எழுதாமல் இருக்க முடியாது
போல! முதலில் ஃபேஸ் புக் ஸ்டேட்டஸை இங்கே போஸ்ட் செய்கிறேன். இனி தொடர்ந்து எழுத முடியுமா?
என்று பார்ப்போம்!
************************************************************************
திஜாவின் “மோகமுள்” ஒரே மூச்சில்
படித்து முடித்தேன். ஒரு வாரம் முழுவதும் யமுனா மனதில் நிறைந்து இருந்தாள். சென்ற வாரம்
கும்பகோணம் சென்றிருந்தேன். முன்பு பார்த்ததைவிட அதிக ஆர்வத்துடன், கும்பகோணம், பாபநாசம்
பார்த்தேன். நாவலை படிக்கும் போது எத்தனையோ முறை கண்கள் கலங்கினாலும், தங்கம் என்ற
அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதை படித்த போது என்னால் தாங்க முடியாமல் அழுதுவிட்டேன்.
சென்ற வாரம் ஊரில் இந்த நாவலைப்
பற்றி அக்காக்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருமே ஏற்கனவே படித்திருந்தார்கள்.
நான் நாவலைப் பற்றி ஒரு மணி நேரம் சிலாகித்து பேசியதைப் பார்த்து, மூன்றாவது அக்கா
கேட்டாள்:
‘இப்போது ஒப்புக்கொள்கிறாயா?”
“என்ன?”
“நாவல் என்ன? கதைகள் என்றால்
என்ன? எப்படி எழுத வேண்டும் என்று?”
“ம்ம்ம்ம்”
“நீயும் எழுதி இருக்கிறாயே?
நீ எழுத ஆரம்பிக்கும் முன் இதை எல்லாம் படித்திருக்க வேண்டாமா?”
ஒரு பதில் சொல்ல நினைத்து
வேண்டாம் என்று அமைதியாகிவிட்டேன்! அது என்ன பதில் என்று உங்களிடமும் சொல்ல எனக்கு
விருப்பம் இல்லை.
‘மோகமுள்’ முடித்து ‘57 ஸ்நேகிதிகள்’
படித்தேன். இன்று ‘அம்மா வந்தாள்’ முடித்து ‘பிலோமி டீச்சர்’ கையில் எடுக்கிறேன். நான்
வேண்டுமென்றேதான் இதை செய்கிறேன். பார்ப்போம்!!! ஆனால் அம்மா வந்தாளைப் பற்றி சொல்ல
வேண்டும்.
“அம்மா வந்தாள்” மூன்று நாட்களில்
படித்து முடித்தேன். படிக்கும் போது கோபம், எரிச்சல், சந்தோசம், அழுகை என உணர்ச்சிகள்
மாறி மாறி வந்தன. இந்த நாவலை நான் இப்பொழுதுதான் படிக்கிறேன். ஆனால் இதே போல ஒரு சிறுகதையை
நான் எழுதி இருக்கிறேன். அந்த கதை கூட நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் எழுதினேன்.
ஆனால் அதற்காக நான் வாங்கிய வசவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த காலத்திலேயே இப்படி என்றால்
1966ல்? எப்படி அதை திஜா எதிர்கொண்டார்? தெரியவில்லை.
இதை விடுங்கள். இந்த நாவலுக்கு
திரு சுகுமாரன் 2011 டிசம்பரில் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் பாருங்கள்! ஆண்டவா!
ஒரு நாவலை இப்படிக்கூட அணுக முடியாமா? அற்புதமான முன்னுரை.
திஜாவின் ஒவ்வொரு நாவலும்
படித்து முடித்தவுடன் மனதை என்னவோ செய்கிறது. மனம் சரியாக ஒரு வாரம் ஆகிறது! எழுதினால்
இப்படி அல்லவா எழுத வேண்டும்!
************************************************************************
கடந்த 17 வருடங்களாக விமானத்தில்
பல முறை பயணித்து இருந்தாலும், பல அனுபவங்கள் பெற்று இருந்தாலும், சென்ற வார சிங்கப்பூர்
பயணம் எனக்கு பயங்கரமான அனுபவமாக அமைந்துவிட்டது. சீட் பெட் அணியும் முக்கியத்துவத்தையும்
எல்லோருக்கும் நன்றாக உணர்த்திவிட்டது. ஏற்கனவே விமானம் 30 நிமிடம் தாமதமாக கோலாலம்பூரில்
இருந்து கிளம்பியது. ஒரு மணி நேரப்பயணம் என்று கூறினாலும், 45 நிமிடங்களில் சிங்கப்பூரை
அடைந்து விடலாம். 40 நிமிட பயணம் முடிந்து இன்னும் சில நிமிடங்களில் தரை இறங்க வேண்டும்.
ஏறக்குறைய இறங்கிவிட்டது. Laguna National Golf Groundக்கு அருகில் விமானம் வந்துவிட்டது.
நான் வழக்கம் போல அன்றைய நாளின் முதல் சந்திப்பைப் பற்றியும் என்ன பேச வேண்டும் என்பதைப்
பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தேன்.
கீழே தரை மிக அருகில். இன்னும்
இரண்டு நிமிடம்தான். தரை இறங்கிவிடும். திடீரென ஒரு சத்தம். ரத்த அழுத்தம் மாறுகிறது.
என்னவென்று உணர்வதற்குள் விமான மிக வேகமாக மேலே பறக்க ஆரம்பிக்கிறது. மிக அதி வேகமாக.
