Sep 16, 2013

மூன்று சம்பவங்கள்!

என்னால் நம்ப முடியாத மூன்று சம்பவங்கள் நேற்று நடந்தன.

இட்லிக்கு மாவு ஊறவைக்கும் போதுதான் கவனித்தேன், வெந்தயம் கொஞ்சமாக இருப்பதை! நான் இருக்கும் இடத்தில் நம் சமையல் பொருட்கள் கிடைப்பது அரிது. எப்பொழுதும் பக்கத்து டவுனில் உள்ள கடைக்குச் சென்று மாதம் ஒரு முறை வாங்குவது வழக்கம். எங்கள் சிறிய கடை இருக்கிறது. அதை நடத்துபவர் தமிழர்தான். ஆனாலும் எல்லா பொருட்களும் எல்லா சமயங்களிலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே கிடைத்தாலும் அவைகள் பழைய ஸ்டாக்காக இருக்கும். அதனால் அங்கு நான் செல்வதே இல்லை. ஆனால் நேற்று வேறு வழியில்லை. அங்கே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கடைக்குச் சென்றேன். கடையின் ஓனர் இல்லை. அவருடைய பையன்தான் கடையில் இருந்தான். அவன் எனக்கு நன்கு தெரிந்தவன்தான். கோவிலுக்கு அடிக்கடி வருபவன். பூஜைகளில் கலந்து கொள்பவன். அவன் குடும்பமே தமிழ் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காத ஒரு குடும்பம். கடையில் நுழைந்ததுமே,

"என்ன வேண்டும் சார்?" என்றான்.

"200 கிராம் வெந்தயம் கொடுப்பா"

"வெந்தயம்னா"

"அதாம்பா வெந்தயம்"

"என்ன கலர்ல இருக்கும்? கருப்பாவா இல்லை பச்சையாவா"

பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடி வந்துவிட்டேன்.

*********************************************************

முதல் பத்தியில் சொன்னது போலவே எங்கள் ஊரில் ஒரு நல்ல தமிழ் ஹோட்டல் கிடையாது. எல்லாமே சைனிஷ் மற்றும் மலாய் உணவகங்கள்தான். நான் அங்கெல்லாம் செல்வதில்லை. பிள்ளைகள் இருக்கும்போது அவர்களுக்காக செல்வேன். ஒரு காலத்தில் KFC சிக்கன் வாரம் தவறாமல் சாப்பிடுவேன். பிசாவும் சாப்பிடுவேன். இப்பொழுது பிடிப்பதில்லை. பிள்ளைகளும் அருகில் இல்லாததால் அங்கே சென்று சாப்பிட பிடிப்பதில்லை. சைனிஷ் மற்றும் மலாய் கடைகளில் சாப்பிடாததற்கு காரணம், அவர்கள் அனைத்து உணவுகளிலும் அஜினோ மோட்டோ போடுகிறார்கள். அதனால் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரே ஒரு தமிழ் கடை இருக்கிறது. அங்கே சாப்பிட்டாலும் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. காரணம் ஒன்று அஜினோ மோட்டோ அல்லது அவர்கள் ஆனியன் பேஸ்டை பயன்படுத்துவதாக இருக்கலாம். எப்பொழுதாவது அங்கே சாப்பிட்டு என் உடம்பை கெடுத்துக்கொள்வதுண்டு. வாரம் முழுவதும் சமைப்பதால், ஒரு நாள் வெளியே சாப்பிட ஆசைப்பட்டு இந்த கொடுமைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின் முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ் கடை உள்ளது. 2000 வாக்கில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. மிகப்பெரிய ஹோட்டல் எல்லாம் கிடையாது. ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். வெளியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். மிகச்சிறிய கடை. ஆனால் சாப்பாடு மிகப்பிரமாதமாக இருக்கும். கணவன் மனைவி மட்டுமே அந்த கடையை நிர்வகிக்கிறாகள். பிள்ளைகள் எல்லோரும் படித்து முடித்து வேலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். நான் பல முறை கேட்டிருக்கிறேன்,

 "ஏன் நீங்கள் கடையை பெரிது படுத்தக்கூடாது?" என்று.

