Nov 25, 2013

அந்த சிறுவனின் கண்கள்


இரண்டு நாட்களுக்கு முன் வெளியே சாப்பிட சென்றிருந்தேன். ஹோட்டலில் வேலை செய்தவர் சாம்பாரை எடுத்து எனக்கு சாதத்தில் ஊற்றுகையில் கொஞ்சம் என் சட்டையில் பற்றுவிட்டது. அவர் பதறிவிட்டார். என்னிடம் மன்னிப்பு கேட்டார். சட்டையில் சாம்பார் பட்டதும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த அளவிற்கு கோபம் வரவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்கிறேன்.

கல்லூரி முடித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த போது எதற்கு எடுத்தாலும் கோபம் வரும். என்னுடைய கோபங்கள் எல்லாம் பொதுவாக போஸ்ட் ஆபிஸ் ஊழியர்கள், பேங்க் ஊழியர்கள் இவர்கள் மீதுதான் அதிகம் இருக்கும். அப்போது அதற்குறிய காரணம் தெரியாவிட்டாலும் இப்போது தெரிகிறது. அவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருக்கிறார்களே என்ற பொறாமையில் அப்படிப்பட்ட கோபம் வந்திருக்கலாம். ஒரு முறை ஒரு பேங்க் ஊழியருடன் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. காரணம் எல்லாம் ஒன்று பெரிதாக இல்லை. பணம் கொடுக்க கொஞ்சம் லேட் செய்துவிட்டார் அவ்வளவுதான். அவரைப் பிடித்து திட்டி, அவரும் என்னைத் திருப்பி திட்ட ஆரம்பித்து, மிகப்பெரிய ரகளை ஆகிவிட்டது. இப்பொழுது யோசித்துப்பார்த்தால் இது எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று தெரிகிறது. ஆனால் இப்போது தெரிந்து என்ன பிரயோசனம்?

ராணிப்பேட்டையில் இருந்த போது ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவது வழக்கம். அந்த மெஸ்ஸின் உரிமையாளர் மிக நல்ல நண்பர். நான் மெஸ்ஸிற்கு சென்றால் என்னை நன்றாக கவனிப்பார். அவர் மட்டும் அல்லாது அங்கு உள்ள ஊழியர்கள் அனைவருமே என்னை மிகவும் அன்பாகவே நடத்துவார்கள். அங்கே ஒரு சின்னப் பையன் வேலையில் இருந்தான். படிக்க வேண்டிய வயதில் மெஸ்ஸில் வேலைப் பார்த்தான். பயங்கர சுறுசுறுப்பாக வேலை செய்வான். ஆனால் வாய் கொஞ்சம் அதிகம். பல சமயம் அவன் பேசினால் கடுப்பு வந்தாலும் சிறு பையன் தானே என்று  பொறுத்துக்கொள்வதுண்டு.

‘ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது, சளி பிடிக்காது, நெஞ்சில் சளி இருந்தால் அப்படியே வெளியே வந்துவிடும்’ என்று நண்பர்கள் சொன்னதால், மெஸ் நண்பரிடம் ஆட்டுக்கால் சூப் தினமும் காலையில் வேண்டும் என்று சொன்னோம். அவர் ஒப்புக்கொண்டு எங்கள் அறை நண்பர்களுக்காக மட்டும் தினமும் சூப் செய்து காலையில் அனுப்புவார். அப்பொழுது எல்லாம் தினமும் யோகாசன பயிற்சி செய்வதுண்டு. இப்பொழுது இல்லை. போன வருடத்திலிருந்து நிறுத்திவிட்டேன். காரணம் ஒன்றுமில்லை. நேரம் இல்லை. வாக்கிங் செல்வதோடு சரி. மாலையில் ஜிம் செல்கிறேன். அவ்வளவுதான். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நான் வாக்கிங் செல்வதையும், ஜிம் செல்வதையும் எழுதுகிறேன். காரணம் தற்பெருமைக்காக அல்ல. படிக்கும் நண்பர்களும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி தினமும் செய்ய நான் எழுதுவது ஒரு தூண்டுதலாக இருக்காதா? என்ற ஆசையில்தான்.

அப்படி ஒரு நாள் யோகாசன பயிற்சியில் கண்களை மூடிய நிலையில் சர்வாங்க ஆசனத்தில் இருந்த போது, திடிரேன காலில் இருந்து மூளைக்கு ஒருவித வலி மாதிரி ஒரு உணர்வு தோன்ற உடனே கண்களைத்திறந்து பார்த்தால், அந்த மெஸ் பையன் அருகில் நின்று தன் கை நகத்தால் என் உள்ளங்காலில் கீறிக்கொண்டிருந்தான். எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது என்று தெரியவில்லை. உடனே எழுந்து அவன் கைகளை முறுக்கினேன். ஆனால் அடிக்கவில்லை. திட்டமட்டும் செய்தேன் (யோகாசனம் செய்யும் போது அப்படி உடனே எழுந்திருக்கக்கூடாது. ‘சவாசனம்’ செய்து முடித்த பின் பொறுமையாகத்தான் எழுந்து கொள்ள வேண்டும். அதே போல் எனக்கு வந்தது போல் இப்படி அதீத கோபமும் வரக்கூடாது). பின் அவன் சென்றுவிட்டான்.

