Dec 22, 2015

ரேகா!


ரேகாவை என் வாழ்க்கையில் மறுபடியும் சந்திப்பேன் என்றோ அந்த சந்திப்பு இப்படி அமையும் என்றோ கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதானே வாழ்க்கையின் நியதி. நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு எதிர்மறையாகத்தானே எல்லாம் நடக்கும். அப்படி நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் பின் கோயில் எதற்கு? பிரார்த்தனைகள் எதற்கு? நான் ஏன் இப்படி குழம்பி தவிக்கிறேன்?

 நேற்று எப்பவும் போல்தான். கடுமையான வேலை. எல்லாம் முடிந்து அலுவலகம் விட்டு வீட்டிற்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. திருச்சி சத்திரம் பஸ்டாண்டு வந்து லால்குடிக்கு பஸ்ஸை பிடிக்கையில்தான் நினைவுக்கே வந்தது. என் பிரிய சகி நெய் வாங்கி வரச்சொன்னது! இனி நான் நந்தி கோயில் தெரு முனைக்கு சென்று வாங்கி வர நேரம் ஆகிவிடும். சரி நாளை வாங்கலாம். இன்று மனைவியிடம் திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து பஸ்ஸில் ஏறிவிட்டேன். நல்ல கும்பல். வழக்கம் போல உட்கார இடம் கிடைக்கவில்லை. விதியை நினைத்துக்கொண்டு ஏறக்குறைய கம்பியில் தொங்கிக்கொண்டே சென்றேன்.

வீட்டை நெருங்குகையில் ஒருவித பதட்டத்துடன் தான் சென்றேன். மனதையும் திடப்படுத்திக்கொண்டேன். சகி என்ன சொன்னாலும் கோப படக்கூடாது. ஆனால் நடந்ததோ வேறு. உள்ளே நுழைந்தவுடன்,

“ஏங்க ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்?”

“இல்லம்மா கொஞ்சம் வேலை அதிகம் இன்னைக்கு?”

“இதையே தானே வருச கணக்கா சொல்றீங்க”

“ம்ம்ம். என்ன பண்ணறது சொல்லு?”

“இவ்வளவு நேரம் காத்திருந்துட்டு இப்பத்தான் அவங்க போறாங்க”

“யாரு?”

“யாரோ ரேகாவாம்”

அவள் சொல்லி முடித்தவுடன் என் உணர்ச்சிகளை எப்படி நான் அடக்கிக்கொண்டேன் என்றுதான் தெரியவில்லை. அது சந்தோசமா? துக்கமா? அழுகையா? தெரியலை. ஆனா மனைவியின் முன் வெளிப்படுத்துகிற உணர்ச்சி அல்ல அது. எப்படியோ என்னை கட்டுப்படுத்திக்கொண்டு,

“அப்படியா? என்னவாம்? என்ன சொன்னாங்க?” என்றேன்.

“உங்கள பாக்கணுமாம். நீங்க ஏதோ நிறைய உதவி எல்லாம் அந்த காலத்துல செஞ்சிருக்கிங்களாமா. முடிஞ்சா நாளைக்கு உங்களை அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க” என்றவள் கையில் வைத்திருந்த துண்டு சீட்டை கொடுத்துவிட்டு சமயலறை பக்கம் சென்றாள்.

“அப்படியா?” என்றவன் பதில் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தேன்.

சாப்பிட்டு முடித்து படிக்கையில் சாய்ந்தவுடன், என்னைக்கும் இல்லாத திருநாளாக மனைவியின் கை மேலே பட, ஒரு எரிச்சலுடன் தள்ளிவிட்டேன். “போங்களேன் எனக்கென்ன?” என்பது போல் அவள் தள்ளிப்படுத்தாள்.

தூக்கம் வரவில்லை. மனம் பின்னோக்கி சென்றது.

அப்பொழுது நான் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். லால்குடியில் இருந்து தினமும் ரயிலில் தான் கல்லூரி செல்வோம். ஒரே குதுகூலம்தான். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் பட்ட சந்தோசங்களுக்கு அளவே இல்லை. சோகம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. பெண்களுக்கு என்று தனி கூபே இருந்தாலும், எல்லோரும் ஆண்களும் பெண்களூமாக சேர்ந்தே செல்வோம்.

