Jul 31, 2018

காற்றில் எந்தன் கீதம்


எனக்கு ஏன் அவளின் நினைவு வந்தது தெரியவில்லை. எது என்னை அவளின் நினைவை நினைவு படுத்தியது? என்ன காரணம்? அதுதான் எல்லாம் முடிந்து 24 வருசம் ஆச்சே? நினைவு மீண்டும் அவளிடமே.

இதே போன்ற ஒரு மார்கழி மாத காலையில்தான் மிகவும் துணிச்சலாக துர்கா என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். எனக்கு அதிர்ச்சி. எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டேன்.
நான் என் அறையில் மனம் பேதலித்து ஒருவித மன நிலையுடன் அமர்ந்து இருந்த போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

யார் அது?”

நான் தாண்டா மீனாஅக்காவின் குரல்.

என்னக்கா?”

யேய் நம்ம துர்கா வந்துருக்காடா. ஏதோ உன் கிட்ட புத்தகம் வாங்கணுமாம்

ஒருவித நடுக்கத்துடன் கதவை திறந்தேன். அக்கா அதற்குள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டிருந்தாள். துர்கா நீலக்கலர் தாவணியில் மிக அழகாக நின்று கொண்டிருந்தாள். வெளிர் நீல பூப்போட்ட பாவாடை. அதே கலர் ஜாக்கெட். நான் கீழே குனிந்து கொண்டேன்.

யேய் லூசு. இங்க நான் தான் பொண்ணு. என்ன பாருஎன்றவள் என் மேவாயை தன் கையால் தூக்கினாள்.

நிமிர்ந்து பார்த்தேன்.

ஏண்டா, ஒரு பொம்பள நானே வெக்கபடாமா, லவ் யூ சொன்னா, சந்தோசமா அத ஓகே சொல்லாம, ஓடி வர?”

இல்லை துர்கா, இது ஒத்து வராது?’

ஏன்?”

நீ வேற ஜாதி, நாங்க வேற ஜாதி. ஒத்து வராது

ஏண்டா, தினமும் காலைலயும், சாயந்தரமும் உத்து உத்து என்ன பாக்கும் போது நான் வேற ஜாதினு தெரியலையா?”

ம். ம் இல்லை
என்ன நொல்லை. நீதாண்டா என் புருசன்என்று சொல்லி விட்டு என் கன்னத்தை கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.

அதன் பிறகு அந்த காதலை அவள்தான் நாளொரு மேனியும் பொழுதுரு வண்ணமாக வளர்த்தாள். அவள் அன்பில் கரைந்து போனேன். என்னுள் ஒளிந்து கொண்டிருந்த ஆண்மையை வெளிக்கொணர்ந்த அற்புதமான பெண் அவள். வாழ்க்கையை பற்றி அத்தனை விசயங்களையும் அவள்தான் போதித்தாள். அற்புதமாக பாடுவாள். அவள் பாட சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன். அவளின் குரல் எனக்கு ஒரு போதையை தந்தது. அவள், “நின்னை சரணடைந்தேன்பாடினால் நான் அழுதுவிடுவேன். அவள் குரல் மனதை உருக்கிவிடும். அவள் பாடி நான் அழாமல் இருந்த நாள் இல்லை. துர்கா நான் ஒவ்வொரு முறை அழும் போதும் என்னை திட்டுவாள். சந்தோசமா கேட்காம, “ஏண்டா அழற? என்பாள். எனக்கு பதில் சொல்ல தெரியாது.

ஒரு வேளை என் அம்மா எங்களை சிறு வயதிலேயே விட்டு விட்டு சென்றது ஒரு காரணமாயிருக்கலாம். அக்காவிற்கு அடுத்து நான் அதிகம் பழகிய பெண் துர்காதான். எனக்கு எல்லாமே துர்காதான். துர்கா இல்லை என்றால் நான் இல்லை. ஒரு நாள் அந்தி மயங்கும் மாலை நேரம்,

நான் ஒரு பாட்டு பாடறேன். அழாம கேளுடாஎன்றாள்.