அவர் சொல்லும் ஒரே பதில், "வர வருமானம் போது சார்"

அவர் மனைவி வைக்கும் சிக்கன் குழம்புக்கும், சிக்கன் வறுவலுக்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு. அதில் 50 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சென்று விடுவேன். அப்படித்தான் நேற்றும் சென்றிருந்தேன். சாப்பிட்டு முடிக்கையில் அவர்களை பார்த்து நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்டேன்,

"நானும் 13 வருடங்களாக உங்கள் கடையில் சாப்பிட்டு வருகிறேன். அது எப்படி ஒரே டேஸ்டை மெயிண்டைன் செய்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது? சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"

அவர்கள் சொன்ன பதில்:

"நாங்கள் இருவருமே நான் வெஜ் சாப்பிடுவதில்லை. தீவிரமான வெஜிடேரியன்"

*********************************************************

அலுவலக விசயமாக வேறு ஒரு கம்பனியைச் சேர்ந்த இருவர் எங்கள் கம்பனிக்கு வந்தார்கள். அவர்கள் வேலை முடிந்தவுடன் என்னைப் பார்க்க விரும்பி என் அறைக்கு வந்தார்கள். மிகவும் சிரித்த முகத்துடன் ஒரு வயதானவர். இன்னொருவர் இளைஞர். அலுவல விசயமாக பேச ஆரம்பித்து, வாழ்க்கை முறை, எழுத்து, பாட்டு, யோகா, ஜிம், புத்தக வாசிப்பு, ஆன்மீகம், குடும்பம் மற்றும் எதிர்காலம் என்ற வகையில் பேச்சு நீண்டது. பின்புதான் தெரிந்தது கிட்டத்தட்ட ஏறக்குறைய ஒண்ணரை மணி நேரம் பேசி இருந்திருக்கிறோம். அவர்களை என் வாழ்க்கையில் நேற்றுதான் முதன் முறையாக சந்த்தித்தேன். அந்த பெரியவர் கிளம்பும்போது என் கைகளை பிடித்துக்கொண்டு,

"எனக்கு இன்று மிகவும் சந்தோசமான நாள். உங்களைப் போன்ற ஒரு மனிதரை சந்தித்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என்ன ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி உங்களுக்கு? அது அப்படியே என்னை தொற்றிக்கொண்டுவிட்டது. உங்களின் பேச்சு என்னை நிறைய சிந்திக்க வைத்துவிட்டது. நிறைய விசயங்களில் என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் போதும் என்ற மனத்துடன் சந்தோசமாக வாழும் ஒரு மனிதரை சந்தித்த மகிழ்ச்சி எனக்கு" என்று சொல்லி விடைப்பெற்றார்.

அப்படி என்ன நான் பேசினேன்? என்று யோசித்துப்பார்த்தேன், விடை தெரியவில்லை. அவர் சொல்லிய விசயங்களுக்கு நான் தகுதியானவன்தானா? என்று குழம்பியவன், இரவு மனைவிக்கு போன் செய்த போது விசயத்தைச் சொன்னேன்.

பொறுமையாக கேட்டுக்கொண்டார். சந்தோசமாக அவர்களின் பதிலை எதிர்பார்த்து ஒருவித டென்ஷனுடன் காத்திருந்தேன். 

சொன்னார்.

"முடிஞ்சா அவரை நல்ல ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்க"

*********************************************************


7 comments:

sundarmeenakshi said...

முடிஞ்சா அவரை நல்ல ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்க"
ithuthanga irupathila supero super

sundarmeenakshi said...

முடிஞ்சா அவரை நல்ல ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்க"
enna commant?

சேக்காளி said...

//வாழ்க்கை முறை, எழுத்து, பாட்டு, யோகா, ஜிம், புத்தக வாசிப்பு, ஆன்மீகம், குடும்பம் மற்றும் எதிர்காலம் என்ற வகையில்//
//முடிஞ்சா அவரை நல்ல ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்க//
அடுத்த தடவ அவரு வரும் போது மருத்துவம் பற்றியா

”தளிர் சுரேஷ்” said...

மூன்று சம்பவங்களுமே சிரிக்கவைத்ததுடன் சற்று சிந்திக்கவும் வைத்தது! பகிர்வுக்கு நன்றி!

எம்.ஞானசேகரன் said...

சுவையான சம்பவங்கள்.

அஜீமும்அற்புதவிளக்கும் said...

"முடிஞ்சா அவரை நல்ல ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்க"
சரியாக சொன்னார் சகோதரி.

faqirsulthan said...

அன்பரே! மலேஷியாவையே பார்த்த திருப்தி. வீட்டில் சமைக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி. மலேஷியாவில் வீட்டுச்சமையல் இல்லாததாலேயே மலாய் சைனீஷ் ரெஸ்டோரெண்ட்களும் மலாய் ஸ்டைல் முஸ்லிம் ஹோட்டல்களும் பிழைக்கின்றன. வீட்டுச்சமையல் அதிகமானால் அஜினமோட்டோ இருக்காது. அடுக்கடுக்கான நோயும் இருக்காது. கடைசி (வீட்டம்மாவின்) கமெண்ட் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.