அன்று திங்கட் கிழமை. என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஏன் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அன்றுதான் முதன் முதலில் ரேகாவை சந்தித்தேன். சென்னையில் பத்தாம் வகுப்பை முடித்த அவள் பதினொன்றாம் வகுப்புக்கு பாட்டி வீட்டில் தங்கி படிக்க வந்திருக்கிறாள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அவளுடைய அழகை எப்படி வர்ணிப்பது என்று இப்பொழுது தெரியவில்லை. தினமும் பாவாடை சட்டையில் தான் வருவாள். நல்ல சிகப்பு. நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். முதல் பார்வையிலேயே என் இதயத்தில் சம்மனமிட்டு உட்கார்ந்து கொண்டாள். அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது? என்று தெரியவில்லை. தினமும் தவித்தேன். அவளே வெறுக்கும் அளவிற்கு அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவளைப் பார்க்காத நாட்கள் எனக்கு நரகம்தான். ஏறக்குறைய அவளை ஒரு தெய்வம் போல கருதி மனதில் வைத்து பூஜித்தேன். நண்பர்கள் என்னை பைத்தியம் என்றார்கள். அவளிடம் பேச்சு கொடுப்பதற்காக ஒரு காரியம் செய்தேன். அவளுக்குத் தெரியாமல், அவள் பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்து என் பையில் வைத்துவிட்டு, என் டிபன் பாக்ஸை அவள் பையில் வைத்தேன்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். நேராக எங்கள் தெருவில் இருக்கும் சித்தி விநாயகரிடம் சென்று “இன்று எப்படியும் அவள் என்னிடம் பேசி விட வேண்டும்” என்று வேண்டினேன். பின் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அவசர அவசரமாக சாப்பிட்டேன். நேராக சலுனுக்கு சென்றேன். தலை முடிக்கு ஹேர் ட்ரையர் போட்டுக்கொண்டேன். பவுடர் அடித்தேன். முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்தியாகி ரெயில்வே ஸ்டேஷன் சென்றேன். தேடிக்கண்டு பிடித்து அவள் உட்கார்ந்து இருந்த பெட்டியில் ஏறினேன்.

மெதுவாக அவளிடம் சென்றேன். எல்லாருக்கும் முன் எப்படி பேசுவது என்று தயங்கி தயங்கி,

“உங்க டிபன் பாக்ஸ மாத்தி எடுத்துட்டு போய்ட்டேன். சாரி” என்று திருப்பிக்கொடுத்தேன்.

“பரவாயில்லை” என்றவள் வாங்கிக்கொண்டு, என் டிபன் பாக்ஸை கொடுத்தாள். வாங்கிக்கொண்டேன். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதற்குள் சீரங்கம் ஸ்டேஷன் வரவே என்னால் பார்க்க கூட முடியவில்லை. அவ்வளவு கும்பல். குழப்பத்துடன் கல்லூரி சென்றேன்.

மதிய உணவு இடைவேளையில் திடீரென ஏதோ தோன்றவே அவள் கொடுத்த என் டிபன் பாக்ஸை எடுத்தேன். கனமாக இருக்கவே திறந்தேன். அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர அடைந்தேன். உள்ளே அருமையான எலும்பிச்சை பழ சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் இருந்தது. அப்பொழுதுதான் என் மரமண்டைக்கு உரைத்தது. ஆஹா, நமக்காக அவள் சாதம் கொண்டு வந்திருக்கிறாள் ஆனால் நாமோ? சே? என்ன இது? அவள் சாப்பிட கொண்டு வந்து நமக்கு கொடுத்து விட்டாளோ என்று பல வாறு குழம்பிக்கொண்டிருக்கையில்தான் கவனித்தேன். ஏதோ ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. என்னவென்று திறந்தேன். உள்ளே ஒரு கடிதம்.

“ரவி,

என்னிடம் பேச நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. நேராக பேச வேண்டியதுதானே? நீங்கள் நினைக்கலாம், நான் பேசலாமே என்று? எப்படி முடியும் நான் ஒரு பெண் அல்லவா? உங்களுக்கே இல்லாத தைரியம் எனக்கு எப்படி வரும்”

சந்தோசத்தில் துள்ளிய நான் எப்போது சாப்பிட்டேன். எப்போது ஸ்டேசன் வந்தேன். எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டேன். அவளும் என்னைப் போலவே நினைத்திருப்பாள் போல, அவளும் வந்துவிட்டாள். பின் என்ன? சுகம் மட்டும்தான்.

உலகத்தை மறந்தோம். திகட்ட திகட்ட காதலித்தோம். பார்க்காத சினிமா இல்லை. போகாத கோயில் இல்லை. வாரம் தவறாமல் மலைக்கோட்டை உச்சிக்கு செல்வோம். மணிக்கணக்காக பேசுவோம்.

அந்த வருட பிறந்த நாளுக்கு “என்ன வேண்டும்” என்று கேட்டேன்.

“தஞ்சாவூர் கோவிலுக்கு கூட்டி செல்லுங்கள்” என்றாள்.