ம்

காற்றில் எந்தன் கீதம்என்று பாட ஆரம்பித்தாள். மன பாரம் தாங்காமல் அப்படியே அவள் மடியில் படுத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். என்னால் அழுகையை கட்டு படுத்த முடியவில்லை. ஏன் அழுதேன்? தெரியவில்லை? சடாரென பாட்டு நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அவளின் அம்மா. துர்கா என்னை தள்ளிவிட்டு ஓடினாள். அதான் அவளை நான் கடைசியாக பார்த்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவளை பார்க்க எவ்வளவோ முயற்சித்தும் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் காலை ஏதோ மனதில் தோன்ற, வெளியே வந்து பார்த்தேன். வீடு பூட்டி இருந்தது. பின் தெரிந்து கொண்டேன். அவர்கள் ஊரை விட்டு சென்றிருந்தார்கள். அதன் பிறகு எவ்வளவோ தேடியும் என்னால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படியே பல வருடங்கள் சென்றது. அக்கா திருமணம் ஆகி சென்றாள். சில வருடங்களில் அப்பாவும் இறைவனடி சென்றார். நான் தனிக்கட்டை ஆனேன். எதிலும் பிடிப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அப்பொழுதுதான் என் வாழ்வில் புயல் போல் நுழைந்தாள் கீதா. கீதாவை நான் தான் எனக்கு செகரட்டரியாக தேர்வு செய்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

ஆரம்பத்தில் பாஸ் செகரெட்டரி என்ற உறவு கொஞ்சம் கொஞ்சமாக நட்பை நோக்கி சென்றது. என்னை அறியாமலே இது நடந்தது. கீதா மிகவும் மாடர்ன் பொண்ணு. நல்ல சிகப்பு. நேர்த்தியான அழகு. ஒரு நாள் சுடி என்றால் அடுத்த நாள் ஜீன்ஸ் டாப்ஸ். கல கல என்று பேச ஆரம்பித்து என் மனதை சந்தோசமாக்கினாள். என் மனதில் எந்த தப்பான எண்ணமும் இருந்தது இல்லை. ஆனால் அவள் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் தான் வித்தியாசமாக இருந்தது.

அன்று ஒரு நாள் அப்படிதான், காலை 11 மணி இருக்கும். எப்பொழுதும் போல் பிஸியாக இருந்தேன். கீதா என்னை பார்க்க வர மாட்டாள் என்று நினைத்தேன். ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சண்டை அப்படி. அன்று மாலை என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவளுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, போனை எடுத்தவள், “சொல்லுங்க சார், ஓக்கே சார்”. உடனே வரேன் சார்என மிக மரியாதையுடன் யாருடனோ பேசிக்கொண்டே போனாள். அப்பொழுது என் அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு பெண்ணும் என் அருகில் இருந்தாள். நான் கிண்டலாக உடனே அந்த பெண்ணிடம்,

இங்க பாருப்பா, என்னா ஒரு மரியாதை? என் கிட்ட அப்படியா பேசுறா? நம்ம கூப்புட்டா ஆடி அசந்து வரா? ஆனா இப்ப பாரு?” என்றேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. விடு விடு என என் அறையை விட்டு வெளியேறினாள். என்னால் அவளை தடுக்க முடியவில்லை. கூட இருந்த பெண், “ஏன் சார், அவ தான் ரொம்ப செண்டிமெண்ட் டைப்னு தெரியுமில்லை? ஏன் அவளை சீண்டறீங்கஎன்றாள். அதன் பிறகு என்னை வந்து பார்க்கவரவில்லை. எப்பொழுதும் மாலை அலுவலகம் முடிந்து செல்லும் போது என்னிடம் சொல்லி விட்டு செல்பவள், அன்று என்னிடம் சொல்லாமலே சென்றாள். வழியில் பார்த்த நான் காரில் ஏறச்சொன்னேன். மறுத்துவிட்டாள். அன்று முழுவதும், ஒரு விதமான மனநிலையுடனே இருந்தேன். ஏன் அப்படி இருந்தேன்? அவளுக்கும் எனக்கும் என்ன உறவு? நான் அவளின் பாஸ் அல்லவா? பின் ஏன் நான் அவள் பேசாதது என்னை வாட்டி வதைக்கிறது. பதில் தெரியாமல் குழம்பி போனேன்? அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் என்னிடம் ஆபிஸ் வேலையை தவிர எதுவுமே பேச வில்லை.
மிக குழப்பத்துடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு திடிரென கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தேன், அருகில் கீதா!

