ஐயப்ப சாமிகளின் கைகளிலும் இரண்டு பிளேக் லேபிள் பாட்டில்கள்!

***************************************************************

பூண்டு துவையல்!

நேற்று இரவு திடிரென கி ராஜ நாராயணன் "கரிசல் காட்டு காவியம்" என்ற தொடரில் முன்பு ஆனந்த விகடனில் எழுதிய ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் கல்லூரியில் படித்த போது அந்த கட்டுரையை படித்தேன் என்று நினைக்கிறேன்.

எனக்கு பூண்டு துவையல் என்றால் கொள்ளை பிரியம். நல்ல எண்ணையுடன் பூண்டு துவையலை கலந்து சுடச்சுட இட்லிக்கு தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நான் அடிக்கடி விரும்பி சாப்பிடுவேன். எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என் மனைவி சென்ற வாரம் நான் மலேசியா கிளம்பிய போது கொஞ்சம் பூண்டு துவையலை ஒரு பாக்ஸில் வைத்துக்கொடுத்தார். வந்தவுடன் பிரிட்ஜில் வைத்தவன் அப்படியே மறந்தும் போனேன். 

நேற்று நினைவுக்கு வரவே இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டேன். சிறு வயதில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சாப்பாடு சரி இல்லை என்றால் தூக்கி எறிவேன். செல்ல பிள்ளையாக வளர்ந்ததால் யாரும் என்னை அடித்து வளர்க்கவில்லை. பிற்காலத்தில் தவறை உணர்ந்து என்னைத் திருத்திக்கொண்டேன். நேற்று சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை கழுவலாம் என்று நினைத்த போதுதான் கவனித்தேன். சிறிது துவையல் தட்டில் மீதம் இருந்தது. அதை தூக்கி போட மனம் வரவில்லை. அதுவும் என் மனைவி கையால் அரைத்து கொடுத்தது. உடனே அதை வழித்து எடுத்து மீண்டும்  பாக்ஸில் ஏற்கனவே இருந்த துவையலுடன் கலந்து பிரிட்ஜில் வைத்தேன். காலம் எப்படி என்னை மாற்றி இருக்கிறது பாருங்கள்!

அப்பொழுதுதான் எனக்கு கிரா எழுதிய அந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. என் நினைவில் இருந்து எழுதுகிறேன். ஏதேனும் பிழை இருக்கலாம்.

ஒரு முறை கிரா சாப்பிட உட்காருவார். மனைவி பறிமாறிக்கொண்டே இருப்பார். அப்பொழுது அவர் தட்டில் கீரை மசியலை வைப்பார். சாப்பிட்டு பார்ப்பார். இவருக்கு பிடிக்காது. அதே நேரத்தில் வாக்குவாதமும் வரும் என நினைக்கிறேன். அந்த கோபத்தில் கீரையை தூக்கி வீசி எரிவார். அது அப்படியே சுவற்றில் ஒட்டிக்கொள்ளும். பின் கோபத்துடன் எழுந்து சென்று படுத்துவிடுவார். நடு இரவில் பசி வரும். வயிற்றைக்கிள்ளும். என்ன செய்வது என்று தெரியாது. மெதுவாக படுக்கையை விட்டு எழுவார். சத்தம் போடாமல் ஹாலுக்கு வருவார். அப்படியே சுவற்றில் ஒற்றி இருக்கும் கீரையை வழித்து.....

***************************************************************

நேற்றைய "நீயா நானா" நிகழ்ச்சியில் கரு பழனியப்பனின் கருத்துக்கள் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் மனுஷ்யபுத்திரனுடன் அவர் விவாதித்த விதம் பிடிக்கவில்லை. மனுஷ்யபுத்திரன் எது சொன்னாலும் அவரை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற ஒரு முடிவோடு வந்தது போல் இருந்தது. அதே போல் வந்திருந்த ஒரு காதல் ஜோடி பேசிய விதம் ரொம்ப கேவலம். அதிலும் ஒரு குண்டு அம்மா, அவர் பெண்ணின் எல்லா சர்டிபிகெட்டுகளையும் அழித்ததை பெருமையுடன் சொன்ன போது அப்படியே அவரை ஒரு அறை விடலாமா? என்று இருந்தது. ஆனால் அவருக்கு கோபி பதில் அளித்த விதம் சூப்பர். 

***************************************************************

என்னோட ராசி நல்ல ராசி

இன்று அதிகாலை இந்த பாட்டை சன் டிவியில் பார்க்க நேர்ந்தது. எத்தனையோ நடிகர்கள் புதிதாக வந்திருக்கலாம். மிகவும் நன்றாக கூட ஆடலாம். ஆனால், தலைவர் சூப்பர் ஸ்டாரின் அழகான ஸ்டைலான இந்த நடனத்தை பாருங்கள். அப்படியே மனம் சந்தோசத்தில் துள்ளி குதிக்கும். என்றைக்குமே சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்.***************************************************************


2 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா..சாப்பிட்ட மிச்சத்தை கைப்போட்டு எடுத்து அப்படி கலந்து வைக்க கூடாது.ஃப்ரிஜ் என்றாலும் கெட்டு போக சான்ஸ் இருக்கும்.

Loganathan - Web developer said...

அருமையான பதிவு.