Oct 18, 2013

ஏதோ எழுதுகிறேன்?


நான் எப்பொழுதும் மனைவியிடம் "இன்று அந்த பெண்ணிடம் பேசினேன். இந்த பெண் என்னை சாப்பிட கூப்பிட்டாள்" என்று சில தெரிந்த பெண்களின் பெயரை சொல்லி வம்பிழுப்பதுண்டு. உடனே அவர்கள், "ஆமாம். உங்க மூஞ்சிக்கு அவர்கள் எல்லாம் பேசுகிறார்களாக்கும்?" என்று பதிலுக்கு கலாய்ப்பார். இப்படித்தான் 14 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வாரம் திருச்சி சென்றபோது இதே போல ஒரு தருணத்தில், சாப்பாட்டு பிரச்சனையைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது நான்,

"அங்க எல்லோரும் என்ன சொல்றாங்க தெரியுமா? பேசாம இன்னொரு கல்யாணம் மலேசியால பண்ணிக்கன்னு சொல்றாங்க" என்றேன்.

பதிலுக்கு மனைவி, "நீங்க என்ன சொன்னீங்க?" என்றார்கள்.

நான் உடனே, "எப்படி நீங்க என்னிடம் இப்படி சொல்லலாம்? என் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்த்ததில்லை" என்று அவர்களிடம் சொன்னதாக சொல்லவும், வீட்டில் எல்லோரும் "ஓ ஓ ஓ" என்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் மனைவியோ மிகவும் கூலாக நான் எப்பொழுதும் வம்பிற்காக அவர்களிடம் சொல்லும் ஒரு பெண்ணின் பெயரை சொல்லி, 'அவளிடம் பேசிப்பார்த்தால்தானே உங்கள் வண்டவாளம் தெரியும்" என்று சொல்லி அந்த இடத்தை நகர்ந்து விட்டார்.

பெண்கள் எப்பொழும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

***********************************************

பல வேலைகளுக்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ‘நய்யாண்டி” படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்துப் பார்த்தேன். படத்தின் ஆரம்பம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், அதன் பிறகு வந்த காட்சிகள் ரசிக்கும் படியே இருந்தன. நானும் உள்ளுக்குள் ஒரு வித ஆசையுன்தான் படத்திற்கு சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்த எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் வேதனையாக இருந்தது. நஸ்ரியா ஒன்றும் அப்படிப்பட்ட அழகெல்லாம் இல்லை. ஏதோ ஓகே ரகம் தான். இணையத்தில் எங்கும் நஸ்ரியாவின் தொப்புள் பற்றிய பேச்சாகவே இருந்தது. நானும் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றி தேடித்தேடி பார்த்தேன். எந்த ஒரு சீனிலும் பார்க்க முடியவில்லை. ஒரே ஒரு முறை ஒரு பாட்டில் ஒரு செகெண்ட் பார்க்க முடிந்தது. அவ்வளவுதான். இங்கே எல்லாமே கட் செய்துவிட்டார்கள் போல!

**********************************************

கடந்த ஆறு மாதங்களாகத்தான் விஜய் டிவி மலேசியாவில் ஒளிப்பரப்பாகிறது. இப்பொழுது நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடிமையாகவே ஆகிவிட்டேன். தினமும் 9 மணிக்கு பார்க்கவில்லை என்றால் எதையோ இழந்தது போலவே இருக்கிறது. அப்படியே மிஸ் செய்தாலும், அடுத்த நாள் காலையில் யூடியுபில் பார்த்தவுடன்தான் அடுத்த வேலையே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியை பார்க்கும் போது ஒவ்வொரு உணர்வு ஏற்படுகிறது. சில நாட்கள் நம்மால் ஏன் இப்படி ஒரு சிறந்த பாடகனாக வரமுடியவில்லை? என்று அழுகையே வருகிறது. அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நான் எப்பொழுதும் நினைப்பது இதுதான், “ஒன்று பரம ஏழையாக பிறந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் பணக்காரனாக பிறந்து இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் பிறப்பவனுக்கு எதிலுமே உயரம் தொட முடிவதில்லை. இது என் கருத்து.

**********************************************

தினமும் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று நினைத்து தான் எழுத வந்தேன். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மாதம் ஒரு பதிவு எழுதுவதே பிரச்சனையாக இருக்கிறது. அந்த அளவிற்கு வேலைப்பளு. அப்படி என்ன வேலை என மற்றவர்கள் நினைக்கலாம்? நேரம் கிடைக்காமல் இல்லை. அப்படி நேரம் கிடைக்கும் சமயங்களில் எழுதும் மன நிலை ஏற்படுவது இல்லை. கடந்த ஒரு வருடங்களில் படிப்பதும் குறைந்துவிட்டது. எழுதுவதும் குறைந்துவிட்டது. என்னுடைய ஒரே ஒரு முடிவால் அனைத்தையும் ஒரே நாளில் சரி செய்து கொள்ள முடியும்? ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள்… பயமாக இருக்கிறது.

