Nov 18, 2013

நினைத்து நினைத்து!

எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை! ஏன் நான் இப்படி நடந்துகொள்கிறேன்? எனக்கு என்ன குறை? ஒன்றும் இல்லை. எல்லாமே நல்லபடியாகத்தான் நடநக்கிறது!. என்ன ஒன்று, எனக்கு எதுவுமே உடனே நடக்காது. எல்லாமே லேட்டாகத்தான் நடக்கும். ஆனால் நல்லதுதான் நடக்கும். அப்படித்தான் என் கல்யாணமும் நடந்தது. தங்கைகளுக்கு கல்யாணம் நடந்து, வீட்டு கடன் எல்லாம் அடைத்து அப்பா எனக்கு பெண் பார்க்கும் போது நான் 30 வயதை கடந்துவிட்டேன். அல்மோஸ்ட் என் மார்க்கெட் முடிந்து போய் நான் ஒரு விலை போகாத சரக்காக ஆகிவிட்டிருந்தேன். நான் நல்ல ஓரளவு சம்பளம் வாங்க கூடிய வேலையில் இருந்தாலும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. அப்பா பார்க்காத இடம் கிடையாது. எல்லாம் பொருந்தி வந்தால் பெண் சுமாராக இருப்பாள். நான் ஒரு ஸ்டேஜில் பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அந்த சமயத்தில்தான் ஜோதியின் ஜாதகம் வந்தது.

ஜாதகம் எல்லாம் பொருந்தி இருப்பதாகவும் உடனே பெண் பார்க்க வருமாரும் அவர்களிடமிருந்து கடிதம் வந்தது. அவ்வளவுதான் அப்பா உடனே பெண் பார்க்க போகலாம் என்று சொல்லிவிட்டார். நானும் வேறு எந்த விபரமும் கேட்கும் நிலையில் இல்லை. எப்படியாவது கல்யாணம் ஆனால் போதும் என்று நிலையில் நான் இருந்தேன். ஆபிஸுக்கு ஒரு நாள் லீவு சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்பினோம். என் நண்பனின் காரில்தான் சென்றோம். ஒரு மணி நேரத்தில் பெண்ணின் வீட்டை அடைந்தோம். போகும் வழியிலேயே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி முகத்தை கழுவி ஒரு இஞ்ச் பவுடர் அடித்துக்கொண்டேன். அவர்களின் வீட்டை அடைந்தோம். மிக மிக சிறிய வீடு. ஆனால் சுத்தமாக வைத்திருந்தார்கள். எனக்கு வீட்டில் நுழைந்தவுடன் எனக்கு பிடித்த ஒரே விசயம் வரவேற்பறையில் இருந்த அரவிந்தர் படமும் அம்மாவின் படமும்தான். வழக்கமான பேச்சுகள் முடிந்து, பெண்ணை அழைத்தார்கள். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. 34வயதில் முதல் முதலில் ஒரு பெண்ணை திருமணத்திற்காக பார்க்க போகிறேன். இதயம் படபடக்க ஆரம்பித்தது. அந்த வயதுவரை எனக்கு திருமணம்தான் ஆகவில்லையே தவிர பல கனவுகளை மனதில் புதைத்து வைத்திருந்தேன். அந்த கனவுகளோடு காத்திருந்தேன்.

பெண்ணை அவள் அம்மா அழைத்து வந்தார்கள். என் சப்த நாடியும் அடங்கிவிட்டது. காரணம் பெண் அத்தனை அழகு. நல்ல கலர். அதைவிட முக்கியம் ரொம்ப இளமை. இவ்வளவு அழகான பெண் நமக்கா? என்ற ஆச்சர்யத்தில் என்னால் எதுவும் பேச முடியவில்லை. அதன் பிறகு நடந்தது எல்லாம் எனக்கு நினைவில்லை. காரில் வரும் போது அப்பா கேட்டார்,

"என்னடா அருண், பொண்ண பிடிச்சிருக்கா?"

பதில் சொல்லவில்லை. ஏதோ மனதில் தோன்றியது. நெருடியது. காருக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா டென்ஷனாகி,

"ஏண்டா உன்னத்தான், கேட்கறேன்ல, பொண்ணு புடிச்சிருக்கா?"

அதற்குள் அம்மா, "அவன் என்ன சொல்றது. இவ்வளவு லட்சனமான பொண்ணு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்"

உடனே தங்கை, "ஆமாம்பா. அண்ணி சூப்பர்" அதற்குள் அவள் அண்ணியாகிவிட்டாளா?

"என்ன நீங்களே பேசிட்டு இருக்கீங்க? அவன் பேசாம இருக்கான்"

இதுக்கு மேல் பதில் சொல்லாமல் இருக்க கூடாது என்று நினைத்து, "அப்பா புடிச்சிருக்கா இல்லையா அப்படிங்கறது அப்பறம், அந்த பொண்ண பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா இருக்கே"

"அதனால என்ன?"