வழக்கமான ஸ்டைலில், “ஹேய் குட் மார்னிங்என்றாள். ஜீன்ஸ். நீலக்கலர் டாப்ஸ் அணிந்திருந்தாள். கண்களுக்கு மை இட்டிருந்தாள். இன்று என்னவோ ரொம்ப அழகாக தெரிந்தாள்.

நானும், “குட் மார்னிங், எப்படிடா இருக்க?” என்றேன்.

பேச ஆரம்பித்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. திடிரேன தலையில் அடித்து கொண்டு, “அய்யையோ! மறந்தே போயிட்டேன்.  நான் உங்க மேல கோபமா இருக்கேன்என்றவள் விறுவிறு என்று ரூமை விட்டு வேகமாக சென்று விட்டாள். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி. இன்னொரு பக்கம் சந்தோசம். அவள் அப்படி சொன்னது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

மதியம் கேண்டினில் சாப்பிடும்போது, அவளை பார்ப்பது வழக்கம். ஆனால், அன்று முழுவதும் என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அன்று அவள் மிக அழகான சுடியில் வந்து இருந்தாள். எப்பொழுதுமே அவள் உடைகளை நான் புகழ்ந்து பேசுவதுண்டு. ஆனால் அன்று அதற்குறிய வாய்ப்பையே அவள் கொடுக்கவில்லை.

மதியம் திடீரென அவளிடமிருந்து போன்.

ஹேய் சொல்லுஎன்றேன்.

எங்க இருக்கீங்க?’’

என் ரூம்ல

ப்ரீயா இருக்கீங்களா?’

ம். சொல்லு

உங்களை பார்க்கணுமே

ம் வா

அடுத்த இரண்டு நிமிசத்தில் வந்தாள். மிகுந்த ஆசையுடன் அவ்ளிடம் பேச போனேன். உடனே அவள்,
ஹலோ உங்க கிட்ட கொஞ்சி குலவ இங்கு வரல. ஆபிஸ் விசயமாத்தான் வந்தேன்

எனக்கு சுருக்கென்றது. இருந்தாலும், அவள் கேட்ட உதவியை உடனே செய்து கொடுத்தேன்.

வேலை முடிந்ததும், “ரொம்ப தேங்ஸ்என்று சொல்லிவிட்டு கிளம்ப முயன்றவளை, “ஹலோ ஒரு நிமிசம்என தடுத்து நிறுத்தினேன்.

என்ன?” என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

அப்படி என்ன சொல்லிட்டேனு என் மேல கோபமா இருக்க?”

நீங்களே யோசிச்சு பாருங்க?”

என்ன யோசிக்கணும்?”

உங்க கிட்ட என்னைக்காவது மரியாதை குறைவா பேசி இருக்கேனா?”

இல்லை

அப்புறம் எப்படி அந்த மாதிரி நீங்க கமெண்ட் அடிக்கலாம்?”

சாரிடா, தெரியாம சொல்லிட்டேன்

நான் ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்து விட்டேன். எனக்கே என்னை பார்க்க வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா?

சாரி. எனக்கு இன்னும் கோபம் தீரல?”

உனக்கு கோபம் தீரணும்னா நான் என்ன செய்யணும்

உங்க வாயை பேசாம மூடிட்டு இருந்தா போதும்என்றவள் கதவை படாரென சாத்திவிட்டு சென்றாள்.

என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வரத்துவங்கியது. அதுவும் ஏன் என எனக்கு தெரியவில்லை.
---------------------------------------
அன்று மதியமே அலுவலத்தை விட்டு கிளம்பினேன். அவளும்தான். ஆனால் நான் காரில். அவள் பஸ்ஸில். அன்று மதியம் மூன்று மணிக்கே வீட்டிற்கு வந்து விட்டேன். ஒரு நாள் படுத்து தூங்கலாம் என நினைத்து படுத்தேன். சிறிது நேரம் கழித்து என் போன் ஒலிக்கவே, தூக்க கலக்கத்தில் போனை எடுத்தேன்.

கீதா.

ஹேய்

சொல்லும்மா?’

என்ன பண்ணறீங்க?’