காலையிலே திருச்சி வந்தோம். மாரிஸ் தியேட்டரில் காலைக்காட்சி ‘புன்னகை மன்னன்’ படம் பார்த்தோம். பனானா லீபில் பிரியாணி சாப்பிட்டோம். மதியம் கிளம்பி தஞ்சாவூர் சென்றோம். கோவிலுக்கு உள்ளே சென்றவுடன் என் கைகளை இருக்கப் பிடித்தவள் விடவே இல்லை. அப்படி ஒரு அந்நியோன்யமாக இருந்தாள். கோவிலில் இருந்து வெளியே வந்து டின்னர் சாப்பிட்டோம். நேரம் பத்தை நெருங்கி கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்டு கிளம்பலாம் என்றேன்.

“வேண்டாம்” என்றவள் “ரூம் எடுத்து தங்கிச் செல்லலாம்” என்றாள். நான் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை. “வீட்டிலே தேட மாட்டார்களா” என்றதற்கு “நான் மெட்ராஸ் செல்வதாக பாட்டியிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன்” என்றாள். அவள் அவ்வாறு அடிக்கடி போவது வழக்கம் என்பதால் நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில சமயம் தான் அவர் அப்பா வந்து கூட்டிச் செல்வார். மற்றபடி இவளே தனியாக ராக்போர்டில் சென்று வருவாள்.

லாட்ஜிற்கு சென்றொம். நான் சொன்ன எதையும் அவள் கேட்கவில்லை. எனக்கு பிடிக்காமலேயே எல்லாம் நடந்தது. காலையில் கிளம்பும்போது ஒரு கேள்வி கேட்டாள்,

“ஒரு வேளை நம் கல்யாணம் நடக்காவிட்டால், நான் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே காலத்தை ஓட்டி விடுவேன். உங்களை மறந்து என்னால் இருக்க முடியாது. நீங்கள் எப்படி?” என்றாள்.

“முதலில் இது போல பேசுவதை நிறுத்து?” என்று கோபமாக சொன்னேன்.

“சொல்லுங்கள்” என்று நச்சரிக்கவே, “அது எப்படி நீ இல்லாமல் நான். கடைசி வரை? பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுவேன்” என்றவுடன், என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.

காலையில் அவளை சென்னைக்கு பஸ்ஸில் ஏற்றிவிட்டேன்.

அதுதான் நான் அவளை கடைசியாக பார்த்தது. அதன்பிறகு அவள் லால்குடிக்கு வரவே இல்லை. தேடாத இடம் கிடையாது. கொஞ்ச நாளில் அவளது பாட்டியும் கிளம்பி சென்னைக்கே போய்விட்டாள். ஏன் சென்றாள்? இடையில் என்ன நடந்தது? ஏன் அன்று இரவு என்னிடம் அப்படி நடந்து கொண்டாள்? எதற்காக பின் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. எதுவுமே தெரியாமல் தவியாய் தவித்தேன்.

எல்லோரையும் போல நானும் தாடியை வைத்துக்கொண்டு கொஞ்ச நாள் அலைந்தேன். பல வருட காத்திருப்புக்கு பிறகு அம்மாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டேன். பிள்ளைகள் பிறந்தன. காலம் வேகமாக ஓடிவிட்டது.

நினைவுகளிலிருந்து வெளிப்பட்டவன் மணியை பார்த்தேன். மனைவியை பார்த்தேன். குற்ற உணர்ச்சியில் தவித்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அலுவலகம் விட்டதும். நேராக மனைவி கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு, கே கே நகர் சென்றேன். மனம் முழுக்க வேதனையுடன் சென்றேன். அவளுக்கு கொடுத்த வாக்கினை நான் மீறிவிட்டேன். அவள் என்னைப் பார்த்து கேள்வி கேட்டால் என்ன செய்வது? குற்ற உணர்ச்சி என்னைத்தாக்கவே ஒருவித குழப்பத்துடன் வீட்டைத் தேடி சென்றேன்.

நகரின் முக்கிய இடத்தில் இருந்தது அவள் வீடு. அது வீடு அல்ல. மிகப் பெரிய பங்களா. போர்டிகோவில் விலை உயர்ந்த இரண்டு கார்கள். வாசலில் செக்யூரிட்டி. வெளியே செக்யூரிட்டியிடனம் சொல்வதற்காக அருகில் சென்றேன். அருகே ஒரு நேம் பிளேட் இருந்தது. அதில், சிவசங்கரன் MBBS MD என்று இருந்தது. அருகில் யாரோ வருவது போல் இருக்கவே, கூர்ந்து கவனித்தேன். யாரோ ஒருவருடன் … யார் அது நடந்து வருவது…?

 பார்க்காமல் திரும்பி விறுவிறுவென பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
“காதலில் தோற்ற காதலன்கள் நினைப்பது போல் எல்லா முன்னால் காதலிகளும் இருப்பதில்லை”

(Published in kalki 27.04.14)