"எப்படிப்பா? இது பாவம் இல்லையா?"

"என்னடா பாவம்? இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? 10 வருசம் சின்ன பொண்ணுதான் ஒத்துக்கறேன். அவங்களே சரின்னு சொல்றாங்க. உனக்கு என்ன?"

"அதுக்காக இவ்வளவு சின்ன பொண்ணையா?"

"இப்போதைக்கு இது ஒரு ஜாதகம்தான் பொருந்தி இருக்கு. இதையும் விட்டாச்சுன்னா ரொம்ப கஷ்டம். அதுக்கு அப்புறம் எப்ப உனக்கு பொண்ணு தேடி.. சொல்லவே கஷ்டமா இருக்கு"

"சொல்லுங்கப்பா. அதுக்கு அப்புறம் எனக்கு கல்யாணமே ஆகாதுன்னுதானே சொல்றீங்க. அதானே? பரவாயில்லை. காலம் முழுதும் இப்படியே இருந்துட்டு போறேன்"

"பெரியவங்க சொல்றத கேட்கறானா பார்த்தியா?"

"முடியாதுன்னா முடியாதுப்பா"

சந்தோசமாக பெண் பார்க்க சென்ற நாங்கள் சோகத்துடன் வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் உண்மை வேறு. எனக்கு ஜோதியை ரொம்பவே பிடித்து இருந்தது. கல்யாணம் செய்தால் அவள்தான் என்று மனம் சொல்லியது. இருந்தாலும் வயது வித்தியாசம் என்னை எதுவும் பேச விடாமல் தடுத்தது.

பின் அப்பா என்னென்னவோ செய்தார். தினமும் எனக்கு அறிவுரையாக அள்ளி வழங்கினார். எல்லா நண்பர்களிடமும் பேசினார். எல்லோரும் என்னை நச்சரிக்க ஆரம்பித்தார்கள். நான் ஜோதியைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நான் எதிர்பார்த்ததும் அதுதானே!

ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் திருமணம் இனிதே நடந்தது. அதன் பிறகு என் வாழ்க்கையில் சந்தோசம் தான். அழகான இரண்டு குழந்தைகள். நாங்கள் இருவரும் வாழ்ந்த/வாழும் வாழ்க்கை அப்படி ஒரு இன்பகரமான வாழ்க்கை. பதினைந்து வருடங்கள் கழிந்தும் இன்னும் அந்த மோகம் முறையவில்லை. குறையாமல் பார்த்துக்கொள்கிறோம். எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே இந்த கதையை இந்த இடத்தில் நிறுத்தி "சுபம்" போட்டு முடித்துவிடலாம்தான். எல்லோருக்குமே சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படி என்னால் முடிக்க முடியாது. நான் சொல்ல வந்ததை சொல்லித்தானே ஆக வேண்டும்.


அப்படி என்ன பிரச்சனை எனக்கு? எல்லாமே சந்தோசம்தானனே?. ஆனாலும் எனக்கு ஒரு குறை மனதை அரித்துக்கொண்டே இருக்கிறதே? அதானே மனித இயல்பு. எல்லாமே கிடைத்தால் அப்படியே இருந்துவிட மாட்டோமே! தேடிப்பிடித்து கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவோம் அல்லவா? அப்படித்தான் இதுவும்? ஜோதி என்னதான் டவுனில் வளர்ந்திருந்தாலும், அவள் மிகவும் கட்டுப்பாடுடன் வளர்ந்திருந்ததால் ரொம்ப ரொம்ப ஹோம்லியாகத்தான் உடை உடுத்துவாள். எனக்கு பெண்களை மாடர்ன் டிரெஸ்ஸில் பார்ப்பதில்தான் கிக்.

அதுவும் என் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்றால், தலை வாரி இருக்க கூடாது. சடை பின்னாமல் தோள்வரை முடி பரவி இருக்க வேண்டும். லிப்ஸ்டிக் பூச வேண்டும். ஜீன்ஸ் போட வேண்டும். கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். ஸ்கர்ட், லாங் ஸ்கர்ட் அணீய வேண்டும். வீட்டில் நைட்டி உடுத்த வேண்டும். சில சமயம் ஷார்ட்ஸில் இருக்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மிகச் சிறிய ஸ்கர்ட் அணிய வேண்டும். இரவு படுக்கை அறையில் இரவு உடை அணிய வேண்டும். ஆனால் அது நைட்டி போல் இருக்க கூடாது. ஈசியாக இருக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். இப்படி பல ஆசைகள். இன்னும் இன்னும் சொல்லலாம்தான். இதே போதும் விடுங்கள்.