சும்மா படுத்து இருக்கேன்

நான் ஹேர் கட் பண்ணிட்டேன் தெரியுமா?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சொல்லு

எனக்கு ரொம்ப நாள் ஆசை. அதான் கட் பண்ணிட்டேன்

புரியுரமாதிரி சொல்லு

முடியை shorta கட் பண்ணிட்டேன்

ஏம்பா?”

நல்லா இருக்கு. இப்போ ப்ரீ ஹேர்ல இருக்கேன். போறவங்க வர்ரவங்க எல்லாம் என்னையே பாக்குறாங்க. அக்கா திட்டுரா?”

அவ்வளோ நல்லாவா இருக்கு?”

நீங்க பார்த்தா சந்தோச படுவீங்க

அப்போ நான் நாளைக்கு ஆபிஸ் வரலை

ஹலோ நாளைக்கு நீங்க வரீங்க. என்ன பாக்கறீங்க. எப்படி இருக்குனு சொல்றீங்க

அவள் குரல்ல அப்படி ஒரு சந்தோசம். அவளுடைய சந்தோசம் அப்படியே என்னையும் தொற்றிக்கொள்ள, “இப்ப எங்க இருக்கீங்க?” என்றேன்.

பஸ் ஸ்டாண்ட்ல

சாப்டீங்களா?”

ம். எவ்வளவு ஆச்சு தெரியுமா?”

சாப்பாட்டுக்கா?”

லூஸு. ஹேர் கட் பண்ண?”

எவ்ளோ ஆச்சு?”

“700 ரூபாய்

இது தேவையா?”

ஆமாம். தேவைதான்

அப்பா திட்ட மாட்டறா?”

அப்பாத்தான் ஊர்ல இல்லையே?”

அதான். இப்படியா? அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கொழுப்பு

கொழுப்பு இல்லை. திமிரு

இப்படி கண்டிக்கிற அப்பா இருக்கும் போதே இப்படி

ஆமாம். ஒரு லைப்ல ஒரு திரில் வேணும் இல்லை
-------
அன்று அலுவலக வேலையாக வெளியில் சென்று இருந்தேன். டிஸ்கஷனில் இருந்த போது அவளிடமிருந்து போன். நான் எடுக்க வில்லை. சிறிது நேரம் கழித்து குறுஞ்செய்தி. நான் பதில் சொல்ல வில்லை. நான் மீட்டிங்கில் இருக்கும் போது யார் போனையும் எடுப்பதில்லை. வேலை முடிந்தவுடன் கீதாவிற்கு போன் செய்தேன்.

ஹேய்

என்ன ஹேய்? போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?”

மீட்டிங்ல இருந்தேன்பா
இருந்தா என்ன? நான் போன் பண்ணா எடுக்கணும் புரியுதா?” என்று கண்டிப்பு கலந்த குரலில் கூறினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது மட்டும் எனக்கு புரிந்தது.

சரி சரி. கோபம் வேண்டாம். சொல்லு

எனக்கு அர்ஜெண்டா 8000 ரூபா பணம் வேணும்

என்னடா இப்ப சொல்ற

இப்பதான் ஞாபகம் வந்துச்சு. சாயந்தரத்துக்குள்ள வேணும்

ஓகே டிரை பண்ணறேன்

ஹலோ டிரை பண்ணறேனு எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு வேணும்னா எனக்கு வேணும் அவ்ளோதான்

எப்படி நான் உன்கிட்ட குடுப்பேன்?”

பணத்த ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. நான் இடத்த சொல்றேன். அங்க வந்து குடுங்க

ஓகேஎன்று நான் சொல்வதற்குள் போனை வைத்துவிட்டாள்.

அவள் எப்பொழுதுமே அப்படித்தான். அவள் கேட்டவுடன் அந்த விசயம் நடக்க வேண்டும். இல்லை என்றால் பயங்கர கோபம் வரும். நானும் அவளுக்கு ஏற்றால் போல் மாறிவிட்டிருந்தேன். எனக்கே என்னை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்றைய தினம் மிகவும் முக்கியமான தினம். அன்றுதான் மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த அடுத்த நாள். ATM சென்றால் ஒரே கூட்டம். எப்படியோ அலைந்து அவள் கேட்ட பணத்தை ரெடி செய்து போனில் அழைத்தேன்.

ம். சொல்லுங்க?”

பணத்தை எங்கு வந்து தரட்டும்?’