ஆனாலும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையில் பணம் ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நன்றாகவே தெரிகிறது. தெரிந்தும் சில முடிவுகள் எடுக்க பயமாக உள்ளது. போன பிறவியிலும், இந்த பிறவியிலும் நான் நிறைய புண்ணியம் செய்திருக்கிறேன். அதனால்தான் இந்த வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது பொய் என்று என் தனிமை எனக்கு உணர்த்துகிறது. உலகத்திலேயே உள்ள கொடுமையான தண்டனை தனிமைதான். அதுவும் நடு இரவில் விழித்துக் கொண்டீர்களானால், அவ்வளவுதான். இங்கே நான் செக்ஸை பற்றி சொல்லவில்லை. சில கெட்ட எண்ணங்கள் வந்து போகும் பாருங்கள்! அதிலிருந்து விடுப்பட்டு மீண்டும் தூங்குவது என்பது ஒரு கொடுமையான விசயம். இத்தனைக்கும் மாதா மாதம் இந்தியா செல்கிறேன். அடுத்த வாரம் கூட செல்கிறேன். ஆனால் ஓவ்வொரு முறை திரும்பி வரும்போதும், நம்மையறியாமல் கண்களில் ஒரு சொட்டு தண்ணீர் வரும் பாருங்கள்! அந்த வேதனையை அனுபவித்து பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

இன்னும் இரண்டு மாதத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவேன். பின் பழைய மாதிரி ஆகிவிடுவேன். ஆனால் மார்ச்சிலிருந்து “புதன்” வேறு வருகிறாராம். பார்ப்போம்!!!!

**********************************************

சென்ற மாதம் திருச்சி சென்ற போது கேல் ஏற்போர்ட்டில் நடந்த ஒரு சம்பவம். நான் அதிகாலையிலேயே செக்கின் செய்துவிட்டு, இமிகிரேஷனுக்காக காத்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் ஒரு இளைஞன். திடிரென ஏதோ வித்தியாசம் தோன்ற அவனைப் பார்த்தால், அவன் சட்டையில் உள்ள பட்டன்களை எல்லாம் கடித்து திங்க ஆரம்பித்தான். பின் திரென கீழே படுத்தான். எழுந்தான். ஓடினான். அங்கே இருந்த செக்யூரிட்டிகள் அலர்ட் ஆகி ஒரு தீவிரவாதி அளவுக்கு அவனை நினைத்துக்கொண்டு அவனை பிடிக்க ஓடினார்கள். பின் அவன் பேக்கிலிருந்த துணிகளை கடித்து திங்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி போலிஸ் சூழ்ந்தார்கள். நான் பார்த்தவரை அவனும் ஏதோ ஒரு நாட்டிற்குத்தான் செல்கிறான். அவனிடம் பாஸ்போர்ட் இருந்தது. போர்டிங் பாஸ் இருந்தது. என் முன்னால இருந்தவர்கள் நகரவே நானும் இமிகிரேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அதன் பிறகு அவன் என்ன ஆனான்? ஏன் அவன் திடிரென அப்படி நடந்து கொண்டான்? தெரியவில்லை. இனியும் எனக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் அவன் முகம் மட்டும் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.

**********************************************

6 comments:

Anonymous said...

வணக்கம்

வாழ்க்கையில் பணம் ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.

அருமையாக பதிவு அமைந்துள்ளது
படிக்கும் போது கண்ணீர் வந்துது நடந்த சம்பவத்தை எழுதியுள்ளிர்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

அனுபவப் பதிவுகளை
அனுபவித்துப் படிக்கும்படி
அருமையாக எழுதிருக்கிறீர்கள்
இப்போ அந்த ஏர்போர்ட் பையன்
எனக்குள்ளும்,,,
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

மென்பொருள் பிரபு said...

பதிவு எழுத நேரம் இல்லை என்றால் குரலை பதிவு செய்து போடலாம்.

உங்களிடம்தான் திறன்பேசி இருக்குமே. முதலில் பதிவின் ஒரு பகுதியாக இதை போடலாம். பிறகு குரல் பதிவை மட்டும் போடலாம்.

இது ஒன்றும் புதிதல்ல. ஆடியோ பிளாக்கிங்தான்.

பிரபல பெயர் Podcasting.

அப்லோட் செய்ய வசதியான தளம் soundcloud.com.

இதில் பாடி பாடகராகலாம்.

உங்கள் குரலை கேட்பதால், கேட்பவர்கள் இன்னும் தோழமை கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Unknown said...

அருமை!!!

இராய செல்லப்பா said...

நீங்கள் கூறுவது உண்மையே. எழுதுவதற்கு இன்றியமையாதது நேரம் மட்டுமல்ல, மனநிலையும் தான். இரண்டும் ஒத்துழைக்கும்போது தான் நல்ல எழுத்து வரும்.- கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை