Jan 1, 2019

2018 ஏ ஓடிப்போ!


இத்தனை மோசமான வருடமாக 2018 இருக்கும் என ஒரு கணம் கூட நான் நினைத்து பார்க்கவில்லை. 2014ம் வருடம் வரை நான் தொட்டது எல்லாம் பொன். ஒரே வளர்ச்சி. நினைத்து பார்க்க முடியாத உயரத்துக்கு எல்லாம் சென்றேன். ஆனால் இன்றோ, அப்படியே தலை கீழ். நான் ஜாதகம் ஜோதிடம் எல்லாம் நம்பியதே இல்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்பும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறேன். 2014ம் வருடம் புதன் தசை ஆரம்பிக்கிறது, அதனால் 16 வருடங்களுக்கு கஷ்டம் அனுபவிப்பீர்கள் என்றார்கள். 2014 ஜூலையிலேயே பாதி வாழ்க்கையை இழந்து விட்டேன். நல்ல பதவியுடன் கூடிய மலேசிய வாழ்க்கையை உதறிவிட்டு வந்தேன்.

எல்லாக் கஷ்டங்களையும் மீறி எதிர் நீச்சல் போட்டு எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு வர படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் முடியவில்லை. நல்ல வேலையில்தான் இருக்கிறேன். ஆனால் முன்பு வாங்கிய அளவிற்கு சம்பளமோ, பதவியோ இப்போது இல்லை. மனம் பழசை மறக்க மறுக்கிறது. 24 மணி நேரமும் இழந்ததையே நினைத்துக்கொண்டிருக்கிறது.

குருபெயற்சி, சனிப்பெயற்சி வந்து போகிறது. ஆனால் எந்த ஒரு பெயற்சியும் எனக்கு மட்டும் கெடுதல் தான் செய்கிறது. சின்ன சின்ன விசயங்களில் கூட தடைகள் வருகின்றது. காரணம் எதுவும் தெரியவில்லை. வாஸ்து பிரச்சனை இருக்கலாம் என ஒருவன் போட்டுக்கொடுக்க சென்ற வருடம் வாஸ்துவிற்கு லட்சக்கணக்கில் செலவு ஆனது. அனைத்து பிரச்சனைகளும் எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது? என்று எப்பொழுதும் தோன்றுகிறது.

இந்த பிரச்சனைகளால் கோபம் அதிகம் வருகிறது. அதனால் எல்லோரையும் திட்டி விடுகிறேன். என்னைத்தெரிந்தவர்கள் புரிந்து கொள்கிறார்கள். தெரியாதவர்கள் என்னை தப்பாக புரிந்து கொள்ளும் வாய்ப்பே அதிகம். இதை சரி பண்ணுவதற்காக தியானம் செய்யலாம் என உட்கார்ந்தால் மனம் அலை பாய்கிறது.

என்னுடைய நலம் விரும்பிகள், ‘இத்தனை பிர்ச்சனைகளும் சரியாக வேண்டும் என்றால், இன்னொரு திருமணம் செய்து கொள்’ என்கிறார்கள். இரண்டாவது கல்யாணம் என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று. 2014க்கு பிறகு எந்த பெண்ணுடனும் அதிகம் நெருங்கி பழகுவதில்லை. காரணம் பயம்.

2014லில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது என்றாலும், 2018 மிக மோசமாக இருக்கிறது. இன்னும் வாழப்போகிற வருடங்களில் பெண் துணை இல்லாமல் வாழ முடியுமா தெரியவில்லை.

தனிமை சூழலையும், கோபத்தையும் கடப்பதற்காக புத்தகங்கள் படிக்கலாம் என நிறைய புத்தகங்கள் வாங்கினேன். ஒரு புத்தகம் கூட படிக்க முடியவில்லை. எழுதலாம் என நினைத்து உட்கார்ந்தால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை. 2018ல் ஒரே ஒரு சிறுகதைதான் எழுதினேன். ஏதோ உடற்பயிற்சியும், நடை பயிற்சி மட்டும் தவறாமல் செய்கிறேன்.