பஸ் ஸ்டாண்ட் வந்து விடுங்கள்

ஓக்கே. ஆனால் ஒரு கண்டிஷன்

என்ன?”

காலையிலிருந்து ஒரே அலைச்சல். தலை எல்லாம் வலிக்கிறது. ஒரு காபி சாப்பிடணும் போல் இருக்கிறது. சாப்பிடலாமா?’

முதலில் மறுத்தவள், பின்சரிஎன்றாள்.

அவள் வந்து சேர இன்னும் அரை மணி நேரம் இருந்ததால், நான் பக்கத்தில் உள்ள ஒரு மாலுக்கு சென்றேன். அங்கே உள்ள புட் கோர்ட்டில் அமர்ந்தேன். எங்கு பார்த்தாலும் ஜோடியாக காதலர்கள். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே தனியாக ஒரு சேரில் அமர்ந்தேன்.

என் போன் ஒலிக்கவே, எடுத்தேன். கீதா.

என்னடா?”

எங்க இருக்கீங்க?”

மாலில்

அங்கேயே இருங்க?”

ஏன்?”

நான் அங்கே வந்துடறேன்

உண்மையாவா?”

மால்ல எந்த ப்ளோர்ல இருக்கீங்க?”

மூணாவது ப்ளோர். புட் கோர்ட்ல

சூப்பர். அங்கே இருங்க வந்தடறேன்

மனசு முழுவதும் குதுகூலத்துடன் அவள் வரவை எதிர் நோக்கி காத்திருந்தேன். நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விட்டது. லிப்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை லிப்ட் வந்து செல்லும் போதும் ஆவலுடன் பார்ப்பேன். திடிரேன, “ஹாய்என குரல் கேட்க, திரும்பினேன். பின்னால் கீதா.

டைட் ஜீன்ஸ். சின்ன டாப்ஸ் அணிந்திருந்தாள். பார்க்கவே மிகவும் செக்ஸியாக இருந்தாள்.
என்னடா சாப்புடறே? ஜிகிர்தண்டா, கூல் டிரிங்க்ஸ் இல்ல காபியா?”

எனக்கு ஐஸ் கிரீம் வேணும்

நான் என்ன சாப்பிட?”

உங்களுக்கு தான் தலை வலிக்குதுல்ல, அதனால காபி சாப்பிடுங்க

ம்ம்

அவளுக்கு ஐஸ்கிரிம் வாங்கி கொடுத்துவிட்டு நான் காபி வாங்க சென்றேன்.

ஐஸ் கிரரிம் சாப்பிட்டுக்கொண்டே என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்ன பாக்குறீங்க?’

நீ என்ன பாக்குற?” என்றேன்.

சும்மாதான்

புரியலையே?’’

ஏங்க இப்படி இருக்கீங்க?’’

எப்படி இருக்கேன்?”

நானும் என்ன என்னவோ செஞ்சு உங்களுக்கு புரிய வைக்க பாக்குறேன்.
புரிஞ்சுக்க மாட்டீங்களா?”

நான் ஏதும் பேசவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னங்க? நான் சொல்றது புரியுதா?”

என்ன?”

லவ் யூ

நீ என்ன லூஸா?”

ஆமாம். நான் உங்க மேல லூசு
என்னடா பேசுற? என் வயசு என்ன? உன் வயசு என்ன?”

வயசு ஒரு பிரச்சனை இல்லை. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க மேல உயிரா இருக்கேன். அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். ப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்கஎன்றவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

இல்லடா? இது ஒத்து வராது? ஊர்ல ஒரு மாதிரி பேசுவாங்க?’’

யார் என்ன பேசுனா நமக்கு என்னங்க?”

அப்படி இல்லை

சரி, நான் ஓப்பனா கேக்குறேன், என்ன உங்களுக்கு பிடிச்சுருக்கா இல்லையா?”

நான் ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை. “உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?”

அப்புறம் என்ன?’

சரிடா. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடு

அதற்குள் அவள் அப்பா போனில் அழைக்கவே மாலை விட்டு கிளம்பினோம்.