எனக்கு என்னுடைய கோபம் குறைய சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அலுவலகத்துக்கு கிளம்பினேன். நான் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே வந்து கொண்டிருக்கையில் அந்த பையன் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். பார்த்தால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அருகில் சென்று என்னடா? என்று விசாரித்தால், மீண்டும் தேம்பி தேம்பி அழுதான். விசாரித்தப்பின் மெல்ல கூறினான், “ஓனர் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். உடனே பயங்கரமாக அடித்துவிட்டார். உங்களிடம் மன்னிப்பு கேட்டு வரச்சொன்னார்” என்றவனின் கன்னத்தைப் பார்த்தேன். அவர் அடித்ததால் அந்த கன்னம் வீங்கி இருந்தது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெஸ்ஸிற்கு சென்று அவரைச் சத்தம் போட்டேன். அதற்கு அவர் என் கண் முன்னாலேயே, “வேலைக்கார நாய்க்கு அப்படி என்ன கொழுப்பு?” என அவனை அடிக்க போய்விட்டார். கோபத்தில் சாப்பிடாமல் ஆபிஸ் சென்றுவிட்டேன்.

அதன் பிறகு வந்த நாட்களில் அவன் என்னிடம் பேசவே இல்லை. அவனிடம் இருந்த அந்த நகைச்சுவை உணர்வை மீண்டும் நான் பார்க்கவே இல்லை. அவன் மனதில் என்னை எப்படி எல்லாம் திட்டினானோ தெரியவில்லை. என்னிடம் அவன் பேசுவதையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டான். அவனுடைய அந்த புறக்கணிப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் மலேசியா வரும் வரையில் அவன் என்னிடம் பேசவே இல்லை. இன்றும் என் மனதில் அது ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. ‘யார் பெற்ற பிள்ளையோ? என்ன காரணத்தினால் படிக்க முடியாமல் அந்த வேலையில் சேர்ந்தானோ” அவனின் அழுத கண்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதிலிருந்து நான் எந்த ஊழியர்களையும் எந்தக் காரணத்தைக்கொண்டும் திட்டுவதில்லை. அவர்களை மதிக்க கற்றுக்கொண்டேன்.

இந்த விசயத்தையும் ஏற்கனவே எழுதி இருக்கேனா? தெரியவில்லை. எழுதி இருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை சொல்கிறேன். நல்ல விசயம் தானே? மலேசியாவிலிருந்து சென்று திருச்சி ஏர்போர்ட்டை அடைந்ததும், எல்லோரும் அவரவர்கள் வீட்டிற்கு போகத் துடிப்பார்கள். நானோ மெதுவாக பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஒரு இரண்டு இட்லியாவது சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வேன். காரணம் அங்கே ஒரு சர்வர் இருக்கிறார். சரியாக அவரால் நடக்கக் கூட முடியாது. காரணம் நடந்து நடந்து ஓய்ந்து போனவர். வயதானவர். சர்வர் வேலையில் இருந்து கொண்டே தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்திருக்கிறார். ஒரு முறை என் டிரைவர் அவரை தாமதமாக இட்லி கொண்டு வந்ததற்கு திட்ட, நான் டிரைவரை கண்டித்து, “என் பசிக்கு சாப்பாடு போடும் இவர் தெய்வம் பொன்றவர். ஹோட்டல் உரிமையாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா இவர் கைகளால் தானே நான் உணவைப் பெற்று உண்கிறேன்” என்றேன்.

கேட்ட அவர் கண்களில் இருந்து கண்ணீர். காரணம் நான் கேட்கவில்லை. அது எனக்கும் அவருக்கு மட்டும் தெரிந்த உண்மை.

அவருக்காகவே அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி செல்கிறேன்.

நண்பர்கள் எல்லோரும், “உன் பதிவுகளைப் படித்தால் நீ ரொம்ப நல்லவன்” என்ற இமேஜே வருகிறதே? நீ திருந்தவே மாட்டாயா?” என்கிறார்கள். நான் என்ன செய்வது? எப்படி எழுத ஆரம்பித்தாலும் இப்படித்தான் வந்து முடிந்து தொலைகிறது. அதற்காகத்தான் கதைகள் எழுதுகையில் நான் கெட்டவனாகி விடுகிறேன்.

 

 

5 comments:

Anonymous said...

வணக்கம்
பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

எப்படியோ கோவத்தை அடக்க பழகிக்கிட்டீங்க. அந்த வரையில் ரொம்ப நல்லது. பாராட்டுகள்.

சேக்காளி said...

//அந்த மெஸ் பையன் அருகில் நின்று தன் கை நகத்தால் என் உள்ளங்காலில் கீறிக்கொண்டிருந்தான்//
அதென்ன அப்படி ஒரு பழக்கம்?

”தளிர் சுரேஷ்” said...

கோபம்தான் நமது சத்ரு! நானும் நிறைய முறை இப்படி கோபப்பட்டுள்ளேன்! இப்போது சாதுவாகிவிட்டேன்! நன்றி!

எம்.ஞானசேகரன் said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.