மனம் அமைதி இல்லாமல் தவிக்கிறது. என்ன செய்தால் மனம் அமைதிப்படும் என தெரியவில்லை. சந்தோசம் என்றால் என்ன என்பதே மறந்துவிட்டது. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பண விரயம் வரும் என்றார்கள். அதனால் மிகவும் கவனமாக இருந்தேன். அருமையான கார் ஹோண்டா அமேஸ் வைத்திருந்தேன். ஒரு நண்பர், ‘நிறைய கிலோ மீட்டர் ஓட்டி விட்டாய், இனி செலவு வைக்கும்’ என்று தினமும் கூறிக்கொண்டே இருந்தார். அதனால் காரை விற்றேன். எந்த முதலீடு என்றாலும் மிகவும் கவனமாக அடி எடுத்து வைப்பேன். ஊரில் இருக்கும் அத்தனை காரையும் ஒப்பீடு செய்து, அதே நண்பர் கொடுத்த தவறான அறிவுரையால், 12 லட்சம் செலவு செய்து மகேந்திரா TUV300 வாங்கினேன். தினமும் 125 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும். என் கெட்ட நேரம் ஒரு கிலோ மீட்டருக்கு 12.5 கிலோ மீட்டர் மட்டுமே கொடுத்தது. ஒரு மாடத்திற்கு டீசல் மட்டுமே 20,000 ரூபாய்க்கு மேல் ஆனது. இதைத் தவிர டிரைவர் சம்பளம், கிளீனர் சம்பளம், இ எம் ஐ என மாசம் காருக்கே 50, 000 ரூபாய் செலவு ஆனது. அமேஸ் வைத்திருந்த போது இன்னொரு நண்பரும் நானு ஷேரிங்கில் வந்தோம். மற்ற செலவுகள் இல்லை. இ எம் ஐ இல்லை.  காரை விற்கலாம் என்றால் வாங்க ஆள் இல்லை. 12 லட்சம் ரூபாய் செலவு செய்த காரை 7 லட்சத்திற்கும், 8 லட்சத்திற்கும் கேட்க ஆரம்பித்தார்கள்.

சிலர் அட்வான்ஸ் கொடுத்து, அடுத்த நாளே திரும்ப பெற்றுக்கொண்டார்கள். காரை டிசம்பருக்குள் விற்கவில்லை என்றால் இன்னும் விலை குறையும் என பயமுறுத்த ஆரம்பித்தார்கள். காரை வைத்திருந்தால் செலவு அதிகரித்து கொண்டே சென்றது. ஒரு வழியாக காரை விற்றுவிட்டேன். மூன்றே மாதங்களில், எடுத்த ஒரு தவறா ன ஒரு முடிவால், கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் நஷ்டம். இப்பொழுது ஜாதகம், ஜோசியம் எல்லாம் உண்மையோ என சிந்திக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இத்தனை மனக்குழப்பம் என் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை. மற்றவர்கள் மன உளைச்சல் என்று சொன்னால் அவர்களை கிண்டலடிப்பேன். அதனுடைய உண்மையான அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது. வேறு எதிலும் மனம் லயிக்காததால் நிறைய சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 2018ல் ரிலிஸான அனைத்து படங்களையும் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன்.

கோயிலுக்கு செல்லவும் மனம் விரும்பவில்லை. ஒரு காலத்தில் கோயிலே கதி என்று கிடந்தேன். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. ஆண்வன் என்று ஒருவன் இருக்கிறானா என சந்தேகமாக இருக்கிறது.

ஊருக்கே அறிவுரை சொன்ன நான், இப்பொழுது எனக்கு மற்றவர்கள் அறிவுரைகள் சொல்வது போல் ஆகிவிட்டது. இப்படி எழுதுவதால் வாழ்க்கை படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று அர்த்தம் இல்லை. மனம் அமைதியாக இல்லை. எனக்கு என்ன தேவை/ என்ன நடந்தால் மனம் சந்தோசப்படும்?

நண்பர் ஒருவரிடம் விவாத்திக்கொண்டிருந்த போது அவர் இப்படி சொன்னார்?

‘உங்களை யாரும் சந்தோசப்படுத்த முடியாது’

‘உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்கே தெரியவில்லை’

‘என்ன நடந்தால் மனம் சந்தோசப்படும் என்று நீங்கள்தான் கண்டறிய வேண்டும்’

என்று ஆன்மீகமாக பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியாதா என்ன? ஆனால் அதுதான் நடக்காதே!

2019 ஆவது நன்றாக இருக்கும் என்று என் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தேன். 2019ம் மிதுன ராசிக்கு கேவலமாகத்தான் இருக்கும் போல.

எது எப்படியோ 2018 போல அவ்வளவு மோசமாக 2019 இருக்காது என நம்புகிறேன்.

எரிச்சலுடன் 2018ஐ வழி அனுப்பி வைக்கிறேன்.