அவளை பஸ் ஏற்றிவிட்ட பிறகு, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளின் பேச்சு ஓவ்வொன்றும் என்னை சிந்திக்க வைத்துவிட்டது. உண்மையில் எனக்கு அவள் மேல் தீராத காதல்தான். ஆனால் என் வயதின் காரணமாக அதை அவளிடம் சொல்லாமல் என் மனதிலேயே வைத்து பூட்டிவிட்டேன். ஆனால் அவளோ மிக சாதரணமாக அவள் காதலை என்னிடம் சொல்லிவிட்டாள். ஒரு பக்கம் மிகவும் சந்தோசம். ஒரு பக்கம் குழப்பம். என்ன சொல்வது? யாரிடம் கேட்பது? ஒரே குழப்பத்தில் வீட்டிற்கு சென்றேன்.

சரியாக சாப்பிட கூட முடியவில்லை. திடீரென ராஜா நினைவு வர அவனிடம் ஆலோசனை கேட்கலாம் என முடிவு செய்தேன். ராஜா எனக்கு உயிர் தோழன். என் வாழ்வில் அக்கரை கொண்டே ஒரே ஜீவன். என்னுடைய குறை நிறைகள் அனைத்தும் அறிந்தவன். அவனை விட எனக்கு புத்தி சொல்லவோ என்னை வழி நடத்தவோ இந்த உலகில் யாரும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மனம் தெளிவாக, அடுத்த நாள் வரை தள்ளி போட மன்மில்லாமல் உடனே கிளம்பினேன்.

இரவு 10 மணிக்கு கதவை தட்டிய என்னை ஒருவித ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தான்.

வாடா? என்ன இந்த நேரத்துல?”

சும்மா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்?”

என்னடா அப்படி இந்த நேரத்துல? தலை போற அவசரமா?”

அவன் பேசிக்கொண்டிருக்கையிலே அவன் மனைவி,
வாங்கண்ணா? என்ன இந்த நேரத்துல?”

ஒண்ணுமில்லமா. சும்மா கொஞ்சம் ராஜாட்ட பேசணும்

உடனே ராஜா அவன் மனைவியை பார்த்து, “அவனுக்கு சாப்பிட ஏதாவது வை

இல்லடா. சாப்புட்டேன்

ஒரு ரெண்டு இட்லி சாப்புடுடா?”

வேணான்டா

ஒரு டம்ளர் பாலாவது சாப்புடுங்கண்ணேஎன்றார் அவர் மனைவி.

சரிம்மா. போகும்போது சாப்புடறேன்

மனைவி போனவுடன், “சொல்லுடாஎன்றான்.

கொஞ்சம் நான் தயங்கியதை பார்த்ததும்,

எதுவாய் இருந்தாலும் சொல்லு மாப்பிளஎன்றான்.

அவன் எப்பொழுதும் போல் மாப்பிள்ளை என்று அழைத்தவுடன், என் மனம் லேசாகியது.

கடகடவென மனதில் உள்ளதை எல்லாம் கொட்ட ஆரம்பித்தேன்.
பொறுமையாக அனைத்தையும் கேட்டவன், என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்வானோ என்ற பயத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒருவித முக மலர்ச்சியுடன், “மாப்புள நல்ல விசயம்டா. உடனே ஓகே சொல்லு

எப்படிடா ஓகே சொல்றது? என் வயசு 45 அவ வயசு 23, எப்படி?”

டேய் அதை அந்த பொண்ணு யோசிக்கணும்டா. அதே ஓகே சொல்லுது. உனக்கு என்ன?”

அது ஏதோ சின்ன புள்ளத்தனமா பேசுதுடா?”

போடா லூசு. அது நல்லா தெளிவாத்தான் இருக்கு

என்னோட கதைதான் உனக்கு தெரியும் இல்லை?”

தெரிஞ்சது நாளதான் சொல்றேன்

எவ்வளவு நாளைக்கு தனியா இருப்ப. அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க. காலைல அந்த பொண்ணுகிட்ட ஓகே சொல்லிடு. சாயந்தரமே அவங்க வீட்டுக்கு போய் அவங்க அம்மாட்டயும் சொல்லிடு

இது சரி வருமா? இந்த சமுதாயம் என்ன சொல்லும்

மரமண்டை, இந்த சமுதாயத்தை தூக்கி குப்பைல போடு. நீ தனியா கஷ்டப்படற. இந்த சமுதாயமா உனக்கு உதவி செய்யுது. இல்லைலை. போடா போய் சந்தோசமா வாழ்க்கைய ஆரம்பி

இந்தாங்கண்ண பால்என அவன் மனைவி டீப்பாயில் பாலை வைத்தார்கள்.