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மரண பயத்தில். எந்த அறிவிப்பும் இல்லை.
மிக் உயரத்தில் பறந்து சிங்கப்பூரை தாண்டி சென்று விட்டது. ஏதோ தவறு நிகழ்ந்து இருக்கிறது.
என்ன வென்று தெரியவில்லை. எனக்கு மனதில் பயம் இருந்தாலும், ‘இன்று சாக மாட்டேன்’ என்று
மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. யாரும் யாருடனும் பேசவில்லை. ஒரு பத்து நிமிடத்திற்கு
பிறகு விமானம் வட்டமாக சுற்றி வந்தது. அப்பொழுது பைலட் ஏதோ கூறினார். சரியாக காதில்
விழவில்லை. இறங்கும் போது ஒரு இறக்கை சரியாக திறக்கவில்லை என்று சொன்னது போல் காதில்
லேசாக கேட்டது. பின் இன்னும் 8 நிமிடங்களில் தரை இறங்கிவிடுவோம் என்றார். எங்கெங்கோ
சுற்றி சிங்கப்பூர் வந்து மீண்டும் Laguna National Golf Groundக்கு அருகில் விமானம்
வந்துவிட்டது. இந்த முறை ஒழுங்காக இறங்குமா என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது. முதலில்
பயம் இல்லாவிட்டாலும் இந்த முறை என்னையறியாமல் எங்கள் குல தெய்வத்தையும், ஏழுமலையானையும்
என்னை அறியாமல் வேண்ட ஆரம்பித்தேன். நல்ல வேளை ஒழுங்காக தரை இறங்கியதால் என்னால் இதை
எழுத முடிகிறது இப்போது!!!
************************************************************************
வலைப்பூ மூலம் நிறைய நண்பர்கள்
கிடைத்தாலும், குறிப்பிடத்தக்க நண்பர்களுடன் நான் எப்பொழுதுமே தொடர்பில் இருக்கிறேன்.
அதில் நிறைய பெண் தோழிகளும் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒரு தோழியைப் பற்றி குறிப்பிட
வேண்டும்.
அவர் அறிமுகமாகி ஒரே வாரத்தில்
தன்னுடைய செல் நம்பரை கொடுத்தார். பின் அடிக்கடி பேச ஆரம்பித்தார். அவர் இருந்தது சென்னையில்
ஒரு லேடிஸ் ஹாஸ்டலில். அவர் ஒரு கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்த்து
கொண்டிருந்தார். சில நாட்களுக்கு பிறகுதான் அவர் வயதில் சிறிய பெண் என்று தெரிய வந்தது.
அவருடைய கஷ்டங்கள், சந்தோசங்கள், சோகங்கள் எல்லாமே சொல்ல ஆரம்பித்தார். முதலில் ஒரு
மாதிரி இருந்தாலும் பின் அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் மெயிலிலும், போனிலும்
நட்பு தொடர்ந்தது. ஒரு எல்லைக்குள் இருந்ததாலும், ஒரு நல்ல நட்பு என்ற அடிப்படையிலும்
பேசிக்கொண்டு இருந்தேன்.
ஒரு முறை விளையாட்டாக, “சே,
மிஸ் செய்துவிட்டேன். என் வயது மட்டும் குறைவாக இருந்தால் உன் அம்மா அப்பாவிடம் வந்து
பெண் கேட்டு இருப்பேன்” என்றேன்.
உடனே அவள், “அப்படியா? அவர்கள்
ஒப்புக்கொண்டாலும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றாள்.
‘‘ஏன்?”
“எனக்கு வரப்போகும் மாப்பிள்ளை
அஜித் போல இருக்க வேண்டும். உங்களைப்போல கருப்பாக அல்ல” என்று வரப்போகும் மாப்பிள்ளையைப்
பற்றி அவள் வைத்திருக்கும் கனவுகளை விளக்க ஆரம்பித்தாள்.
நான் ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஏன் என்றால் அவள் உண்மையைத் தானே சொல்கிறாள் என்று விட்டுவிட்டேன்.
ஒரு நாள் “என் கல்யாணத்திற்கு
வருவீர்களா?” என்றாள்.
‘அவசியம் குடும்பத்துடன் வருவேன்’
என்றேன்.
பின் மூன்று மாதமாக பேசவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் கல்யாண நிச்சயம் ஆகப்போகிறது என்றாள்.
திடீரென இரண்டு நாட்களுக்கு
முன் கல்யாணம் ஆகிவிட்டதாக கூறி மெயில் அனுப்பியிருந்தாள். ஏன் எனக்கு பத்திரிக்கை
அனுப்பவில்லை? என்று குழம்பி போயிருந்தேன்.
தோழி மிக அழகானவள்.
நேற்று கணவனும் அவளும் இருக்கும்புகைப்படத்தை
அனுப்பியிருந்தாள்.
அவள் ஏன் என்னை திருமணத்திற்கு
அழைக்கவில்லை? என எனக்கு உடனே புரிந்துவிட்டது.
************************************************************************
6 comments:
விமான அனுபவம் அதிர்ச்சியாக இருந்தது...
"இந்த (மாதிரி) பொம்பளைங்களே இப்படித்தான்" என்கிற வசனம் தான் ஞாபகம் வருகிறது...!
அவள் ஏன் என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை? என எனக்கு உடனே புரிந்துவிட்டது.
>>
எனக்கும் புரிந்து விட்டது
வித்தியாசமான அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி!
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
Post a Comment