ஆனால் ஜோதி இதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பாள். இது எதுவுமே அவளுக்கு பிடிக்காது. எத்தனையோ முறை சொல்லிப்பார்த்தும், சண்டை போட்டும் அவள் திருந்தவே இல்லை. எப்பொழுதுமே புடவைதான். ஆனால் நீட்டாக இருப்பாள். ஆனால் என் ஆசை அதுவல்லவே? இந்த உடை விசயத்தில் மட்டும்தான் குறையே தவிர மத்த விசயத்தில் எங்களுக்குள் எந்த குறையும் இல்லை. ஆனால் மனதில் இந்த ஒரு குறை மட்டும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.

அதனால் ஆபிஸில் உள்ள பெண்களை கண்ட மேனிக்கு சைட் அடிக்க ஆரம்பித்தேன். ஆனால் வேறு விதமாக செல்ல மனம் மறுத்தது. ஜோதிக்கு துரோகம் பண்ண விரும்பவில்லை. இப்படியே வாழ்க்கையை ஓட்டிவிடவேண்டியதுதான் என்று வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இதோ இன்றைக்கும் அதே சிந்தனைதான். அலுவலகத்தில் இருக்கும் எங்கள் ரிசப்சனிஷ்டை பார்த்தேன். நான் நினைத்தது போல் உடை உடுத்தி இருந்தாள். அவள் ஒரு மாதிரி என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நான் இதுவரை அவளிடம் எந்த சில்மிஷமும் செய்ததில்லை. ஆசை இருந்தாலும்...ம்ம் எவனுக்கோ? என்று நினைத்துவிட்டு வெளியே வந்தேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இன்று ஜோதியின் பிறந்த நாள் அவளுக்கு ஏதாவது ஸ்வீட் வாங்கலாம் என்று நினைத்து அருகில் உள்ள பெரிய ஹோட்டலுக்கு சென்றேன்.

அப்பொழுதுதான் கவனித்தேன். ஹோட்டலுக்கு வெளியே உள்ள புல் தரையில் உள்ள தூணின் அருகே கவனித்தேன். அவள் நின்றிருந்தாள். எங்கள் ரிசப்ஷனிஸ்ட் ஸ்வப்னா போல இருந்தது. நான் சொன்னேன் இல்லையா? அதே கவர்ச்சி உடையில். லாங்க் ஸ்கர்ட், டைட் டாப்ஸ். பின்னால்தான் பார்க்க முடிந்தது. தலை முடியை தோள்வரை விட்டிருந்தாள். முடி காற்றில் அலை பாய்ந்தது. ஷாம்பு போட்டு குளித்திருப்பாள் போல! டாப்ஸ் கொஞ்சம் அதிகமாகவே டைட் ஆக இருந்தது போல் இருந்தது. அவ்வளவுதான் மனம் சஞ்சலம் அடைய தொடங்கியது. அவளிடம் பேசி பார்த்தால் என்ன? நிச்சயம் ஒத்துக்கொள்வாள். ஒரே ஒரு முறைதானே! அதன் பின் வேண்டவே வேண்டாம். மனதில் இருக்கும் அந்த ஒரே ஒரு அழுக்கும் நீங்கிவிடும்.

பலவிதமான சிந்தனைக்கு பிறகு மெல்ல அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மனதில் இனம் புரியாத ஒரு பயமும், ஆசையும் ஒரு சேர வந்தது. இன்று ஒரு நாள் இவளை மாடர்ன் டிரெஸ்ஸில், ம்ம்ம்ம்ம், மனம் சிறகடிக்க, உடம்பு சூடாக அவளை நெருங்கி,

"ஹேய் ஸ்வப்...."

மெல்ல திரும்பியவள், "ஏங்க இவ்வளவு நேரம்? அப்பவே ஆபிஸ் விட்டு கிளம்பிட்டீங்களாமே? இன்னைக்கு பிறந்த நாள் அதுவுமா உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு, உங்களுக்கு புடிச்சமாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு உங்க ஆபிஸுக்கே வந்தா...நீங்க என்னடான்னா?....." பேசிக்கொண்டே சென்றவளை ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியுடன் பார்த்து..கொண்டே இருந்தேன்....
4 comments:

இராய செல்லப்பா said...

உம்...அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதா! வாழ்த்துக்கள்!

A Layman said...

எல்லாமே சரி.
கதாநாயகன் சென்ற அதே ஹோட்டலுக்கு கதாநாயகியும் எப்படி சரியாக வந்து காத்திருக்கிறார் என்று யோசிக்கும் போது எங்கோ இடிக்கிறது!

A Layman said...

எல்லாமே சரி.
கதாநாயகன் சென்ற அதே ஹோட்டலுக்கு கதாநாயகியும் எப்படி சரியாக வந்து காத்திருக்கிறார் என்று யோசிக்கும் போது எங்கோ இடிக்கிறது!

சூரியா இராஜப்பா said...

changes never change boss