மனம் ஒரளவு தெளிவாக இருந்தது. பாலை குடித்தவுடன் புறட்டேன்.

டேய் லூசு. நாளைக்கு இன்னேரம் நல்ல செய்தி சொல்லுடா?”

சரிஎன்று தலை ஆட்டிவிட்டு, வீட்டிற்கு கிளம்பினேன்.

மனம் மிக தெளிவாக அன்று இரவு நன்றாக தூங்கினேன்.
காலை ஒருவித பரபரப்புடன் அலுவலகம் கிளம்பினேன். எப்பொழுதும் 9.30க்கு செல்பவன் அன்று 9 மணிக்கே சென்றுவிட்டேன். காலை 9.05க்கு எப்பொழுதும் போல் என் ரூமிற்கு வந்தவள்,

குட் மார்னிங்என்றாள்.

குட் மார்னிங் கீதா?”

என்ன நான் சொன்னத யோசிச்சீங்களா?”

நான் ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை.

இன்று மாலை உங்கள் வீட்டிற்கு வந்து உன் அம்மாவிடம் பேசவா?” என்று சொல்லி முடிப்பதற்குள்,

தேங்க்ஸ் தேங்க்ஸ்என்று குதிக்க ஆரம்பித்தாள்.

சரி சரி ஒழுங்கா போய் வேலைய பாரு

நான் அவளிடம் அப்படி சொன்னேனே தவிர எனக்கும் வேலை ஓடவில்லை. மாலை எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.
அந்த மாலையும் வந்தது.

சந்தோசத்துடன் என் காரை நோக்கி செல்லும் போது, கீதா என் அருகில் வந்தாள். “நானும் உங்கள் காரில் வருகிறேன்என்றாள். பொதுவாக அவள் கம்பனி பஸ்ஸில் செல்வது வழக்கம். என்றாவது பஸ்ஸை விட்டாலோ அல்லது தாமதமானாலோ என்னுடன் காரில் வருவாள். அதனால் யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

வா போலாம்என்று கூறி நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்தேன். அவள் என் பக்கத்திலேயே அமர்ந்தாள். டிரைவர் இருந்ததால் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து பொதுவான விசயங்களை மட்டும் பட்டும் படாமலும் பேசிக்கொண்டே சென்றோம்.

டிரைவரை காரில் ரேடியோவை ஆன் செய்ய சொன்னேன். எப்பொழுதுமே இளையராஜா பாடல் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ரேடியோ. ஆன் செயததும்,

காற்றில் எந்தன் கீதம்பாடல் ஒலிக்க உடனே டிரைவரை ரேடியோவை நிறுத்த சொன்னேன். ஏனோ அந்த பாடலை இப்போது கேட்க பிடிக்கவில்லை.
ஏன் சார் பாட்டு பிடிக்கலையா?” என்றாள்.

இல்லை. பேசிக்கொண்டிருக்கலாம்என்றேன்.

கொஞ்சமாக பேசிக்கொண்டோம். இன்று என்னவோ கார் மிக மிக மெதுவாக செல்வது போல் தோன்றியது. ஒவ்வொரு சிக்னலிலும் கார் நிற்கும் போதும் ஒரு யுகமாக எனக்கு தோன்றியது.

இன்னும் எவ்வளவு தூரம்என்றேன். ஏனென்றால் இது வரை நான் கீதாவின் வீட்டிற்கு சென்றதில்லை.

இன்னும் ஐந்து நிமிசம் தான்என்றாள்.

படப்படப்புடனே பயணித்தேன். முடிவில் ஒரு தெருவின் முனையில் கார் சென்ற போது, “இதோ இந்த வீடுதான்என்றாள்.

வீடு சின்னதாக அழகாக இருந்தது. கார் நின்றது. இருவரும் இறங்கினோம்.

கீதா வேகமாக சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது.

வாங்க சார் உள்ளஎன்றவள், “இவங்கதான் என் அம்மாஎன்றாள்.

நிமிர்ந்து பார்த்தேன். உற்று பார்த்தேன்.

ஒரு விநாடி கூட தாமதிக்காமல் விறு விறு என்று காரை நோக்கி விரைந்தேன்.

No comments: